Published : 31 Dec 2016 03:58 PM
Last Updated : 31 Dec 2016 03:58 PM

வில்லியம்சன், நீல் புரூம் அபாரம்: வங்கதேசத்தை ‘கிளீன் ஸ்வீப்’ செய்த நியூஸிலாந்து

நெல்சனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மஷ்ரபே மோர்டசா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் 102/1 என்ற நிலையிலிருந்து 50 ஓவர்களில் 236/9 என்று மட்டுப்பட்டது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் (95 நாட் அவுட்), நீல் புரூம் (97) பங்களிக்க 41.2 ஓவர்களில் 2 விகெட்டுகளை மட்டுமே இழந்து 239 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து 3-0 என்று தொடரைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகான கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

மந்தமான பிட்சில் முதலில் பேட் செய்த வங்கதேசம் தமிம் இக்பால் (59), இம்ருல் கயேஸ் (44) இணைந்து 21 ஓவர்களில் 102 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 44 ரன்களில் கயேஸ், நீல் புரூமின் அருமையான ஒரு கை கேட்சிற்கு வெளியேறினார். தமிம் இக்பாலுக்க்கும் 31-வது ஓவரில் புரூம்தான் கேட்ச் பிடித்தார். 88 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 59 ரன்கள் எடுத்த தமிம் இக்பால் டைட் பவுலிங்கில் வழக்கமான அனாயாச ஆட்டத்தை இழந்தார், அவுட் ஆவதற்கு முன்பாக 10 ஒவர்கள் அவரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை அந்த வெறுப்பில்தான் அவுட் ஆனார்.

மேலும் இம்ருல் ஆட்டமிழந்த பிறகு 9 ஓவர்களில் 38 ரன்களையே எடுக்க முடிந்தது. இதில் சபீர் ரஹ்மான், மஹ்முதுல்லா, தமிம் இக்பால் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். ஷாகிப் அல் ஹசன் 18 ரன்களில் ரன் அவுட் ஆக அதே ஓவரில் மொசாடெக் ஹுசைனும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார், ஆனால் விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்தார், இதில் ஹென்றி வீசிய கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்ஸ், பவுண்டரி அடங்கும். ஆனால் ஹென்றியின் நல்ல டைவிங் கேட்சுக்கு ஆட்டமிழந்தார் நுருல் ஹசன். வங்கதேசம் கடைசி 7 விக்கெட்டுகளை 95 ரன்களுக்கு இழந்து 236 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி, சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் சவுதி, ஜீதன் படேல், நீஷம், வில்லியம்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலக்கைத் துரத்திய நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில் 6 ரன்கள் எடுத்து சதைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். டாம் லேதம் 4 ரன்களில் முஸ்தபிசுர் ரஹ்மானிடம் எல்.பி.ஆனார். அதன் பிறகு வில்லியம்சன், நீல் புரூம் இணைந்து 179 ரன்களைச் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். 97 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 97 ரன்கள் அடித்த நீல் புரூமும் முஸ்தபிசுர் ரஹ்மானிடம் அவுட் ஆனார். கடைசியில் ஒரு சிக்சர் அடித்தால் சதம், வெற்றி என்ற நிலையில் 94 ரன்களில் இருந்த வில்லியம்சன் சிங்கிள் எடுக்க ஜேம்ஸ் நீஷம் (28) வெற்றி ரன்னை எடுத்தார். வங்கதேசம் 8 பவுலர்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x