Published : 23 Nov 2022 01:47 PM
Last Updated : 23 Nov 2022 01:47 PM

FIFA WC 2022 அலசல் | உலக சாம்பியன் பிரான்ஸுக்கு தொடக்க அதிர்ச்சி கொடுத்து பிறகு சொதப்பிய ஆஸ்திரேலியா!

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவிடம் அர்ஜென்டினா அணி அடைந்த தோல்வி அதிர்ச்சியிலிருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், நள்ளிரவு நடைபெற்ற பிரான்ஸ் - ஆஸ்திரேலியா ஆட்டத்தில் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியாவின் கிரெய்க் குட்வின் அபார கோலை அடித்து 1-0 என்று முன்னிலை பெற்று இன்னொரு அதிர்ச்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடைசியில் உலக சாம்பியன்கள் புத்தெழுச்சி பெற்று 4 கோல்களை திணிக்க, ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

2010 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு வெற்றியைக் கூட உலகக் கோப்பைகளில் ருசிக்காத ஆஸ்திரேலிய அணிக்கு செவ்வாய்க்கிழமை அபாரமாகத் தொடங்கியும், பின்னால் செய்த கடுமையான தவறுகளினால் இன்னொரு வெற்றி சாத்தியமில்லாமல் போனதோடு, பிரான்ஸ் போட்டு ஆஸ்திரேலியாவை மிதித்துவிட்டனர் என்றே கூறவேண்டும்.

ஆட்டம் தொடங்கி 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அட்டகாசமான பாஸில் நம்பமுடியாத ஒரு கோலை அடித்தது அதிர்ச்சி அளித்தது. அதாவது, சவுட்டர் என்ற வீரர் நீண்ட குறுக்கு பாஸ் ஷாட்டை லெக்கி என்பவருக்கு அடிக்க, அதாவது இடது புறத்திலிருந்து வலது புறத்துக்குச் சென்ற பிரமாதமான குறுக்கு பாஸ் அது. அங்கு லெக்கி மேலே வந்து இறங்கிய பந்தை அற்புதமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஹெர்னாண்டஸுக்குப் போக்குக் காட்டி தனக்கு எதிர் விங்கில் இருக்கும் குட்வின்னுக்கு அருமையாக கெட்டிக்காரத்தனமான ஒரு பாஸை செய்ய, கிரெய்க் குட்வின் வலைக்குள் அடிக்க ஆஸ்திரேலியா 1-0 முன்னிலை. மைதானத்தில் பிரான்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி. ஒரே நாளில் இரண்டு அதிர்ச்சிகளா என்ற எதிர்பார்ப்பும் கூடத் தொடங்கியது.

இந்த அதிர்ச்சி நடந்தும் பிரான்ஸ் ஸ்லோவாகவே விளையாடியது. 27-வது நிமிடத்தில்தான் அட்ரியன் ரேபியோ ஒரு கோலை அடித்து சமன் செய்ய, அடுத்த 5 நிமிடங்களில் அனுபவ வீரரும் நட்சத்திர வீரருமான ஆலிவர் ஜிரவ்த் சாதனை கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்,

இரண்டாவது பாதியிலும் கைலியன் மபாப்பே தன் ஆட்டத்திறனின் முழு உத்திகளையும் பயன்படுத்தி ஆடி 68-வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க, 71-வது நிமிடத்தில் ஜிரவ்த் இன்னொரு கோலை தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். இந்த கோலுக்கு உதவி புரிந்தவரும் மபாப்பேதான். ஜிரவ்த் இந்த கோல் மூலம் தியரி ஹென்றி சாதனையை சமன் செய்தார். அதாவது ஹென்றியின் 51 கோல்கள் சாதனையை ஜிரவ்த் சமன் செய்தார்.

4-1 என்று பிரான்ஸ் அபார வெற்றி பெற்றது. 2006-ல் முந்தைய சாம்பியனாக பிரேசில் தன் முதல் போட்டியில் வென்றதையடுத்து அதே போன்ற ஒரு முதல் வெற்றியைப் பிரான்ஸ் பெற்றது. இதே குரூப் டி-யில் இருக்கும் டென்மார்க், துனீசியா அணிகள் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு உத்தியில் சென்று கோலே அடிக்காமல் 0-0 என்று ட்ரா செய்து புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டதால் பிரான்ஸ் இந்தப் பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

ஏற்கெனவே பென்சீமா, பால் போக்பா, எங்கோலோ காண்ட் போன்ற வீரர்களைக் காயத்திற்கு இழந்த பிரான்ஸ் செவ்வாய்க்கிழமை முக்கிய வீரர் லூகாஸ் ஹெர்னாண்டசையும் காயத்தில் இழந்தது. இந்த உலகக் கோப்பையில் இனி இவர் ஆடமாட்டார். ஹெர்னாண்டஸுக்குப் பதில் அவரது சகோதரர் தியோ பதிலி வீரராக இறங்கினார்.

செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் மபாப்பே மட்டுமே இடது புறம் கடும் அச்சுறுத்தலாக ஆடினார். நடுக்களத்தில் பிரான்ஸ் வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலியா அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. அப்படியும் 27-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கிராஸ் செய்த பந்தை ரேபியோ தனக்கு முட்டுக்கட்டையாக இருந்த ஆஸி. வீரரையும் முறியடித்து கோலாக மாற்றினார். மபாப்பே ஒரு கட்டத்தில் இடது பகுதியில் இருந்து களத்தின் நடுப் பகுதி வரை வந்து மிரட்டியது 2-வது கோலுக்கு வித்திட்டது. பின் கணுக்காலினால் அலட்சியமாக ஒரு பந்தை அவர் பாஸ் செய்ய, ரேபியோ அந்தப் பந்தைப் பெற்று ஜிரவ்துக்கு அனுப்ப, 2-வது கோல் விழுந்தது.

இடையே மபாப்பேயின் ஓர் அற்புதமான முயற்சி கோல் போஸ்டுக்கு மேலே செல்ல, இன்னொரு அனுபவ வீரர் கிரீஸ்மான் ஷாட் சற்றே கோலுக்கு விலகிச் சென்றது. ஆனால், ஆஸ்திரேலியா எப்போதும் ஃபைட்டிங் டீம் ஆகும், இடைவேளைக்கு முன்பாக ஆஸி. வீரர் ஜாக்சன் எர்வினின் ஷாட் ஒன்று கோலாக மாறியிருக்கும். ஆனால், அது தடுக்கப்பட்டது.

இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய ரசிகர்களை என்ன சேதி என்று கேட்கும் விதமாக மபாப்பே ஆடினார். தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மபாப்பேயை நோக்கி ‘ஹூ ஆர் யூ’ என்று கத்தி கேலி செய்து கொண்டிருந்தனர். ஆனால், 68-வது நிமிடத்தில் ஒரு பொறிப்பறக்கும் முட்டலில் கோலை மபாப்பே அடிக்க ஆஸ்திரேலிய ரசிகர்கள் வாயை மூடிக்கொண்டனர். பிறகு கடைசியாக மபாப்பேயின் அற்புத கிராஸ் ஒன்றை ஜிரவ்த் கோலாக மாற்ற ஆஸ்திரேலிய ரசிகர்கள் ‘ஹூ ஆர் யூ?’ கத்தலை நிறுத்திக் கொண்டனர். 4-1 என்று பிரான்ஸ் வென்றது.

மொத்தமாக கோலை நோக்கி 23 ஷாட்களை பிரான்ஸ் அடிக்க ஆஸ்திரேலியா 4 ஷாட்களை மட்டுமே அடித்தது. பிரான்ஸ் 5 முறை ஃபவுல் செய்ய ஆஸ்திரேலியா 11 ஃபவுல்களை செய்தது, இதனால் 3 மஞ்சள் அட்டைகளை தண்டனையாகப் பெற்றது. 2 கோல்களை ஆஸ்திரேலியா சேவ் செய்தது, பிரான்ஸுக்கு அந்த வேலையே தேவையில்லாமல் போய்விட்டது.

இன்றைய (23-11-22) போட்டிகள்: மொராக்கோ - குரேஷியா - மதியம் 3:30 மணி | ஜெர்மனி - ஜப்பான் - மாலை 6:30 மணி | ஸ்பெயின் - கனடா - இரவு 9:30 மணி | நள்ளிரவு 12:30 ஆட்டம்: பெல்ஜியம் - கனடா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x