Published : 22 Nov 2022 03:08 PM
Last Updated : 22 Nov 2022 03:08 PM

FIFA WC 2022 அலசல் | கோல் கீப்பரால் நெதர்லாந்து ‘கிரேட் எஸ்கேப்’ - கடைசி நிமிட கோல்களால் வீழ்த்தப்பட்ட செனகல்!

நெதர்லாந்து வீரர்கள்

கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் திங்கள்கிழமை குரூப் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் செனகல் அணி கோல் போடும் கணக்கோடு அட்டாக்கிங் பாணி ஆட்டத்தை ஆடியது. ஆனாலும், நெதர்லாந்து அணியின் தடுப்பு அரணை செனகல் வீரர்களால் தகர்க்க முடியாவில்லை. அடுத்தடுத்த 2 கோல் முயற்சிகளை செனகல் மேற்கொள்ள இரண்டையுமே நெதர்லாந்து கோல் கீப்பர் அற்புதமாகத் தடுத்திருந்தார்.

அல்துமானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் நெதர்லாந்து வாய்ப்புகளை விரயம் செய்தது. இரண்டாவது பாதியில் செனகல் அணி நெருக்கடி கொடுத்தது. ஆனால் கடைசியில் எப்படியோ ஒரு பாஸ் சரியாக செட் ஆக நெதர்லாந்து வீரர் கோடி கேப்கோ, 84-வது நிமிடத்தில் அற்புதமான கோலை ஸ்கோர் செய்தார். 90-வது நிமிடத்தில் டேவி கிளாசன், தன் அணிக்கா இரண்டாவது கோலை அடித்தார்.

2014 உலகக் கோப்பையில் ஆடிய நெதர்லாந்து 2018 கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. மாறாக செனகல் கடந்த ஆண்டு ஆப்பிரிக்கா கப் ஆஃப் நேஷன்ஸில் சாம்பியன் பட்டம் வென்று நிறைய எதிர்பார்ப்புகளுடன் கத்தார் வந்துள்ளது. இந்த அணியின் நட்சத்திர வீரர் சாடியோ மானே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலக, செனகல் அணிக்கும் ரசிகர்களுக்கும் பேரிடியாக அந்தச் செய்தி அமைந்தது.

முதல் பாதியில் நெதர்லாந்து செனகல் பகுதியில் புகுந்து பிரஷர் கொடுத்தாலும் கோல் அடிக்கும் முயற்சியில் சோடை போயினர். 6-வது நிமிடத்திலேயே டச்சு அணி முன்னிலை பெற்றிருக்க வேண்டும். காக்போ அற்புதமாக தன்னிடம் வந்த பந்தை சக வீரர் ஸ்டீவன் பெர்க்வின்னுக்கு அனுப்பினார். ஆனால் இவரது ஷாட் தடுக்கப்பட்டது. 18-வது நிமிடத்தில் இன்னொரு கோல் வாய்ப்பு உருவானது. நடுக்கள வீரர் ஃப்ரெங்கி டி யோங்கிடம் பந்து வர இவரும் செனகல் கோல் கீப்பர் எட்வர்ட் மெண்டி இருவர் மட்டுமே எதிரெதிர் நின்றிருந்தனர். ஆனால் ஷாட் அடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் கோல் முயற்சி பாழானது.

செனகல் அட்டாக்கில் சோடை போய்க்கொண்டிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டமும் மிகவும் மந்தமாகவே சென்று கொண்டிருந்தது. செனகல் அணிக்கு ஆட்டம் முடியும் தருவாயில் அதாவது நெதர்லாந்து 2 கோல்களை அடிக்கும் முன்பே 2 வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தது. ஆனால் நெதர்லாந்து கோல் கீப்பர் ஆண்ட்ரியஸ் நோப்பர்ட், அதை டைவ் அடித்துத் தடுத்து விட்டார். இத்தனைக்கும் இவர் அறிமுக வீரர். தன் முதல் சர்வதேசப் போட்டியில் ஆடுகிறார். இந்த 2 ஷாட்களையும் அடித்த செனகல் வீரர்கள் முறையே இத்ரிஸ்ஸா குயே, இஸ்மைலா சர் ஆகியோர் ஆவார்கள்.

இந்த வாய்ப்பை செனகல் கோலாக மாற்றாத தருணத்தில்தான் ஆட்டம் முடிய 6 நிமிடங்களே இருந்த போது நெதர்லாந்தின் டி யோங் அருமையான பாஸை இடது புறத்திலிருந்து கொடுக்க காக்போ அங்கு உயரே வந்த பந்துக்கு எழும்பினார், செனகல் கோல் கீப்பரும் எழும்பினார், ஆனால் காக்போ தலைக்குத்தான் அதிர்ஷ்டம் இருந்தது. அதன் பலனாக பந்து கோல் போஸ்டுக்குள் சென்றது.

ஆட்டம் முடிய வெறும் 8 நிமிடங்கள் செல்லலாம் என்று ரெஃப்ரீ சாம்பியோ சிக்னல் கொடுக்க நெதர்லாந்து உற்சாகமடைந்தது. நெதர்லாந்தின் மெம்பிஸ் டீப்பே ஒரு ஷாட்டை அட்டகாசமாக கோலை நோக்கி அடிக்க செனகல் கோல் கீப்பர் அதைப் பிடிக்கும் முயற்சியில் கட்டுப்பாட்டை இழந்து பந்தை விட்டதால் வாய்ப்பைப் பயன்படுத்தி கிளாசன் கோலுக்குள் திணித்தார். இதையடுத்து நெதர்லாந்து 2-0 என்று வெற்றி பெற்றது.

குரூப் ஏ-வில் நெதர்லாந்து 3 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க கத்தாரை வீழ்த்திய ஈக்வடார் 2-ம் இடத்தில் இதே 3 புள்ளிகளுடன் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x