Published : 07 Dec 2022 10:14 AM
Last Updated : 07 Dec 2022 10:14 AM

FIFA WC 2022 | ரொனால்டோ சுயநலவாதியா? - ஆட்டத்திறன் மங்கி ‘நீக்கம்’ ஆனதன் பின்னணி

ரொனால்டோ

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி - 16 ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்து அணியை பின்னி பெடலெடுத்து 6-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்று காலிறுதிக்கு அதிரடியாக நுழைந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பதை விட, அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டனர் என்பதே உண்மை. இவருக்குப் பதிலாக ஆடிய 21 வயது ரேமோஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்து ரொனால்டோ ‘ட்ராப்’ சரியே என்பதை நியாயப்படுத்தியுள்ளார்.

ஆனால், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. மெஸ்ஸி, நெய்மர், மோட்ரிச் போன்ற பெரிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ரொனால்டோவை நாக்-அவுட் போட்டியில் ட்ராப் செய்யலாமா என்ற கேள்வி அனைவருக்கும் ஏற்படுதுவது இயல்பே. அன்று தென் கொரியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் தோற்றபோது தென் கொரியாவின் முதல் கோல் எப்படி வந்தது எனில் கோல் போஸ்ட்டுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்று அவரது முதுகில் பட்டு தென் கொரிய வீரரிடம் பந்து செல்ல அவர் கோலாக மாற்றினார். எனவே, ரொனால்டோ ஆட்டத்தில் பழைய வேகம் இல்லை, மிகவும் சுயநலமாக ஆடுகிறார், அணியில் மற்ற வீரர்களின் பங்கை சரியாக அவர் பயன்படுத்துவதில்லை, மற்றவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ரொனால்டோ மீது எழுந்தது உண்மையே.

ஏற்கெனவே லீக் போட்டிகளில் யுவண்டஸ் அணிக்கு ஆடியபோது அங்கும் ரொனால்டோ மீது அதிருப்தி கொண்ட மேலாளர் அவரை உட்கார வைத்தது நடந்ததுண்டு. சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் இதேபோல் அவரை பெஞ்ச்சில் அமர வைத்தது. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஆடும்போது இருமுறை ஆட்டத்திலிருந்து முன்னமேயே வெளியேறினார் ரொனால்டோ. அன்று தென் கொரியாவுக்கு எதிராக அவரை பெஞ்சுக்கு அழைத்து பதிலி வீரரை அனுப்பியபோது கால்களை தரையில் மிதித்து நடந்தபடி தன் கோபத்தைக் காட்டினார். அப்போதுதான் தென் கொரிய வீரர் அவரை ‘பேசாமல் போ’ என்று திட்டியதும் நடந்தது.

நேற்று ரொனால்டோவை ட்ராப் செய்து விட்டார் போர்ச்சுகல் பயிற்சியாளார் சாண்ட்டோஸ். ரொனால்டோவின் ரோல் என்ன என்பதை திட்டவட்டமாக வரையறை செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆகவே ரொனால்டோ ஆட்டத்தின் மீது கடும் அதிருப்தி இருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்.

யூரோ 2008 கால்பந்து கோப்பைக்குப் பிறகு இப்போதுதான் ஒரு மேஜர் தொடரில் ரொனால்டோ ஆரம்ப லெவனில் இல்லாமல் போன தருணமாகும். 74-வது நிமிடத்தில் யாரோ பதிலி வீரரை இறக்குவது போல் நேற்று சுவிட்சர்லாந்துக்கு எதிராக இறக்கப்பட்டார் ரொனால்டோ. அதுவும் அவர் அடித்த கோல் க்ளீனாக ஆஃப் சைடு என்று கோலும் மறுக்கப்பட்டது. அதோடு ரொனால்டோ நேற்று இறங்கும்போது போர்ச்சுகல் ரேமோஸின் அதியற்புத ஹாட்ரிக் கோல்களுடன் 5-1 என்று முன்னிலை வகித்தது. அப்போது போய் ரொனால்டோ போன்ற பெரிய வீரரை இறக்குவது அவரை இழிவுபடுத்தும் செயல் என்று ரொன்லாடோ ரசிகர்கள் கோபாவேசப்படுகின்றனர்.

சரி பயிற்சியாளர் சாண்டோஸ் தன் செயலை எப்படி நியாயப்படுத்துகிறார்? “நான் ரொனால்டோவுடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்திருக்கிறேன். அவரை அவரது 19 வயது முதலே நான் அறிந்தவன். மேனேஜர் - வீரர் என்ற உறவில் மனிதார்த்த காரணிகளை இருவருமே புரிந்து கொண்டிருக்கிறோம். எனவே போட்டி, களம் என்பது வேறு விஷயம்” என்றார். சாண்டோஸ் ரொனால்டோவின் ஆட்டம் பற்றி அடக்கி வாசிக்க ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் சகாவும் போர்ச்சுகல் சக வீரருமான புரூனோ பெர்னாண்டஸ் வேறு விதமாகக் கூறுகிறார்:

“எந்த ஒரு வீரரும் தன்னை பெஞ்சில் அமரவைப்பதை விரும்ப மாட்டார்கள். நிச்சயம் கிறிஸ்டியானோ அதிருப்தியடைந்திருப்பார். என்னை பெஞ்ச்சில் அமர வைத்தால் நான் கடும் கோபமடைவேன். கிறிஸ்டியானோ பெஞ்சில் அமரவைக்கப்பட்டது பற்றி யாரும் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். ரொனால்டோ ஆடினால் போர்ச்சுகல் வெற்றி பெறுகிறது என்பதில் திருப்தி அடைந்து விடுகின்றனர். மாறாக ரொனால்டோ ஆடி டீம் தோற்றாலும் பேச்சு எழும். கால்பந்தில் மட்டுமல்ல விளையாட்டு என்பதிலேயே கிறிஸ்டியானோவுக்கு கிடைத்த பேரும் புகழும் வேறு ஒருவருக்கும் கிடைத்ததில்லை.

ஆனால், ரொனால்டோவிடம் அவரது ஆட்டம் பற்றிய உண்மையை யாரும் கூற மறுக்கின்றார்கள், அவரது உண்மையான ரசிகர்கள் உட்பட மேலாளர் என்று யாரும் உண்மையைக் கூறுவதில்லை. மான்செஸ்டர் மேலாளர் அந்த உண்மையை ரொனால்டோவுக்கு சுட்டிக்காட்டினார். ரொனால்டோவும் உண்மையைச் சந்திக்க வேண்டும். நீண்ட நாளைய அனைத்து கால சிறந்த வீரர்தான் ரொனால்டோ அதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட தருணத்தில் குறுகிய கால ஆட்டத்தில் அவர் பங்களிப்பு போதாது.

யுவண்டெஸ் மேலாளர் இதைத்தான் ரொனால்டோவுக்குச் செய்தார். மான்செஸ்டர் மேலாளரும் இதைச் செய்தார். இப்போது போர்ச்சுகல் மேலாளரும் அவரை உட்கார வைத்துள்ளார். இவர்கள் மூவருமே தவறு என்று வாதிட முடியாது. ரொனால்டோவின் ‘ஒன்றே குறி’ என்ற மனநிலை அவருக்கு புகழைப் பெற்றுத்தந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அவரது மன உறுதி கிரேட். அதிக கோல்களை அடித்துள்ளார், சாதனைகளை முறியடித்தார். மெஸ்ஸியுடன் போட்டியிடுகிறார் எல்லாம் சரி. ஆனால், ஒரு கட்டத்தில் அவர் அணியின் சக வீரர்கள் பற்றி கொஞ்சமாவது யோசிக்க வேண்டும்.

மான்செஸ்ட்ர் யுனைடட் அணிக்கு ஆடும்போது இருமுறை ஆட்டத்திலிருந்து சடுதியில் வெளியேறியது, அன்று தென் கொரியாவுக்கு எதிராக கால்களை அடித்து மிதித்து கோபத்தை வெளிப்படுத்தியது அவரைப் போன்ற பெரிய வீரருக்கு ஒவ்வாதது. பெர்னார்டோ சில்வாவும் நானும் இன்னும் ஆடவே இல்லை. அப்படியிருக்கும் போது தனக்குப் பதிலாக வேறொரு வீரரை இறக்குவது பற்றி ரொனால்டோ கோபப்படுவது கூடாது.

ரொனால்டோ தன்னுடைய தொழில்பூர்வ காலம் முடிகிறது என்பதை ஏற்க மறுக்கிறார். அதற்கான நேரம் வந்துவிட்டது. மாறாக மொராக்கோவிடம் ஸ்பெயின் கோலே அடிக்காமல் தோற்ற மேட்சில் ஸ்பெயின் பக்கம் ரோனால்டோ ஆடியிருந்தால் அதாவது கடைசி அரைமணி நேரம் ரொனால்டோ ஸ்பெயினுக்கு ஆடியிருந்தால் நிச்சயம் வெற்றி பெறச் செய்திருப்பார்” என்று பாராட்டும் விமர்சனமும் கலந்த தொனியில் கூறினார் பெர்னாண்டஸ்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் கால்பந்து ஸ்பெஷலிஸ்ட் ஜேமி கேரகர் ரொனால்டோ பற்றிக் கூறும்போது, “ரொனால்டோவின் கோபமான ரியாக்‌ஷனுக்காக அவரை ட்ராப் செய்யவில்லை. மாறாக, அவரது ஆட்டத்திறன் சரியாக இல்லை என்பதனாலேயே ட்ராப் செய்யப்பட்டார்” என்று அறுதியிட்டுக் கூறினார்.

எது எப்படியோ, ரொனால்டோ போன்ற சூப்பர் ஸ்டார்களை விட ரேமோஸ் போன்ற இளம் வீரர் தங்கள் நோக்கத்தை மிகத் துல்லியமாக நிறைவேற்றுவார் என்று போர்ச்சுகல் அணி நிர்வாகம் நினைத்தது. நினைத்துச் செயல்பட்டதில் வெற்றியும் பெற்று விட்டது. இனி ரொனால்டோவின் எதிர்காலம்? ஏனெனில், போர்ச்சுகள் மீடியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கருத்து தெரிவித்தவர்களில் 70% பேர் ரொனால்டோவை நீக்க வேண்டும் என்றே கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x