Published : 23 Nov 2022 10:09 PM
Last Updated : 23 Nov 2022 10:09 PM
சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லி வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார்.
37 வயதான தினேஷ் கார்த்திக், கடந்த 2004 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். அப்போது முதலே அணியில் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளையாடி வருகிறார். அவர் ரசிகர்கள் அன்போடு டிகே என அழைப்பது வழக்கம். இந்திய அணிக்குள் பலமுறை கம்பேக் கொடுத்த வீரர். இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதுவும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இவர் பார்க்கப்பட்டார். இந்த சூழலில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
“இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது. எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது.
எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்த ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். அவர் இப்படி தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT