Published : 01 Dec 2022 03:24 PM
Last Updated : 01 Dec 2022 03:24 PM
கத்தார் உலகக் கோப்பைப் போட்டிகள் இறுதி-16 என்ற காலிறுதிக்கு முந்தையச் சுற்று நோக்கிய சூடுபிடிக்கும் விறுவிறு நிலையை எட்டியுள்ளது. அதுவும் அர்ஜென்டினா நேற்று போலந்தை 2-0 என்று வீழ்த்தியதையடுத்து இறுதி-16 சுற்றுக்கு ஒருவழியாகத் தகுதி பெற்று உலக மெஸ்ஸி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆனால், போலந்து அணியும் இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்தக் கதையின் நாயகன் போலந்து அல்ல... சவுதி அரேபியா. மெக்சிகோவுக்கு எதிராக சவுதி வீரர் சலீ அல் தவ்சாரி அடித்த அந்த 95-வது நிமிட கோல்தான் போலந்தை அடுத்த சுற்றுக்கு தகுதி பெறச் செய்தது.
போலந்து அணி தோற்றாலும் கோல் வித்தியாசம் என்ற பத்தியில் ‘0’ என்று காட்டியதால் பிழைத்தனர். அதுவும் நேற்று நடைபெற்ற இதே குரூப் மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ அணியும் சவுதி அரேபியா அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் மெக்சிகோவின் ஹென்றி மார்ட்டின் 47-வது நிமிடத்தில் சீசர் மாண்ட்டேஸின் கார்னர் பிளிக்கை கோலுக்கு அருகில் நின்று அற்புதமாக வலைக்குள் செலுத்தி 1-0 என்று மெக்சிகோவை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார்.
முதல் கோலுக்குப் பிறகு 5 நிமிடங்களில் 52-வது நிமிடத்தில் 35 அடி தூர ஃப்ரீ கிக்கில் மெக்சிகோவின் நட்சத்திர வீரர் லூயிஸ் சாவேஸ் பந்தை வலைக்குள் அற்புதமாகச் செலுத்தி கோலாக்க 2-0 என்று முன்னிலைப் பெற்ற போது மேலும் கோலை அடித்தாலோ அல்லது சவுதி அரேபியாவை கோல் அடிக்கவிடாமல் தடுத்திருந்தாலோ மெக்சிகோ அணி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கும், போலந்து அணி துணிமணிகளை பேக் செய்து கொண்டு விமானம் ஏறியிருக்க வேண்டியதுதான். குறிப்பாக, மறக்க முடியாத லூயிஸ் சாவேஸின் கண்கொள்ளாக் காட்சியான அந்த 35 அடி தூர ஃப்ரீ கிக் கோலின் நினைவுடன் மெக்சிகோ அணிதான் இப்போது விமானமேறிவிட்டது.
3-வது கோலை அடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வேகத்துடன் ஆடியது மெக்சிகோ. பலமுறை கோல் அடித்து விடும் நிலையை எட்டியது. ஹிரிவிங் லோசானோ ஒரு கோலையும் அடித்து விட்டார். ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக ஆஃப் சைடு ஆனது. அடுத்து வந்த வாய்ப்பை மார்ட்டின் கோல் கீப்பரை மட்டுமே தாண்டி அடித்தால் போதும் என்ற நிலையில் கோல் போஸ்ட் மேல் கம்பியைத் தாண்டி அடித்து வீணடித்தார். உரியல் ஆண்டவுனா கோல் அடிக்க வேண்டிய தருணத்தில் ஆஃப் சைடு என்று தடுக்கப்பட்டார். கடைசியில் 7 நிமிடங்கள் கூடுதலாகக் கிடைத்த போதும் மெக்சிகோ முயற்சிகள் வீணானது. ஆனால் சவுதி அரேபியாவின் தவ்சாரி 95-வது நிமிடத்தில் அடித்த கோல், மெக்சிகோவுக்கான விமான வழிகாட்டியானது.
1990-க்குப் பிறகு மெக்சிகோ முதல் முறையாக நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது. அர்ஜென்டினா அணி 2-0 என்று வெற்றி பெற்று தகுதி பெற்றது என்றால், போலந்து அணி கோல் வித்தியாசத்தினால் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆனால், சவுதி அரேபியாவின் இந்த 95-வது நிமிட கோல் இல்லையெனில், போலந்து இந்நேரம் விமானம் ஏறி ஊரைப் பார்க்கப் போயிருக்கும்.
இப்போது வலுவான பிரான்ஸ் அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய நேரம் 8:30 மணிக்கு போலந்து அணி ஆடுகிறது. இப்போது இரு அணிகளுக்குமே இது மிகவும் சவாலான ஆட்டமாகவே இருக்கும். இதே நாள் நள்ளிரவில் மற்றொரு முக்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து - செனகல் அணி 12:30 மணிக்கு மோதுகின்றன.
இதற்கு முதல் நாள் சனிக்கிழமையன்று இரவு 8:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து - அமெரிக்கா அணிகளும் நள்ளிரவு 12.30 மணி ஆட்டத்தில் அர்ஜென்டினா - ஆஸ்திரேலியா அணிகளும் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT