Published : 10 Nov 2022 08:11 PM
Last Updated : 10 Nov 2022 08:11 PM
அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டி அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் இந்திய அணிக்கு சில கசப்பான அனுபவங்களும் உள்ளன. அதில் இந்த தோல்வியும் ஒன்றாக அமைந்துள்ளது.
கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று இந்தியா என கருதப்பட்டது. இருந்தாலும் பேட்டிங்கில் சரியான ஓப்பனிங் அமையாதது, மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது, பெரிய அணிகளுக்கு எதிராக அடக்கமுறை ஆட்ட அணுகுமுறை என ஏராளமான ஓட்டைகளும் அணியில் உள்ளன. முக்கியமாக, ஐபிஎல் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு அணி தேர்வு செய்தது மற்றும் டி20 கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டு காலமாக அணியில் அளவுக்கு அதிகமாக பல்வேறு மாற்றங்களை முயற்சி செய்ததும் இந்த தோல்விக்குக் காரணம்.
இன்றைய போட்டியில் இந்திய பவுலர்களால் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவரை கூட வீழ்த்தவே முடியவில்லை. இதற்கு கள வியூகம் சரிவர அமைக்காதது மற்றும் பவுலர்கள் பந்து வீசிய ஓவர்களையும் கூட காரணம் எனச் சொல்லலாம். அதன் காரணமாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்பை பட்லர் மற்றும் ஹேல்ஸ் இணையர் அமைத்தனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது. அதே போலவே இலக்கை விரட்டும் போது விக்கெட் இழப்பின்றி எட்டப்பட்ட இரண்டாவது உச்சபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் உள்ளது. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளை இங்கிலாந்து அரங்கேற்றம் செய்துள்ளது. இதெல்லாம் இந்திய அணியின் மோசமான செயல்பாடு தான்.
இதே அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 2020 டிசம்பர் வாக்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 21.2 ஓவர்களில் வெறும் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. ஷமி, ரிட்டையர்ட் ஆகி இருந்தார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய கிரிக்கெட்டின் கருப்பு நாள் அது. 11 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக அது நடந்தது.
அன்று இதே அடிலெய்டு மைதானத்தில் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து வீழ்ந்தது இந்திய அணி. இன்று மீண்டும் அடிலெய்டில் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வீழ்ந்தது. ஆக, ஆண்டுகள் மாறினாலும் இந்தியாவுக்கு அடிலெய்டில் காட்சிகள் மாறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT