Published : 28 Jul 2014 03:43 PM
Last Updated : 28 Jul 2014 03:43 PM

வெற்றி பெற்ற பிறகும் கேப்டன்சியில் தடுமாறும் தோனி

ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.

கேரி பாலன்ஸ் 104 ரன்களுடனும், இயன் பெல் 16 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கும் முன் முதல் நாள் ஆட்டத்தில் தோனி கேப்டன்சியின் சில வினோதங்களைப் பார்ப்போம்.

இஷாந்த் சர்மா காயத்தினால் விளையாடவில்லை என்ற போதே தோனி நிச்சயம் தனது பாதுகாப்பு உத்திகளுக்கே செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கக் கூடும். அதுதான் நடந்தது.

டெஸ்ட் போட்டியை ஆட்டம் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அலுப்பூட்டுவதாக மாற்றி விடுகிறார் தோனி.

அணித் தேர்வில் மீண்டு தவறு செய்தார் தோனி. அஸ்வினைத் தேர்வு செய்யாதது பெரிய தவறு என்பதை அவர் போகப்போக உணர்வார் என்று எதிர்பார்க்கலாம்.

அவர் பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதுவும் ரோகித் சர்மா ஆஃப் ஸ்பின் வீச வந்தவுடன் புத்தக வாசிப்பின் மீது அவரது கவனம் சற்றே தீவிரமானதாகவே இருந்தது.

இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக தேர்வு செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் மற்றவர்கள் போல் ஐபிஎல் ஆடிவிட்டு இந்திய அணியில் இடம்பெற்றவர் அல்ல. சுமார் 4,5 ஆண்டுகளாக ரஞ்சி போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் பட்டியலில் இடம்பெற்று கிட்டத் தட்ட இந்திய அணியில் தான் இடம்பெறுவதற்கான தார்மீக உரிமையை குரல் கொடுத்துப் பெற்றுள்ளவர்.

ஆனால். நேற்று என்னவாயிற்று? குக் 15 ரன்களில் இருந்தபோது பங்கஜ் சிங் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கர் குக் மட்டையின் விளிம்பில் பட்டு 3வது ஸ்லிப்பில் ஜடேஜாவிடம் செல்ல எளிதான அந்தக் கேட்சை அவர் கோட்டை விட்டார். 300 விக்கெட்டுகளை அவர் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் வீழ்த்திய பிறகு டெஸ்ட் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் வந்தவுடன் தவறான ஸ்லிப் ஃபீல்டர் தேர்வினால் முதல் விக்கெட்டைத் தவற விட்டார். மேலும் குக் அதன்பிறகு பலமாகச் சென்றார்.

தொடர்ந்து ஸ்லிப் திசையில் ஃபீல்டர்களை மாற்றிக்கொண்டே இருக்கும் தோனியின் கள உத்தியும் பங்கஜ் சிங்கிற்கு கிடைக்க வேண்டிய முதல் விக்கெட்டை அநியாயமாகப் பறித்தது.

குக்கிற்கு பேடில் பல பந்துகள் போடப்பட சில பவுண்டரிகளை அடித்தார். உடனே பவுலரை அழைத்து லெக் திசையில் வீச வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும் கேப்டன் தோனி. உடனே கல்லியில் இருந்த பீல்டரைத் தூக்கிவிட்டார். உடனேயே மொகமட் ஷமியின் பந்தில் பட்ட எட்ஜ் ஒன்று கல்லி வழியாக கேட்ச் பிடிக்கக் கூடிய உயரத்தில் பவுண்டரி பறந்தது.

ஸ்லிப்பில் ஃபீல்டர்களை நிறுத்துவதிலும் தவறு செய்தார் தோனி. விக்கெட் கீப்பரை ஒட்டி முதல் ஸ்லிப் இருப்பதுதான் வழக்கம். ஆனால் தோனி தொடர்ந்து விசித்திரமான முறையில் முதல் ஸ்லிப்பை தனக்கு சற்றே இடைவெளி விட்டு நிறுத்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். இதனை பயிற்சியாளர் பிளெட்சர் முதல் ஒருவரும் கண்டிப்பதேயில்லை. சில கேட்ச்கள் முதல் ஸ்லிப்பிற்கும் விக்கெட் கீப்பருக்கும் இடையே பல டெஸ்ட் போட்டிகளில் சென்றிருக்கிறது. ஆனால் தோனி திருத்திக் கொள்ளவில்லை.

நேற்று ஜடேஜாவை அவர் பந்து வீசச் செய்த விதமும் செட் செய்த ஃபீல்டிங் உத்தியும் விநோததிலும் விநோதம். இடது கை ஸ்பின்னர் என்பதால் முதலில் ஃபாவர்ட் ஷாட் லெக்கை நிறுத்துவதே சிறந்தது. ஆனால் அவரோ லெக் ஸ்லிப், மற்றும் ஒரு ஸ்லிப் என்ற உத்தியைத் தொடர்ந்து கையாண்டு வருகிறார்,நேற்றும் அப்படித்தான் செய்தார். ஜடேஜாவை லெக் திசையில் வீசச் செய்தார். இதனால் ஒரு பயனும் இல்லை. எரிச்சலூட்டக்கூடிய விதத்தில் சுலபமாக சிங்கிள்களை குக்கும், பாலன்ஸும் எடுத்தவண்ணம் இருந்தனர். விக்கெட் எடுக்கும் முயற்சி சிறிதும் இல்லை. நடுவருக்கும் ஸ்டம்பிற்கு இடையே புகுந்து வந்து வீசும் டயக்னல் முறைப் பந்து வீச்சே இடது கை வீச்சாளர்கள் காலங்காலமாக கடைபிடிக்கும் ஒரு சிறந்த உத்தி. ஆனால் ஜடேஜா முழுக்க முழுக்க ஓவர் த ஸ்டம்பிலேயே வீசினார் பந்தின் திசையும் அலுப்பூட்டும் விதமாக ஒரே மாதிரியாகவே இருந்தது.

டயக்னல் முறையில் வீசினால் பந்தின் கோணம், ஃபிளைட், மற்றும் ஃபார்வர்ட் ஷாட்லெக், சிலி மிட் ஆஃபை வைத்து பேட்ஸ்மென்களை மிரட்டலாம். இந்தப் பந்து வீச்சுமுறையில், இந்த நெருக்கமான பீல்டிங் அமைப்பை முறியடிக்க பேட்ஸ்மென்கள் மேலேறி வந்து ஆடியேயாகவேண்டும், அப்போது தவறுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது. இங்கிலாந்து வீரர்கள் அவ்வாறு தவறுகளைச் செய்பவர்களே. ஆனால் தோனியின் கள வியூகத்தில் அவரால் ஜடேஜாவை வைத்துக் கொண்டு முரளிதரன் விக்கெட்டைக் கூட வீழ்த்தி விட முடியாது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மேலும், இயன் சாப்பல் கூறுவது போல், ஒரு முனையில் டைட் செய்து இன்னொரு முனையில் விக்கெட் எடுக்கும் முயற்சி என்று தோனி முடிவெடுப்பது அறிவு பூர்வமானதல்ல. இது டெஸ்ட் போட்டி 2 முனைகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தவே பந்துவீசப்படவேண்டும் கள உத்திகள் வகுக்கப்படவேண்டும்.

தோனிக்கு ரஞ்சி போட்டிகளில் கேப்டன்சி செய்து பழக்கமில்லை. செய்ததில்லை. ஏதோவொரு ரஞ்சி அணிக்கு தோனி கேப்டனாக இருந்து வாசிம் ஜாஃபர், புஜாரா உள்ளிட்ட 200, 300 என்று அடிக்கும் வீரர்களுக்கு எதிராக உத்திகளை வகுக்க மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தால் இங்கு வந்து திணற வேண்டியிருக்காது என்பதோடு அடிப்படைத் தவறுகளையாவது செய்யாமல் இருப்பார்.

தோனி டெஸ்ட் கேப்டன்சிக்குத் திறமையற்றவர், குறிப்பாக அயல்நாடுகளில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். ஒருவரது கேப்டன்சியில் அதிகம் வெற்றிகளைக் குவித்திருப்பதற்கும் அவரது திறமைக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியமில்லை. இன்று அவர் நேற்றைப் போல மந்தமாக கேப்டன்சி செய்தால் இங்கிலாந்தின் நீண்ட பேட்டிங் வரிசைக்கு எதிராக நிச்சயம் திக்கித் திணறுவார் என்பது உறுதி.

இதனால் இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடையும் வாய்ப்பே அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x