Published : 28 Nov 2022 10:43 AM
Last Updated : 28 Nov 2022 10:43 AM
கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் காயத்தினால் அன்று செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார். இந்த உலகக் கோப்பையில் இனி நெய்மர் ஆட்டத்தைப் பார்க்க முடியாது என்று பிரேசில் மற்றும் உலகக் கால்பந்து ரசிகர்களும் மனம் உடைந்தனர். ஆனால், இப்போது பிரேசில் பயிற்சியாளர் டீட்டே, நெய்மர் இந்த உலகக் கோப்பையில் ஆடுவார் என்று தெரிவித்து நம்பிக்கையூட்டியுள்ளார்.
பிரேசிலின் இன்னொரு நட்சத்திர வீரர் மார்க்கின்யோஸ் இது தொடர்பாகக் கூறும்போது, 24 மணிநேர உடற்கூற்றியல் சிகிச்சையை நெய்மர் மேற்கொண்டு வருவதாகவும் முழங்கால் காயத்திலிருந்து அவர் மீண்டு விடுவார் என்றும் நம்பிக்கை கூறியிருக்கிறார். இன்று சுவிட்சர்லாந்துடன் நடைபெறும் போட்டியில் ஆடுவாரா என்பது சந்தேகமே என்றாலும் இந்த உலகக் கோப்பையில் நெய்மர் மீண்டும் ஆடுவார் என்று ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 2ம் தேதியன்று கேமரூன் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் நெய்மர் தேவைப்பட்டால் ஆடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் டேனிலோவும் காயம் காரணமாக ஆட முடியாதது பிரேசில் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரேசில் மேலாளர் டீட்டே கூறும்போது, “நெய்மரும் டேனிலோவும் இந்த உலகக் கோப்பையில் ஆடுவார்கள். நான் இதை உண்மையாக நம்புகிறேன். சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இருவரையும் பயன்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
அன்று செர்பியாவுக்கு எதிராக நெய்மர் 80-வது நிமிடத்தில் திருப்பி அழைக்கப்பட்டார், ஆனால் அவர் ஆட்டத்தில் முன்பே காயமடைந்தது தெரியவந்ததால் மேலாளர் டீட்டே மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. முன்னமே நெய்மரை பெஞ்சிற்கு அழைத்திருந்தால் காயம் தீவிரமாகியிருக்காதே என்று பலரும் கருத்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகவும் பயிற்சியாளர் டீட்டே கூறும்போது, “நெய்மர் காயமடைந்தது எனக்குத் தெரியவில்லை. தகவலும் இல்லை, நானும் கவனிக்கவில்லை. நெய்மரும் கீழே விழும்வரை ஆடவே விரும்பியது போல்தான் தெரிந்தது. அப்போது கோல்களில் பங்களிப்பு செய்ய அவர் முடிவெடுத்திருந்தார்” என்றார்.
மொத்தம் செர்பியா செய்த 12 ஃபவுல்களில் 9 ஃபவுல்கள் நெய்மருக்கு எதிரானதே, இதில் ஒரு முரட்டுத்தனமான தடுப்பில்தான் செர்பியா வீரர் நிகோலா மிலென்கோவிக், நெய்மரின் காயத்துக்குக் காரணமானார்.
பிரேசிலின் மற்றொரு நட்சத்திரம் மார்க்கின்யோ கூறும்போது, "நெய்மர் இல்லாமலேயே அணி வலுவாக இருக்கிறது என்றாலும் நெய்மர் இருப்பது நம் உணர்வுகளை, உற்சாகத்தை தட்டி எழுப்புவதாகும். நிச்சயம் இந்த உலகக்கோப்பையில் நெய்மர் ஆடுவார் என்றே நினைக்கிறோம், அவரும் கடும் உடற்கூற்றியல் சிகிச்சையில் இருக்கிறார், நெய்மர் நன்றாக உறங்குகிறார். எனவே அவர் நிம்மதிதான் அணிக்கு முக்கியம், ஏனெனில் காயத்திற்கு பிறகு அவர் மிகவும் சோகமாக இருந்தார். இப்போது அவரது முகத்தில் நம்பிக்கை தெரிகிறது" என்றார்.
இதுவரை 122 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள நெய்மர் 75 கோல்களை அடித்துள்ளார். நெய்மரின் முக்கியத்துவம் ஸ்ட்ரைக்கராக அல்ல, கோல் அடிப்பதற்கு அவர் பந்தை எடுத்துக் கொடுத்து ‘அசிஸ்ட்’ செய்கிறாரே அதில்தான் அவரது முக்கியத்துவம் இருக்கிறது. நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற அசகாய சூரர்கள் அணியில் இருந்தாலே அது பேரிய பக்க பலம். பிரேசிலின் பக்கபலமாக நெய்மர் காயத்திலிருந்து மீண்டு செயல்படுவார் என்று நம்புவோமாக!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT