Published : 28 Nov 2016 05:32 PM
Last Updated : 28 Nov 2016 05:32 PM
மொஹாலி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
ஆட்ட முடிவில் ஜோ ரூட் 36 ரன்களுடனும் காரெத் பாத்தி ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்கர் அஸ்வின் 12 ஓவர்கள் வீசி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
134 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து தற்போது 6 விக்கெட்டுகளை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு மேலும் 56 ரன்களைக் கடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பிட்ச்... வித்தியாசம்!
பிட்ச் வித்தியாசமாக மாறிவிடவில்லை. ஆனால் அஸ்வின், ஜெயந்த் யாதவ் வீசிய விதமும் ஜடேஜா விரைவாக ஓவர்களை வீசி நெருக்கடி கொடுத்ததும் இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்திய ஸ்பின்னர்கள் லெந்த்தை மாற்றி கொண்டே இருந்தனர், அதிக பந்துகள் பேட்ஸ்மென்களின் தடுப்பாட்டத்தை கேள்விக்குட்படுத்துமாறு கடந்து செல்லும் போது இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் கால்நகர்த்தல்களில், உத்திகளில் பல ஐயங்களை ஏற்படுத்தியது என்பதுதான் நடந்தது, இது குக்கை அஸ்வின் வீழ்த்தியதிலும் இங்கிலாந்தின் இந்தத் தொடரின் சிறந்த பேட்ஸ்மென் பேர்ஸ்டோவை ஜெயந்த் யாதவ் வீழ்த்தியதிலும் வெளிப்படையாக தெரிந்தது.
பின்கள வீரர்கள் பேட்டிங் பங்களிப்பு:
மேலும் இன்று காலை ரவீந்திர ஜடேஜா (90), ஜெயந்த் யாதவ் (55), இருவரும் சேர்ந்து 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 80 ரன்கள் இங்கிலாந்தின் திட்டங்களை ஒன்றுமில்லாமல் செய்தன.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தியாவின் கடந்த சில டெஸ்ட் போட்டிகளின் வெற்றியில் பின்கள வீரர்களின் பேட்டிங் பெரிய பங்களிப்பு செய்துள்ளது, இந்த டெஸ்ட் போட்டியிலும் 204/6 என்ற நிலையிலிருந்து கடைசி 4 விக்கெட்டுகள் சேர்ந்து 213 ரன்களை மேலும் சேர்த்து அணியின் ரன் எண்ணிக்கையை 417 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. பழைய பேட்டிங் வரிசையான சேவாக், திராவிட், சச்சின், லஷ்மண், கங்குலி வரிசையாக இருந்தால் இது 650-700 பிட்ச் என்பதே சாலப்பொருந்தும். முதல் நாளில் இங்கிலாந்து அணி பேட்டிங் விக்கெட்டுகளை அலட்சியமாக தூக்கி எறிந்தது.
அதுதான் அந்த அணியின் பின்னடைவுக்குக் காரணம். மேலும் 204/6 என்ற நிலையில் மேலும் நெருக்கடிகளை அதிகரிக்காமல் நெகட்டிவ் அணுகுமுறையில் சென்றார் அலஸ்டர் குக். உதாரணமாக விராட் கோலிக்கு ஆஃப் திசையில் 8. ஆன் திசையில் 2 என்று பீல்டர்களை நிறுத்தியது, இன்று காலை தள்ளித்தள்ளி பீல்டிங்கை நிறுத்தி சுலப சிங்கிள்களுக்கு வழிவகுத்தது, விக்கெட் எடுக்கும் தீவிரத்திற்கான கள வியூகம் செய்யாதது, கேட்ச்களை கோட்டை விட்டது என்று இங்கிலாந்து பின்னடைவுக்கு அந்த அணியின் ஆட்டமே காரணம் என்று கூற முடியும்.
இன்று காலை கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் லெக் ஸ்டம்ப் பந்தை முறையாக பவுண்டரிக்கு அனுப்பி தொடங்கினார் அஸ்வின். 113 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த அஸ்வின், ஸ்டோக்ஸ் வீசிய வெளியே சென்ற பந்தை பேக்வர்ட் பாயிண்டில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், ஆனால் ஜடேஜாவும் இவரும் இணைந்து 97 ரன்களைச் சேர்த்தனர்.
ஜடேஜா 104 பந்துகளில் அரைசதம் கடந்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு அடித்து ஆட உத்தரவா என்று தெரியவில்லை, கிறிஸ் வோக்ஸின் ஸ்லோ பந்தை நேராக தூக்கி அடித்து பவுண்டரி அடித்ததோடு 4 பவுண்டரிகளை அந்த ஓவரில் விளாசினார். இதன் மூலம் 169 பந்துகளில் 90 ரன்களை எட்டிய ஜடேஜா, கடைசியில் அடில் ரஷீத் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்/று டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜெயந்த் யாதவ் மிகவும் உறுதியான தடுப்பாட்ட உத்தி கொண்டவர். அவர் 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸிடம் வெளியேறினார். உமேஷ் யாதவ் ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸிடம் வீழ்ந்தார். ஸ்டோக்ஸ் 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ரஷீத் 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தியா 134 ரன்கள் முன்னிலை பெற்று 417 ரன்கள் எடுத்தது.
அஸ்வின் அபாரம் இங்கிலாந்து விக்கெட்டுகள் சரிவு:
2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஹமீத் காயம் காரணமாக இறங்க முடியாததால் ஜோ ரூட், குக் இறங்கினர்.
குக் ஆட்டம் வேதனை நிரம்பியதாக மாறியது. 4 பந்துகளில் 2 முறை நெருக்கமான டி.ஆர்.எஸ்-ல் அவர் தப்பினார். முதலில் ஜடேஜாவுக்கு நடுவர் நாட் அவுட் கொடுக்க கோலி ரிவியூ செய்தார், பந்து லெக் ஸ்டம்பை தவிர்க்கும் என்று தெரிந்தது. மற்றொரு முறை அஸ்வின் பந்தில் எல்.பி.என்று தீர்ப்பளிக்கப்பட குக் ரிவியூ செய்தார். இது பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனதால் அவுட் கொடுக்க முடியாததானது.
இந்த நெருக்கடியில் அஸ்வின் பந்து ஒன்றை தவறான லைனில் ஆடி பவுல்டு ஆனார் குக். அவரது 49 பந்து வேதனை முடிவுக்கு வந்தது. 3-ம் நிலையில் மொயின் அலி வந்தார். இவர் 20பந்துகளையே தாக்குப் பிடித்தார். மேலேறி வந்து அஸ்வினை ஆட முயன்றார், ஆனால் பிளைட்டில் திண்டாடி மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 5 ரன்களில் மொயின் அவுட். சுமார் 11 ஓவர்களுக்குப் பிறகு 34 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோ முன்னால் வந்து ஆஃப் வாலியாக மாற்ற வேண்டிய பந்தை பின்னால் சென்று ஆடினார், பார்த்திவ் படேலின் அதிஅற்புதமான கேட்சிற்கு வெளியேறினார்.
ஆட்டம் முடிய சற்று நேரம் இருக்கும் போது மிக முக்கியமான விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார், பென் ஸ்டோக்ஸ், 5 ரன்களில் மிடில் அண்ட் ஆஃபில் பிட்ச் ஆன பந்து ஸ்டோக்ஸின் நிலையையே மாற்றியது காரணம் பந்து நன்றாகத் திரும்பியதே; பீட்டன் ஆனார், கால்காப்பைத் தாக்கியது நடுவர் நாட் அவுட் என்றார், சற்றும் மனம்தளராத கோலி ரிவியூ செய்தார். ரிவியூவில் பந்து ஆஃப் ஸ்ட்ம்பை அடிக்கும் என்று நிரூபணமானது அவுட் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆட்ட முடிவில் ஜோ ரூட் 36 ரன்களுடனும் காரெத் பாத்தி ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர், இங்கிலாந்து 78/4. இன்னும் 56 ரன்களை எடுத்தால்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT