Published : 15 Nov 2016 04:14 PM
Last Updated : 15 Nov 2016 04:14 PM

ஒரே டெஸ்ட்டில் அதிக ஒற்றை இலக்க ஸ்கோர்கள்: ஆஸி. ‘சாதனை’ புள்ளி விவரங்கள்

தென் ஆப்பிரிக்காவிடம் வரலாறு காணாத தோல்விகளைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலிய அணி பல எதிர்மறைச் சாதனைகளுக்கு சொந்தமாகியுள்ளது.

ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 16 ஒற்றை இலக்க ஸ்கோர்கள் ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் கார்டில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் 1912-ம் ஆண்டுதான் இத்தகைய மோசமான பேட்டிங் செய்துள்ளது ஆஸ்திரேலியா.

ஹோபார்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் வார்னர், பர்ன்ஸ், கவாஜா, வோஜஸ், பெர்குசன், நெவில், ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் ஆகியோரும் 2-வது இன்னிங்சில் பர்ன்ஸ், வோஜஸ், பெர்குசன், நெவில், மெனி, ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் ஆகியோரும் ஒற்றை இலக்க ஸ்கோர்களை எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 3-வது தொடரை வெல்கிறது. இதற்கு முன்பாக 2008-09, 2012-13 தொடர்களை தென் ஆப்பிரிக்கா இங்கு வென்றுள்ளது.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதில்லை தென் ஆப்பிரிக்க அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும் இது, இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் 2012-ம் ஆண்டு 309 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

326 ரன்களை மட்டுமே எடுத்து அதில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற வகையில் இது 5-வது மிகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும். இதற்கு முன்பாக பெர்த்தில் மே.இ.தீவுகள் 322 ரன்களை மட்டுமே எடுத்த போது ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

2013-க்குப் பிறகு ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டது. 1984-ம் ஆண்டு ஆஸ்திரேலியா 6 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி கண்டது அப்போது காயம் ஏற்படுத்திய அணி மே.இ.தீவுகள்.

ஆஸ்திரேலியா ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 558 பந்துகளையே சந்தித்து தோல்வி கண்டது. இதற்கு முன்பாக 1928-29-ல் பிரிஸ்பனில் இங்கிலாந்துக்கு எதிராக 457 பந்துகளையே சந்தித்து தோல்வி கண்டது.

ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் இன்று 32 ரன்களுக்கு தனது 8 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியாவின் 2-வது பெரிய சரிவாகும்.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மொத்தம் எடுத்த 246 ரன்கள் சொந்த மண்ணில் 6-வது குறைந்த ரன் எண்ணிக்கையாகும்.

ஷான் போலாக் 1998-ம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை 87 ரன்களுக்கு எடுத்தபிறகு ஆஸி. மண்ணில் சிறந்த பந்து வீச்சுக்குரியவரானார் கைல் அபாட், இவர் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2 போட்டிகளில் கைல் அபாட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x