Last Updated : 19 Nov, 2022 12:59 PM

 

Published : 19 Nov 2022 12:59 PM
Last Updated : 19 Nov 2022 12:59 PM

FIFA WC 2022 | நம்முடைய ரொனால்டோவையும், மெஸ்ஸியையும் காண்பது எப்போது?

சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இதுவரை பிஃபா உலகக் கோப்பை தொடரில் விளையாடியது இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகளாவிய இந்தத் தொடரில் அரிதிலும் அரிதாக 1950-ம் ஆண்டு போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றிருந்தது. இதுவே முதலும் கடைசியான வாய்ப்பாக இந்தியாவுக்கு அமைந்தது.

1950-ல் பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள இந்திய கால்பந்து அணி தகுதி பெற்றிருந்த போதிலும் ஒரு வித்தியாசமான காரணத்துக்காக அந்தத் தொடரில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா பலம் வாய்ந்த சுவீடன், இத்தாலி, பராகுவே அணிகளுடன் மோதும் வகையில் அட்டவணை இருந்தது. அன்றைய காலக்கட்டங்களில் இந்திய அணி வீரர்கள் கால்பந்து போட்டிகளுக்கான பாரம்பரியமான பூட்ஸ்களை அணியாமல் வெறும் கால்களுடன் போட்டிகளில் பங்கேற்றனர். இதை காரணம் காட்டித்தான் 1950 உலகக் கோப்பையில் இந்தியா பங்கேற்க பிஃபா தடைவித்தது.

அதற்கு முன்னதாக 1948-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் நாகாலாந்தைச் சேர்ந்த டாக்டர் தலிமெரேன் தலைமையில் இந்திய கால்பந்து அணியினர் பூட்ஸ் அணியாமல் வெறும் கால்களுடன்தான் களமிறங்கினர். அப்போது பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் இந்திய அணி கோல் வாங்கியது. இதனால் இந்திய அணி அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. விளையாட்டுத் துறையில் இருந்த நிதி பிரச்சினை காரணமாகவே இந்திய அணியினர் பூட்ஸ் இல்லாமல் விளையாடி வந்ததாகவும் கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க இந்திய அணி வீரர்களே பூட்ஸ் அணிந்து விளையாடுவதை அசவுகரியமாக கருதியதாகவும் ஒரு கருத்து உண்டு. இந்த பிரச்சினை இரு ஆண்டுகளாக தீர்க்கப்படாததால் பிஃபா உலகக் கோப்பை தொடரில் விளையாடும் பொன்னான வாய்ப்பை இழந்தது.

1951-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெறும் கால்களுடன் விளையாடிய போதிலும் இந்திய கால்பந்து அணியினர் தங்கப் பதக்கம் வென்றனர். ஆனால் இதைத் தொடர்ந்து 1952-ல் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணி 1-10 என்ற கோல் கணக்கில் யூகோஸ் லாவியாவிடம் மோசமாக தோல்வியடைந்தது. இதன் பின்னர் இந்திய கால்பந்து அணியில் பூட்ஸ் அணிந்து விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டது. 1956-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணி 4-வது இடம் பிடித்தது. இந்தத் தொடரில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. அரை இறுதியில் 1-4 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லாவியாவிடம் தோல்வியடைந்த நிலையில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் பல்கேரியாவிடம் வீழ்ந்தது.

1962-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா தங்கம் வென்றது. இத்துடன் இந்திய கால்பந்தின் பொற்காலம் முடிவுக்கு வந்தது. தேசிய அளவிலான திட்டங்கள் புறக்கணிப்பு, அடிமட்ட அளவில் விளையாட்டை வளர்த்தெடுக்காதது, உட்கட்டமைப்புகள், கிரிக்கெட்டின் ஆதிக்கம் ஆகியவற்றால் ஆசியாவின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றாக திகழ்ந்த இந்தியா வீழ்ச்சியை நோக்கி பயணித்தது.

60 ஆண்டுகளை கடந்தும் இன்னும் இந்திய கால்பந்து அணியால் வீழ்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. எனினும் இந்த ஆண்டில் ஒரு முன்னேற்றத்தை காண முடிந்தது. 24 வருடங்களுக்குப் பிறகு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி பெற்றிருந்தது. ஆனால் லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. 3 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்த நிலையில் 13 கோல்களை வாங்கியது. பிஃபா கால்பந்து தரவரிசையில் 51 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூஸிலாந்துக்கும் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட கொசோவோவுக்கும் இடையே 106-வது இடத்தில் உள்ளது இந்திய அணி. இதற்கு காரணம் கால்பந்து விளையாட்டை நாம் விளையாடும் விதமும், அதை வளர்த்தெடுக்கும் விதமும்தான்.

கால்பந்து உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கானவர்களால் ரசிக்கப்படுகிறது. மூலை முடுக்கிலும் கூட விளையாடப்படுகிறது. ஆனால் பெருவாரியான ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில் மேற்கு வங்கம், கோவா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில நகரங்கள் போன்றவற்றைத் தவிர இந்த அழகான விளையாட்டு மற்ற பகுதிகளில் கவனிக்கப்படுவதில்லை.

பிஃபாவின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் ஒருமுறை இந்தியாவை ‘தூங்கும் ராட்சதர்கள்’ என்று அழைத்தார், அவர் சொன்னது சரிதான். ஏனெனில் 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலக கால்பந்து அரங்கில் எதையும் சாதிக்கவில்லை. பிஃபா கால்பந்து வரலாற்றில் இந்தியா இதுவரை 9 முறை தகுதி சுற்றில் ஆசிய அளவில் போராடி உள்ளது. ஆனால் ஒருமுறை கூட கரைசேரவில்லை. 1950-ம் ஆண்டு இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்புகூட ஆசிய கண்டத்தில் இருந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பர்மா அணிகள் தகுதி சுற்றில் இருந்து விலகியதால்தான் உருவானது. ஆனால் அதுவும் பூட்ஸ் விவகாரத்தால் கைகூடாமல் போனது. பிஃபாவின் தடையை எதிர்க்காமல் அகில இந்திய கால்பந்து சம்மேளனமும், உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தது.

அந்த காலக்கட்டத்தில் உலகளாவிய நிகழ்வின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாததின் துரதிருஷ்டம் இன்னும் நம்மை துரத்துகிறது. இது ஒருபுறம் இருக்க காலப்போக்கில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், இந்திய கால்பந்து அணி மக்களின் ஆர்வத்தை ஈர்க்கத் தவறிவிட்டது, மறுக்க முடியாத ஒன்று. ஏனெனில் இந்தியாவில் விளையாடப்படும் கால்பந்தின் தரம் அவ்வாறு உள்ளது. இருப்பினும், 1990-களின் நடுப்பகுதியில் கேபிள் தொலைக்காட்சியின் வருகையானது, இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் போன்ற வெளிநாட்டு லீக்குகள் கால்பந்து மீது இந்திய பார்வையாளர்களுக்கு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் தற்போதைய கால்பந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை 80 மில்லியனாக உள்ளது. கிழக்கு பெங்கால் - மோகன் பகான் அணிகள் மோதும் ஆட்டம் பிராந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், அவை தேசிய பார்வையாளர்களை பெரிய அளவில் கவரவில்லை.

ஆனால் இந்த நிலைமை இந்தியன் சூப்பர் லீக் (ISL) போன்ற கால்பந்து லீக்குகள் அறிமுகமான பிறகு சிறிது மாறத் தொடங்கி உள்ளது. இந்த லீக் குறிப்பிடத்தக்க பெருநிறுவனங்களின் நிதியை ஈர்த்தது மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பில் கணிசமான முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது. இதை மாற்றங்களுக்கான படிக்கட்டாக கருதலாம். உலகத் தரம் வாய்ந்த கால்பந்துஅகாடமிகளை உருவாக்குவது, அதிகமான குழந்தைகளை கால்பந்தை ஒரு தொழிலாகக் கொள்ள ஊக்குவிப்பது, அடிமட்ட அளவில் விளையாட்டை வளர்ப்பது என சில கடுமையான முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இந்தியா தனது சொந்த ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர், பென்சீமா, பாப்பேக்களை உருவாக்க முடியுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

அதுவரை, உண்மையான மெஸ்ஸியும் ரொனால்டோவும் களமிறங்குவதைப் பார்த்து, அவர்களின் திறமையை கொண்டாடுவோம். எப்போதாவது இந்திய கால்பந்து வீரர் ஒருவர் உலக அரங்கில் நம்மைப் பெருமைப்படுத்துவார், அதற்கான இளைஞர் பட்டாளம் நம்மிடம் உள்ளது.1948-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பூட்ஸ்கள் அணியாமல் வெறும் கால்களுடன் களமிறங்கிய இந்திய கால்பந்து அணி. பிஃபா கால்பந்து வரலாற்றில் இந்தியா இதுவரை 9 முறை தகுதி சுற்றில் ஆசிய அளவில் போராடி உள்ளது. ஆனால் ஒருமுறை கூட கரைசேரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x