Published : 03 Dec 2022 11:11 PM
Last Updated : 03 Dec 2022 11:11 PM
சாவோ பாவ்லோ: கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவன் பீலேவின் உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும் அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 81.
கடந்த ஆண்டு அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார் பீலே. கடந்த சில நாட்களாக, அவரின் உடல்நிலை பலவீனமடைந்தது. இதனால் செவ்வாய் கிழமை சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், தொடர்ந்து அவரின் உடல்நலம் தேறாமல் இருந்து வந்தது. தற்போது, அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 'பலியேட்டிவ் கேர் எனப்படும் இறுதி கட்ட சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சையானது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களுக்கு அளிக்கப்படும். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் கீமோதெரபி சிகிச்சை நிறுத்தப்பட்டு, வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் நோய்த்தடுப்பு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கால்பந்து உலகம் சோகத்தில் மூழ்கி உள்ளது.
1940-ம் ஆண்டு பிறந்த பீலே பிரேசில் நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்ட உலகின் மாபெரும் ஜாம்பவனாக இன்றும் விளங்குபவர். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட கோல்கள் மட்டுமின்றி ஹாட்ரிக் கோல்களில் உலக சாதனையும் படைத்துள்ளார்.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமையை பிரேசில் ஜாம்பவான் பீலே பெற்றுள்ளார். பீலே தனது முதல் உலகக் கோப்பையை 1958-ல் ஸ்வீடனில் வென்றார், இது பிரேசிலின் முதல் வெற்றி கோப்பையாகும். பின்னர் 1962-ல் பிரேசில் வெற்றிபெற உதவினார், இறுதியாக 1970-ல் தனது அணியை வெற்றி மேடைக்கு அழைத்துச் சென்றார், அதுவே அவரது இறுதிப் போட்டியாகவும் அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT