Published : 22 Nov 2022 06:16 AM
Last Updated : 22 Nov 2022 06:16 AM

FIFA WC 2022 | 80 சதவீத நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘பி’-ல் நேற்று கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.

9-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. இதில் டிரிப்பியர் உதைத்த பந்தை ஹாரி கேன் பெற்று ஹாரி மாகுவேருக்கு கிராஸ் செய்தார். அதை அவர், இலக்கை நோக்கி உத்தைத்தார். ஆனால் கோல் கம்பத்தின் அருகே பந்தை பெற இங்கிலாந்து வீரர்கள் யாரும் இல்லாததால் வாய்ப்பு வீணானது. தொடர்ந்து 28, 30, 32-வது நிமிடங்களில் இங்கிலாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

தொடர் முயற்சிகளால் 35-வது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலை அடித்தது. லூக் ஷா அடித்த கிராஸை ஜூட் பெல்லிங்ஹாம் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 8-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து இங்கிலாந்தின் மாகுவேர் அடித்த பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து புகாயோ சகா, கோல் வலைக்குள் திணித்தார். 45-வது நிமிடத்தில் ஹாரி கேன் அடித்த கிராஸை பெற்ற ரஹீம் ஸ்டெர்லிங் கோலாக மாற்ற முதல் பாதியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதியிலும் இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியது. 62-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் உதவியுடன் புகாயோ சகா கோல் அடிக்க இங்கிலாந்து 4-0 என வலுவான முன்னிலையை பெற்றது. 65-வது நிமிடத்தில் ஈரான் தனது முதல் கோலை அடித்தது. அலி கோலிசாதே உதவியுடன் இந்த கோலை மெஹ்தி தரேமி அடித்தார்.

71-வது நிமிடத்தில் இங்கிலாந்து தனது 5-வது கோலை அடித்தது. ஹாரி கேன் உதவியுடன் பந்தை பெற்ற மார்கஸ் ரூதர்போர்டு கோலாக மாற்றினார். பதிலி வீரராக களமிறங்கிய உடனேயே ரூதர்போர்டு அடித்த இந்த கோல் கவனம் பெற்றது.

கடைசி நிமிடத்தில் வில்சன் மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் சென்று பாக்ஸின் மையப்பகுதியில் இருந்த ஜாக் கிரேலிஷுக்கு தட்டிவிட அதை அவர் கோலாக மாற்றினார். 90 நிமிடங்களின் முடிவில் இங்கிலாந்து 6-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தின் 10-வது நிமிடத்தில் ஈரான் வீரர் மோர்டேசா பவுரலியை பெனால்டி ஏரியாவில் ஃபவுல் செய்தார் இங்கிலாந்தின் ஜான் ஸ்டோன்ஸ். இதனால் ஈரான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் மெஹ்தி தரேமி கோல் அடித்தார்.

முடிவில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஈரான் அணியின் டிபன்ஸ் மோசமாக இருந்தது. இதை இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். மேலும் 80 சதவீத நேரம் பந்தை இங்கிலாந்து அணி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x