Published : 22 Nov 2022 04:59 PM
Last Updated : 22 Nov 2022 04:59 PM
நேப்பியர்: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் மழை காரணமாக ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. டக்வொர்த் லூயிஸ் முறையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்த காரணத்தால் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் இந்திய அணி 1-0 என டி20 தொடரை வென்றுள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று இரு அணிகளும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் பாண்டியா 30 ரன்கள் மற்றும் தீபக் ஹூடா 9 ரன்கள் எடுத்திருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டது. மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாத சூழல். அப்போது டக்வொர்த் லூயிஸ் முறையில் இரு அணிகளின் ரன்கள் மற்றும் விக்கெட் இழப்புகள் சம நிலையில் இருந்தது. அதனால், இந்தப் போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. நடுவர்கள் 'டை' ஆனதாக அறிவித்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணி இலக்கை விரட்டிய போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் சிராஜ். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 2 போட்டிகளில் விளையாடி மொத்தம் 124 ரன்களை சேர்த்த சூர்யகுமார் யாதவ், தொடர் நாயகன் விருதை வென்றார்.
இரு அணிகளும் வரும் வெள்ளிக்கிழமை அன்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன.
Match abandoned here in Napier.
Teams level on DLS.#TeamIndia clinch the series 1-0.#NZvIND pic.twitter.com/tRe0G2kMwP
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT