Published : 28 Nov 2022 10:52 AM
Last Updated : 28 Nov 2022 10:52 AM
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை 2022 கால்பந்து தொடரில் வேல்ஸ் அணியை 2-0 என்று ஈரான் வீழ்த்தியதைத் தொடர்ந்து முன்னாள் ஜெர்மனி அணி வீரரும் இப்போதைய ஃபிபா டெக்னிக்கல் ஆய்வுக்குழுவில் உள்ளவருமான ஜர்கன் கிளின்ஸ்மேன், ஈரான் அணியின் கால்பந்து பற்றியும் ஈரானின் கலாச்சாரம் பற்றியும் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால் ஈரானின் கால்பந்து முரட்டுத்தனமானது என்றும் ஏகப்பட்ட ஃபவுல்களைச் செய்தனர் என்றும் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் இல்லாத அணி என்றும் கிளின்ஸ்மேன் பிபிசி தொலைக்காட்சியில் ஈரானைக் கடுமையாக சாடினார்.
கிளின்ஸ்மேன் கூறும்போது, “இதுதான் அவர்களது கலாச்சாரம். இதனால்தான் ஈரான் பயிற்சியாளர் கார்லோஸ் குவிரோஸ் அந்த தேசிய அணிக்கு மிகவும் பொருத்தமானவராகத் தெரிந்திருக்கிறார்.
தென் அமெரிக்காவில் குவிரோஸ் ஒரு பெருந்தோல்வி, கொலம்பியா அணி இவரது பயிற்சியில்தான் தகுதி பெற முடியாமல் போனது. எகிப்து அணிக்கும் பயிற்சி அளித்தார், அந்த அணியும் சீனிலேயே இல்லை. இப்போது இந்த உலகக் கோப்பைக்கு சற்று முன்புதான் ஈரான் பணியை தன் கையில் எடுத்துக் கொண்டார். இங்குதான் அவர் நீண்ட காலம் பணியாற்றி வந்தார்.
இதிலிருந்தே இவரது சூட்சமம் என்னவென்று தெரிய வேண்டாமா? கொலம்பியா, எகிப்து தகுதி பெறவில்லை, ஈரான் தகுதி பெறுகிறது என்பது தற்செயல் நிகழ்வல்ல. இதுதான் அவர்களது கலாச்சாரத்தின் அங்கம். இப்படித்தான் அவர்கள் விளையாடுவார்கள். ஆட்டத்தின் ரெஃப்ரீயை ‘வொர்க்’ செய்து விடுவார்கள். எப்போதும் நம் முகத்திற்கு எதிராகவும் காதுகளிலும் வந்து கூச்சல் போட்டபடியே இருப்பார்கள், இதுதான் ஈரான் அணியின் கலாச்சாரம்” என்று கடுமையாகச் சாடினார்.
இதற்குப் பதில் அளித்த ஈரான் பயிற்சியாளர் கார்லோஸ் குவிரோஸ், “என்னைத் தனிப்பட்ட முறையில் அறியாமலேயே, என்னைப் பற்றி எதுவும் தெரியாமலேயே என்னைப்பற்றி இப்படி கருத்துக் கூற முடிகிறது என்றால் இது மேற்கத்திய திமிரின் வெளிப்பாடு. களத்தில் நீங்கள் செய்யும் வேலையை நான் மதிக்கிறேன் என்பது ஒருபுறம் என்றாலும் ஈரான் பண்பாடு, ஈரான் கால்பந்து கலாச்சாரம் மற்றும் என் வீரர்கள் பற்றிய உங்கள் கருத்து கால்பந்தாட்டத்துக்கே இழிவு சேர்ப்பதாகும்.
எங்களுடைய நேர்மையை ஒருவரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, எங்கள் அணியுடன் கலந்துரையாட உங்களை விருந்தாளியாக அழைக்கிறோம். எங்கள் ஈரான் அணியின் தேசிய முகாமுக்கு வாருங்கள். அவர்களுடன் உரையாடி ஈரான் கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஈரான் மக்கள் பற்றி தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். ஈரான் கவிஞர்கள், கலைகள், அல்ஜீப்ரா பற்றி அறிவதோடு பல்லாயிரக் கணக்கான ஆண்டு தொன்மை வாய்ந்த பெர்சிய கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் எங்கள் வீரர்கள் கால்பந்தை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஓர் அமெரிக்க/ஜெர்மானியராக நீங்களெல்லாம் எங்களை ஆதரிக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். பிபிசியில் நீங்கள் எங்கள் அணியையும் கலாச்சாரத்தையும் கால்பந்தையும் என்ன இழிவு செய்தாலும் நான் உங்கள் அளவுக்கு இறங்கி வந்து உஞ்களுடைய வேர், கலாச்சாரம், உண்மையான பின்னணி குறித்து ஒருநாளும் பேசமாட்டேன். எங்கள் குடும்பத்திற்கு உங்களை அழைக்கிறேன்.” என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
இதோடு இந்தப் பிரச்சனை முடியாமல் ஈரான் கால்பந்து கூட்டமைப்பு ஃபிஃபா இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கிளின்ஸ்மேனை ஸ்டடி குரூப்பிலிருந்து விலக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT