Published : 23 Nov 2022 08:45 PM
Last Updated : 23 Nov 2022 08:45 PM
தோஹா: நடப்பு உலகக் கோப்பை தொடரில், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை அப்செட் செய்துள்ளது ஜப்பான் அணி. செவ்வாய்க்கிழமை அர்ஜென்டினாவை சவுதி அரேபியா வீழ்த்திய நிலையில் புதன்கிழமை உலகக் கோப்பை தொடரில் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கலிஃபா சர்வதேச மைதானத்தில் விளையாடி இருந்தன. இந்த போட்டியின் முதல் பாதியில் ஜெர்மன் அணி 1 கோல் பதிவு செய்து முன்னிலை பெற்றிருந்தது. ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் அந்த கோல் வந்திருந்தது.
இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி எப்படியேனும் ஒரு கோலை பதிவு செய்ய வேண்டும் என்ற முடிவோடு விளையாடியது. ஏனெனில், கால்பந்தாட்டத்தில் எப்போதுமே ஒரே ஒரு கோல் போதவே போதாது என சொல்வார்கள். ஆட்டத்தின் கடைசி நொடியிலும் அந்த ஒரு கோலை எதிரணி போட்டு ஆட்டத்தை சமன் செய்து அப்செட் கொடுக்கும். ஆனால், ஜப்பான் இந்த போட்டியல் அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
75-வது நிமிடத்தில் ஜெர்மனியின் அரணை தகர்த்தது. மாற்று வீரராக களம் கண்ட டுவான் அந்த கோலை பதிவு செய்தார். அதன் பிறகு அடுத்த 8-வது நிமிடத்தில் டக்குமா ஒரு கோல் போட 2-1 என முன்னிலை பெற்றது ஜப்பான். அதன் பிறகு எக்ஸ்ட்ரா டைமையும் சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஜெர்மனி வீரர்களுக்கு போக்கு காட்டினால் வெற்றி பெறலாம் என இல்லாமல் ஜப்பான் அணி வீரர்கள் கோல் போட முயன்றார்கள். அது ஆட்டத்தின் ஹைலைட்.
நேற்று அர்ஜென்டினாவுக்கும் இதேதான் சவுதி அரேபியாவுக்கு எதிராக நடந்தது. இன்று ஜெர்மனிக்கு நடந்துள்ளது. நாளை எவரோ என கால்பந்தாட்ட ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் 'இ' பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது ஜப்பான். இத்தனைக்கும் இந்த போட்டியில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் ஜெர்மனி 71 சதவீதம் வைத்திருந்தது. 25 ஷாட்கள் ஆடியது அந்த அணி. 8 டார்கெட்டில் விழுந்தது. 17 ஃப்ரீ கிக்கையும் அந்த அணி பெற்றது. ஜப்பான் மேற்கூறிய அனைத்திலும் குறைந்த வாய்ப்பை மட்டுமே பெற்றது. ஆனாலும் ஜெர்மனியை அப்செட் செய்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT