Published : 13 Nov 2022 05:46 AM
Last Updated : 13 Nov 2022 05:46 AM
மெல்பர்ன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று பிற்பகலில் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. போட்டி தொடர்பாக இரு அணி கேப்டன்களும் பேட்டியளித்துள்ளனர்.
‘கடுமையான சவாலை எதிர்பார்க்கிறோம்’: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறும்போது, “வெளிப்படையாக கூறவேண்டு மெனில் பாகிஸ்தான் ஒரு அற்புதமான அணி. சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கிய மிக நீண்ட வரலாறு அவர்களுக்கு இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வருவதற்கு இது ஒரு பெரிய பகுதியாகும். முன்பே குறிப்பிட்டது போன்று நாங்கள் கடினமான சவாலை எதிர்பார்க்கிறோம். சமீப காலங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சில அற்புதமான ஆட்டங்களை மிகுந்த உத்வேகத்துடன் விளையாடி உள்ளோம். அதுபோல தற்போதைய இறுதிப் போட்டியும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். நாங்கள் வெற்றி பெற்றால் அது, கத்தார் உலகக் கோப்பையில் இங்கிலாந்து கால்பந்து அணிக்கு உத்வேகம் அளிக்கும்” என்றார்.
‘பதற்றத்துக்கு பதிலாக உற்சாகமாக இருக்கிறேன்’: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கூறும்போது, “கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் பதற்றத்தைவிட உற்சாகமாக இருக்கிறேன். அழுத்தம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அழுத்தத்தை நம்பிக்கையின் வாயிலாகவும், தன்னம்பிக்கையின் வாயிலாகவுமே கடக்க முடியும். பாகிஸ்தானின் ஓட்டுமொத்த மக்களும் எப்பொழுதும் எங்கள் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் உற்சாகத்தின் மூலம் எங்களை நிலைநிறுத்துகிறார்கள். எங்களுக்கு ஆதரவளித்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு நான் அவர்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றிபெற திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம், மேலும் வேகப்பந்துவீச்சு தாக்குதலை பலமாகப் பயன்படுத்துவோம். பவர்பிளேவில் அதிக விக்கெட்களை கைப்பற்றுவது இன்றியமையாததாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT