Published : 26 Dec 2016 04:23 PM
Last Updated : 26 Dec 2016 04:23 PM

சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம்

2016... இந்திய பாட்மிண்டன் விளையாட்டின் பொன்னான ஆண்டு. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னாவால் இயலாமல் போனாலும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ரசிகர்களின் பதக்க தாகம் தீர்த்தார் சிந்து.

முன்னிலை நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அவரது இடத்தை ஒலிம்பிக் போட்டிகளில் சிந்து நிறைவு செய்தது சிறப்பு.

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்துடன் உலக பாட்மிண்டன் அரங்கில் சிந்து தன்னை சக்திவாய்ந்த ஒரு வீராங்கனையாக உருவாக்கிக் கொண்டுள்ளார். சாய்னா நெவால் காயமடைந்ததினால் இழந்ததை சிந்து பதிலீடு செய்தார். எனவே, இந்திய பாட்மிண்டன் வானில் உதித்த வெள்ளித்தாரகை சிந்து என்றால் அது மிகையாகாது.

சிந்துவின் பயிற்சியாளர் புலெலா கோபிசந்த் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல காரணமாக இருந்த ஒரே இந்திய பயிற்சியாளராக துரோணாச்சாரியார் விருது பெற்றார்.

ஆண்டின் முதல் பகுதியில் சாய்னாவின் காயங்களுடனான போராட்டமே ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் அப்போது ஒலிம்பிக்குக்கு சாய்னாதான் சிறந்த தேர்வு என்ற கருத்தே பெரும்பாலும் இருந்து வந்தது. காயத்திலிருந்து மீண்ட சய்னா ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸை வென்றார்.

சிந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 வெண்கலம் வென்றார். ஆனாலும் சில போட்டித் தொடர்களில் இறுதிப் போட்டிகளில் வெல்ல முடியாது ரன்னராக வந்ததால் ஒலிம்பிக் தங்கப் பதக்க மங்கையாக சிந்துவை ஒருவரும் கணிக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக்கில் இந்த முன் அனுமானங்களை மாற்றினார் சிந்து.

காயம் காரணமாக முழுதும் குணமடையாத சாய்னா 2-வது சுற்றில் வெளியேறி அதிர்ச்சி அளிக்க, சிந்து வெற்றிகளைக் குவித்து ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை நிகழ்த்தினார்.

இதற்குப் பிறகு சாய்னாவுக்கு மும்பையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு நீண்ட நாள் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள தேவைப்பட்டது. அப்போது சிந்து தனது ஒலிம்பிக் புகழ் மழையில் நனைந்து கொண்டிருந்தார்.

ஒலிம்பிக் புகழ் மட்டுமல்லாது சீன ஓபன் தொடரை வென்ற சிந்து இதனை வென்ற 3-வது இந்திய வீரர் என்ற சாதனையுடன் இன்னொரு வரலாறு படைத்தார்.

2016 குறித்து பி.வி.சிந்து கூறும்போது, "இந்த ஆண்டு எனக்கு அற்புத ஆண்டுதான். ஒலிம்பிக் பதக்கம் ஒரு பெரிய சாதனை. என் கனவு நனவான தருணம். மேலும் சீன ஓபன் தொடரில் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன்; அதுவும் நிறைவேறியது. நிச்சயமாக நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதே குறிக்கோள். இதுவரை சிறந்த இடமான 6-ம் இடத்தை சாதித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே நிலை தொடரும் மேலும் முன்னேற்றமடைய 2017 கைகொடுக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

சிந்து நட்சத்திரமாக உருவெடுத்த நிலையில், சாய்னா ஆஸ்திரேலிய சூப்பர் சீரிசை வென்றார், கே.ஸ்ரீகாந்த் ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும், சையத் மோடி சர்வதேச சாம்பியன்ஷிப்பில் லக்னோவில் பட்டம் வென்றார். எச்.எஸ்.பிரணாய் சுவிஸ் ஓபன் கிராண்ட் ப்ரீ வென்றார் என்று இந்திய பாட்மிண்டன் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை 2016-ல் நிகழ்த்தியுள்ளது.

ஆடவர் ஒற்றையரில் சவ்ரவ் வர்மா நீண்ட கால காயத்திலிருந்து மீண்டு சீன தைபே கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் தொடரை வென்றதோடு, பிட்பர்கர் ஓபனில் ரன்னர் பரிசு வென்றார்.

பி.சாய் பிரணீத் கனடா கிராண்ட் ப்ரீயை வென்று தன் முதல் சாம்பியன் பட்டத்தை பதிவு செய்தார், சமீர் வர்மா சீனியர் நேஷனல் சாம்பியனானதோடு, ஹாங்காங் ஓபனில் ரன்னராக வந்தார். அஜய் ஜெயராம் நெதர்லாந்து ஓபன் கிராண்ட் பிரீயில் ரன்னராக வந்தார்.

இரட்டையரில் மனு அட்ரி மற்றும் பி.சுமீத் ரெட்டி ஆகியோர் கனடா ஓபனை வென்று முதன் முதலில் ஒலிம்பிக் பாட்மிண்டனுக்கு தகுதி பெற்ற ஆடவர் இரட்டையர் என்ற சாதனையை நிகழ்த்தினர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெரி சோப்ரா மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோரும் 2016-ல் 2 கிராண்ட் பிரீக்களை பிரேசில் மற்றும் ரஷ்யாவில் வென்றனர். ஸ்காட்லாந்து ஓபனில் ரன்னர்களாக வந்தனர்.

இளம் ருத்விகா ஷிவானி காதே என்ற வீராஙனையும் ரஷ்யாவில் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றார்.

மே மாதம் உபர் கோப்பையில் சாம்பியன் சீனாவிடம் 0-3 என்று தோற்றாலும் இந்திய மகளிர் பாட்மிண்டன் அணி வெண்கலம் வென்றது. மற்றொரு இரட்டையர் இணையான ஜ்வாலா குட்டா, அஸ்வினி பொன்னப்பா தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக் தகுதி பெற்றனர். ஆனால் இந்த ஜோடி இந்த ஆண்டு பிரிந்து வெவ்வேறு வீரர்களுடன் இணைந்துள்ளனர்.

ஆடவர் பாட்மிண்டன் பிரிவுக்கு 2016-ம் ஆண்டு கடும் சவாலாக அமைந்தது. பலர் காயமடைந்தனர், பெரிய அளவுக்கு போட்டித்தொடர்களில் பங்கேற்றாலும் உடற்தகுதி அவர்களது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது.

தகவல் உறுதுணை:பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x