Published : 20 Nov 2022 09:08 AM
Last Updated : 20 Nov 2022 09:08 AM

FIFA WC 2022 | மெஸ்ஸி முதல் நெய்மர் வரை - கவனிக்கக்கூடிய வீரர்கள்!

ரொனால்டோ (போர்ச்சுகல்): எல்லா காலத்திலும் சிறந்தவர்களில் ஒருவரான ரொனால்டோ ஓய்வு பெறும் வரை போர்ச்சுகலின் மிகப்பெரிய ஈர்ப்பாக இருப்பார். உலகக் கோப்பை தொடர்களில் 11 லீக் ஆட்டங்களில் ரொனால்டா 7 கோல்கள் அடித்துள்ளார். 2018 உலகக் கோப்பையில் போர்ச்சுகல் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது. மீண்டும் ஒரு முறை ரொனால்டோ கேப்டனாக போர்ச்சுகலை வழிநடத்த உள்ளார். தனது அணியை அவர், ஆழமாக எடுத்துச் செல்லக்கூடும். ரொனால்டோ உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தது இல்லை என்பது சோகமான விஷயம்.

லயோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா): ரொனால்டோவுடன் சேர்ந்து அவரது தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரராக பலரால் கருதப்படும் லயோனல் மெஸ்ஸியும் உலகக் கோப்பையை வென்ற அணியில் அங்கமாக இருந்ததில்லை. 35 வயதான மெஸ்ஸிக்கு உலக சாம்பியனாவதற்கு இந்த தொடர் கடைசி வாய்ப்பாக இருக்கும். 2014-ம் ஆண்டில் மெஸ்ஸி அங்கம் வகித்த அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. அந்த தொடரில் தொடர் நாயகனாக மெஸ்ஸி தேர்வானார். மேலும் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்றார். உலகக் கோப்பையில் இது வரை மெஸ்ஸி 11 லீக் ஆட்டங்களில் 6 கோல்கள் அடித்துள்ளார். துரதிருஷ்டவசமாக ரொனால்டோவைப் போன்று மெஸ்ஸியும் நாக் அவுட் ஆட்டங்களில் கோல் அடித்தது இல்லை.

ஹாரி கேன் (இங்கிலாந்து): த்ரி லயன்ஸ் என அழைக்கப்படும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன், இம்முறை கத்தாரில் அணியின் துருப்புசீட்டாக திகழக்கூடும். 29 வயதான முன்கள வீரரான ஹாரி கேனுக்கு, வெய்ன் ரூனியின் 53 கோல்கள் சாதனையை எட்ட இரு கோல்கள் தேவையாக உள்ளது. 2018 ரஷ்ய கோப்பையில் ஹாரி கேன் ‘கோல்டன் பூட்’ விருதை பெற்றிருந்தார். அந்தத் தொடரில் இங்கிலாந்து 4-வது இடம் பிடித்திருந்தது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் வீழ்ந்திருந்தது.

நெய்மர் (பிரேசில்): திறமை, வேகம் மற்றும் துல்லியம் நிறைந்த நெய்மரால் நேரடி ஸ்ட்ரைக்கர், விங்கர் அல்லது மிட்ஃபீல்டில் விளையாட முடியும். இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான நெய்மர், இதுவரை பிரேசிலுக்காக 75 கோல்களை அடித்துள்ளார். பீலேவின் 77 கோல்கள் சாதனையை சமன் செய்ய நெய்மருக்கு மேலும் இரு கோல்களே தேவை. மெஸ்ஸி, ரொனால்டோவை போன்று உலகக் கோப்பையை வென்ற அணியில் நெய்மரும் இதுவரை இருந்ததில்லை.

கரேத் பேல் (வேல்ஸ்): வேல்ஸ் கால்பந்து அணியின் மிகப்பெரிய நட்சத்திர வீரர் கரேத் பேல். 33 வயதான அவர், 6.1 அடி உயரம் கொண்டவர். வேல்ஸ் அணியில் மிகச்சிறந்த முன்கள வீரராக அறியப்படுகிறார் கரேத் பேல். 100 சர்வதேச போட்டிகளில் 40 கோல்களை அடித்துள்ள கரேத் பேல், 64 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள வேல்ஸ் அணியை சிறந்த முறையில் முன்னேடுத்துச் செல்வார் என அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

கிளியான் பாப்பே (பிரான்ஸ்): 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் கிளியான் பாப்பே முக்கிய பங்குவகித்தார். அந்தத் தொடரில் பாப்பே மொத்தம் 4 கோல்கள் அடித்திருந்தார். இதில் இறுதிபோட்டியில் அடித்த ஒரு கோலும் அடங்கும். 23 வயதான பாப்பே, இதுவரை சர்வதேச அரங்கில் 28 கோல்கள் அடித்துள்ளார். ரஷ்ய உலகக் கோப்பையில் சிறந்த இளம் வீரர் விருதை வென்ற அவர், இம்முறையும் ஜொலிக்கக்கூடும்.

லெவன்டோவ்ஸ்கி (போலந்து): 34 வயதான ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி கடந்த சீசனில் அதிக கோல் அடித்ததற்காக ஜெர்ட் முல்லர் கோப்பையை வென்றார். 6 அடி 1 அங்குல உயரமுள்ள ஸ்டிரைக்கரான ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி 130 சர்வதேச போட்டிகளில் 70 கோல்களை அடித்துள்ளார். கத்தார் உலகக் கோப்பையில் போலந்து அணியானது அர்ஜென்டினா, மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியாவுடன் கடினமான குழுவில் உள்ளது. இருப்பினும் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி தனது திறனால் அணியை நாக்அவுட் சுற்றுக்கு அழைத்துச் செல்லக்கூடும்.

ரோமலு லுகாகு (பெல்ஜியம்): 6 அடி 3 அங்குல உயரம் கொண்ட 29 வயதான ரோமலு லுகாகு பெல்ஜியம் அணிக்காக 100 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் ரோமலு லுகாகு 4 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். சிறந்த ஸ்ட்ரைக்கரான லுகாகு, தகுதி சுற்றில் 18 கோல்களை அடித்து மிரட்டியிருந்தார். இதனால் கத்தாரில் லுகாகு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

கிறிஸ்டியன் எரிக்சன் (டென்மார்க்): யூரோ கோப்பையில் பின்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் அதில் இருந்து மீண்டு வந்து சிறந்த பார்மில் உள்ளார். நடுகளத்தில் டென்மார்க் அணியின் முக்கியமான வீரரான திகழ்கிறார் எரிக்சன். 100-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள எரிக்சன் 30 கோல்கள் அடித்துள்ளார்.

லூகா மோட்ரிக் (குரோஷியா): மோட்ரிக் சிறந்த குரோஷிய கால்பந்து வீரராக மட்டுமல்லாமல், உலகின் சிறந்த மிட் பீல்டர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். 37 வயதானாலும் அவர், களத்தில் இருக்கும்போது எதிரணிகள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும். 2018ம் ஆண்டு உலகக் கோப்பையில் தங்க பந்து விருதை கைப்பற்றினார் மோட்ரிக். அந்த தொடரில் குரோஷியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதில் பெரும் பங்காற்றினார். மீண்டும் ஒரு முறை கேப்டனாக அதே மாயத்தை நிகழ்த்த ஆயத்தமாக உள்ளார்.

831 வீரர்கள்: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 32 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 831 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் 608 வீரர்கள் ஐரோப்பிய கிளப்களில் விளையாடி வருபவர்கள்.

உயரமான வீரர்: உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளில் மிகவும் உயரமான வீரர் என்ற பெருமையை நெதர்லாந்து கோல்கீப்பர் ஆண்ட்ரீஸ் நோபர்ட் (203 செ.மீ.) பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x