Published : 01 Dec 2022 03:01 AM
Last Updated : 01 Dec 2022 03:01 AM
தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. போலந்துக்கு எதிரான இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி இருந்தது அர்ஜென்டினா. இதன் மூலம் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
974 மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக அடுத்த சுற்றில் விளையாடலாம் என்ற நெருக்கடியை பொருட்படுத்தாமல் மிகவும் அபாரமாக விளையாடியது அர்ஜென்டினா. முதல் பாதியில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோல் பதிவு செய்ய முயன்றுக் கொண்டே இருந்தது. அந்த முயற்சிகளை போலந்து வீரர்கள் தடுத்தனர். இதில் மெஸ்ஸி மிஸ் செய்த பெனால்டி வாய்ப்பும் அடங்கும்.
முதல் பாதி ஆட்ட நேர முடிவின் போது இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதியில் 46 மற்றும் 67-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை பதிவு செய்தது அர்ஜென்டினா. அதில் முதல் கோலை பதிவு செய்ததும் இரண்டாவது கோலை பதிவு செய்வதில் தீவிரம் காட்டி இருந்தது அந்த அணி. இந்த போட்டியில் மெஸ்ஸி கோல் பதிவு செய்யவில்லை. மெக் அலிஸ்டர் மற்றும் அல்வராஸ் தலா ஒரு கோல் பதிவு செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் குரூப் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது அர்ஜென்டினா. இரண்டாவது இடத்தை போலந்து பிடித்துள்ளது. அதனால் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதே பிரிவில் மெக்சிக்கோ மற்றும் சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. அதனால் அந்த இரு அணிகளும் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன. ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT