Published : 25 Nov 2022 03:13 PM
Last Updated : 25 Nov 2022 03:13 PM
ஆக்லாந்து: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது நியூஸிலாந்து அணி. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதமும் இணைந்து 221 ரன்களுக்கு வலுவான கூட்டணி அமைத்து இந்த வெற்றியை பெற்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்து பகுதியில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணிக்காக கேப்டன் தவான் மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். தவான் 72 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயஸ் ஐயர் 80 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 36 ரன்கள் எடுத்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது.
307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டியது. அந்த அணி 88 ரன்கள் எடுத்த போது மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது நான்காவது விக்கெட்டிற்கு கூட்டணி அமைத்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதமும் 221 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லேதம் 104 பந்துகளில் 145 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்திருந்தார். 47.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. அதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி பவுலர்களால் அவர்கள் இருவரது விக்கெட்டை வீழத்தவே முடியவில்லை. 36-வது ஓவரில் சவாலான கேட்ச் வாய்ப்பை இந்திய கேப்டன் தவான் விரல் நுனியில் நழுவ விட்டிருந்தார். இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. அந்த அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது இதுவே இரண்டாவது முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT