Last Updated : 15 Nov, 2022 09:15 AM

1  

Published : 15 Nov 2022 09:15 AM
Last Updated : 15 Nov 2022 09:15 AM

கால்பந்து திருவிழாவுக்காக பிரம்மாண்டமான உட்கட்டமைப்புகள்: 220 பில்லியன் டாலர் செலவில் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக கத்தாரில் 8 மைதானங்கள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி நடைபெறும் லுசைல் மைதானம் மின்னொளியில் ஜொலிக்கிறது. படம்: ஏஎப்பி

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நடத்தும் 22-வது உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிக்கும் இந்த ‘கால்களின்’ திருவிழாவை பிரம்மாண்டமாக நடத்த கத்தார் முழு அளவில் தயாராகி உள்ளது. இதற்காக கத்தார் சுமார் 12 ஆண்டுகளை செலவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பலம் வாய்ந்த நாடுகளை பின்னுக்குத்தள்ளி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது கத்தார்.

வரலாற்றில் முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தார் உலக கோப்பை கால்பந்து திருவிழாவை நடத்துகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இதில் கலந்து கொண்டுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ‘ஏ’-ல் போட்டியை நடத்தும் கத்தாருடன், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் ‘பி’-ல் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் ஆகியஅணிகளும் குரூப் ‘சி’-ல் அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து அணிகளும் குரூப் டி-ல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா ஆகிய அணிகளும் குரூப் இ-ல் ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான்அணிகளும் இடம் பிடித்துள்ளன.

குரூப் எஃப்-ல் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா அணிகளும், குரூப் ஜி-ல் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் அணிகளும், குரூப் ஹெச்-ல் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகளும் உள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

டிசம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்த சுற்றில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ளும். நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். கால் இறுதி சுற்று டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 13 மற்றும் 14-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 18-ம் தேதி லுசைல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டம் வரும் 20-ம் தேதி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார், ஈக்வேடார் அணியை எதிர்கொள்கிறது. சுமார் ஒரு மாதம் காலம் நடைபெறும் கால்பந்து திருவிழாவில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளுக்காக 30 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 லட்சம் ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு கத்தாருக்கு வந்து குவியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து திருவிழாவை காணவரும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக 90 வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் கத்தார் அரசு ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக உலகக் கோப்பை தொடர் ஜூன், ஜூலை மாதங்களில்தான் நடத்தப்படும்.

ஆனால் இந்த மாதங்களில் கத்தாரில் 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்பதால் குளிர்காலத்தில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் குளிர்காலத்தில் நடத்தப்படும் முதல் உலகக் கோப்பை என்ற பெருமையை இந்தத் தொடர் பெற்றுள்ளது.

28 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டகத்தார், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 8 கால்பந்து மைதானங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் நடத்தப்படும் என்ற உலகக் கோப்பை கால்பந்து தொடர் என்ற பெருமையை பெற உள்ளது கத்தார் போட்டி. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-ம்ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக 14 பில்லியன் டாலர் செலவு செய்திருந்தது. எப்படி இருப்பினும் கால்பந்து போட்டிக்காக உலகநாடுகளின் கண்கள் கத்தாரைநோக்கி திரும்பியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x