FIFA WC 2022 | வாயை மூடியபடி போஸ் கொடுத்த ஜெர்மன் வீரர்கள்... காரணம் இதுதான்

FIFA WC 2022 | வாயை மூடியபடி போஸ் கொடுத்த ஜெர்மன் வீரர்கள்... காரணம் இதுதான்
Updated on
1 min read

தோஹா: நடப்பு உலகக் கோப்பை தொடரில், குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கலிஃபா சர்வதேச மைதானத்தில் விளையாடின. இதில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் அதிர்ச்சி அளித்தது.

முன்னதாக, இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் ஜெர்மனி அணி வீரர்கள் தங்களது வாயை மூடியபடி போஸ் கொடுத்தனர். இப்படி போஸ் கொடுக்க காரணம் ஃபிஃபா எடுத்த முடிவு ஒன்று.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இம்முறை கத்தார் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இஸ்லாமிய நாடான கத்தாரில் கால்பந்து போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு மதுபானம், போதைப்பொருள், உடலுறவு, ஆடைக் கட்டுப்பாடு, தன்பால் ஈர்ப்புக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இங்கிலாந்து, வேல்ஸ் போன்ற ஏழு ஐரோப்பிய நாடுகள் எல்ஜிபிடி+ சமூகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கத்தாரில் தன்பால் ஈர்ப்பு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஒன் லவ் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டன. அதன்படி, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை அறிவுறுத்தும் வகையில் போட்டிகளில் களமிறங்கும்போது எல்ஜிபிடி+ சமூகத்தை குறிக்கும் வானவில் கைப்பட்டையை ஆடையில் அணியவிருப்பதாக அறிவித்தனர்.

இதற்கு ஃபிஃபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஒன் லவ் பேண்ட் அணிந்து களமிறங்கினால் அந்த அணிக்கு தடை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தது. ஃபிஃபாவின் தடை எச்சரிக்கை அறிவிப்பால் இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஒன் லவ் பேண்ட் அணிவதில் இருந்து பின்வாங்கினர். எனினும், ஃபிஃபாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் ஜெர்மனி அணி வீரர்கள் ஜப்பானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தங்களது வாயை மூடி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in