Published : 02 Dec 2022 04:22 PM
Last Updated : 02 Dec 2022 04:22 PM
மும்பை: எதிர்வரும் ஐபிஎல் சீசன் முதல் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் (tactical substitute) எனும் புதிய விதி அமலாகும் என்பதை ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பயன்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் (Impact Player) விதியை போலவே இது இயங்கும் எனத் தெரிகிறது. உள்ளூர் அளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட்டில் இந்தப் புதிய விதியை அறிமுகம் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பரபரப்பாக நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தப் புதிய விதிமுறை மற்றொரு பரிமாணத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் அறிவிக்கப்படும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள ஒரு வீரருக்கு மாற்றாக சப்ஸ்டிட்டியூட் வீரரை களம் இறக்கலாம். அப்படி களம் காணும் வீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யலாம். அதற்கு இந்தப் புதிய விதி வழிவகை செய்கிறது. வழக்கமாக சப்ஸ்டிட்டியூட் வீரர்கள் ஃபீல்டிங் மட்டும்தான் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விதி: டாஸின்போது அறிவிக்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியல் உடன் நான்கு சப்ஸ்டிட்டியூட் வீரர்களின் பெயரையும் ஐபிஎல் அணிகள் அறிவிக்க வேண்டும். அந்த நால்வரில் யாரேனும் ஒருவரை அணிகள் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் வீரராக தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு இன்னிங்ஸின் 14-வது ஓவர் முடிவுக்குள் இந்த விதியின் கீழ் அணிகள் மாற்று வீரர் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிகிறது. அப்போது, ஆடும் லெவனில் உள்ள ஒரு வீரரை விடுவிக்க வேண்டும். இதன் மூலம் அணிகள் கூடுதலாக ஒரு பவுலர் அல்லது பேட்ஸ்மேனை பயன்படுத்திக் கொள்ள முடியும். விடுவிக்கப்பட்ட வீரர் மீண்டும் களம் காண முடியாது.
டி20 கிரிக்கெட்டில் இந்தப் புதிய விதி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடிய டி20 போட்டியில் தலையில் காயம்பட்ட ஜடேஜாவுக்கு மாற்றாக சஹால், கன்கஷன் சப்ஸ்டிட்டியூட்டாக விளையாடி உள்ளார். அந்தப் போட்டியில் ஜடேஜா 44 ரன்களும், சஹால் 3 விக்கெட்டுளையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற சம்பவங்கள் இனி ஐபிஎல் கிரிக்கெட்டிலும் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT