Published : 05 Nov 2016 05:20 PM
Last Updated : 05 Nov 2016 05:20 PM
பெர்த் டெஸ்ட் போட்டியில் டீன் எல்கர், டுமினி அபார சதங்களுடன் தென் ஆப்பிரிக்கா தன் 2-வது இன்னிங்ஸில் 388 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பெர்த்தில் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலியாவை வெயிலும், டுமினி மற்றும் எல்கர் ஆகியோரும் சேர்ந்து ‘காய்ச்சி’ எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தன் 2-வது இன்னிங்ஸில் 388 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்ட முடிவில் டி காக் 16 ரன்களுடனும் வெர்னன் பிலாண்டர் 23 ரன்களுடனும் களத்தில் இருக்க, தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு இன்னொரு பெர்த் தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது.
ஆஸி.யை முழு ஆதிக்கம் செலுத்திய டீன் எல்கர், டுமினி சதங்கள்:
45/2 என்று தடுமாற்ற நிலையில் இணைந்த எல்கர், டுமினி ஜோடி 3-வது விக்கெட்டுக்காக ஆட்டத்தின் போக்கை மாற்றும் 250 மகா கூட்டணி அமைத்து கடும் வெயிலில் ஆஸ்திரேலியாவை பயங்கரமாக சோதித்தனர்.
இருவருமே இதே பெர்த்தில்தான் டெஸ்ட் அறிமுகம் மேற்கொண்டார்கள், இருவருமே தங்களது 5-வது டெஸ்ட் சதத்தை எடுத்தனர், டுமினி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 3-வது சதத்தை எடுத்தார். 225 பந்துகளில் 20 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 141 ரன்கள் எடுத்த டுமினி மேலும் வலுவாகச் செல்லும் நிலையில் சிடிலின் வைடு பந்தை துரத்தி எட்ஜ் செய்தார், நடுவர் அலீம் தார் நாட் அவுட் என்றார் ஆனால் ஸ்மித் ரிவியூ செய்ய மெலிதான எட்ஜ் தெரிந்தது.
ஆனால் டுமினியின் இன்னிங்ஸ் அபாரமானது அவரது நேர் டிரைவ் பவுண்டரிகள், மற்றும் அற்புதமான கவர் டிரைவ்கள் மற்றும் நளினமான தேர்டேமேன் பகுதி பவுண்டரிகள் அவரை ஒரு அற்புதமான டெஸ்ட் வீரர் என்பதை உணர வைத்தது.
ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட், ஸ்டார்க், சிடில் ஆகியோர் அவ்வப்போது மட்டையைக் கடந்து சில பந்துகளை வீசி பீட் செய்ய முடிந்ததே தவிர விக்கெட்டுகள் விழவில்லை, மிட்செல் மார்ஷ் தனது அவ்வப்போது யார்க்கர்கள், ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் பிரச்சினையளித்தாலும் பெரும்பாலும் சிக்கனமாக வீச முடிந்ததே தவிர தேநீர் இடைவேளைக்கு சற்று முன் வரை எல்கர்-டுமினி கூட்டணியை உடைக்க முடியவில்லை.
ஆஸ்திரேலியா பீல்டிங்கும் கொஞ்சம் சொதப்பலாக அமைந்தது, குறிப்பாக எல்கர் 81 ரன்களில் இருந்த போது லயன் பந்தை மேலேறி வந்து ஒரு தூக்குத் தூக்க ஷாட் சரியாகச் சிக்காமல் மிட் ஆஃப் அருகிலேயே மேலே எழும்பியது மிட்செல் ஸ்டார்க் அதனை தவறாகக் கணித்துக் கோட்டை விட்டார். இதே ஓவரில் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக டீன் எல்கர் தவறிய ஷாட்டை சரியாக தூக்கி சிக்சருக்கு அடித்தார் டுமினி. ஸ்டார்க்கைக் குறைகூறி பயனில்லை, காரணம் தொடர்ந்து அவரை பந்து வீசச் செய்து அவர் களைப்படைந்தவராகக் காணப்பட்டார். அவரை அதிக ஓவர்கள் பயன்படுத்தியதால் அவர் லைன் மற்றும் லெந்த் பாதிப்படைய டுமினி அவரை பதம் பார்த்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு அறிமுகமான டீன் எல்கர் அப்போது இரு இன்னிங்ஸ்களிலும் மிட்செல் ஜான்சனிடம் டக் அவுட் ஆகி வெளியேறியது அவரது தூக்கத்தை பலநாட்கள் கெடுத்திருக்கும். இன்று லெக் திசையில் அவர் அதிகம் ரன்கள் அடித்தார், டுமினி ஆஃப் திசையில் அதிகம் ஆடினார். கேட்ச் கோட்டை விட்டதை பயன்படுத்திக் கொண்ட எல்கர், லயன் பந்தை கவர் டிரைவ் செய்து 255-வது பந்தில் சதம் பூர்த்தி செய்தார். பிறகு 316 பந்துகளில் 127 ரன்கள் எடுத்த டீன் எல்கர், ஜோஷ் ஹேசில்வுட் பந்தை கல்லியில் கேட்ச் கொடுத்தது களைப்பினால் என்பது புரிந்தது. ஆனால் இவர்கள் இருவரும் கடும் வெயிலில் ஆஸி. அணியினரை வறுத்து எடுத்தனர் என்றே கூற வேண்டும்.
ஸ்டைலிஷ் பவுமா, மிட்செல் மார்ஷ் பந்தை புல் செய்து மிட்விக்கெட்டில் கவாஜாவின் நல்ல கேட்சிற்கு வெளியேறினார். 32 ரன்கள் எடுத்த ஸ்டார்க், குவிண்டன் டி காக்கிற்கு ஹை கேட்சை வோஜஸ் கோட்டை விட்ட அதே ஓவரில், எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார்.
கடைசியில் 390/6 என்று தென் ஆப்பிரிக்கா வலுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு கடினமான நாளாக அமைந்தது, கடும் வெயில், டுமினி, எல்கரின் வலுவான சுவர் போன்ற பேட்டிங், கோட்டை விட்ட கேட்ச்கள் தென் ஆப்பிரிக்கா 400 ரன்களுக்கும் மேல் முன்னிலை என்று அந்த அணி தோல்வி பயத்தை ஏற்படுத்திய நாளாகும் இது. 2-வது இன்னிங்ஸில் களமிறங்கும்போது டேல் ஸ்டெய்ன் வீசமாட்டார் என்ற ஒரே ஆறுதல் தவிர ஆஸ்திரேலியாவுக்கு இப்போதைக்கு எந்த ஒன்றும் ஆதரவாக இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT