Published : 10 Nov 2022 04:44 PM
Last Updated : 10 Nov 2022 04:44 PM
அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது இங்கிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பட்லர் என இருவரும் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை பந்தாடினர். இதனை இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவர் முதலே அந்த அணி செய்து வந்தது. இருவரும் இறுதி வரை தங்கள் விக்கெட்டுகளை இழக்கவில்லை.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி பவுலிங் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகளை பட்லர் விளாசி இருந்தார்.
அங்கிருந்து தொடங்கிய அதிரடியை அலெக்ஸ் ஹேல்ஸ் அப்படியே அதை தன் பக்கமாக மடை மாற்றினார். ஹேல்ஸ், 47 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். பட்லர், 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 13 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களை விளாசி இருந்தது. 16 ஓவர்கள் முடிவில் அந்த அணி 170 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன் மூலம் வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து விளையாடுகிறது.
புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், அஸ்வின், பாண்டியா என யாராலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து.
இந்திய இன்னிங்ஸ்: அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த கோலி உடன் 47 ரன்களுக்கு ஒரு குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரோகித் சர்மா. அவர் 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன் பின்னர் ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்தார். 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.
16-வது ஓவரின் இரண்டாவது பந்தில் கிறிஸ் ஜார்டன் வீசிய பந்தில் ஆட முடியாமல் அப்படியே நிலைகுலைந்து களத்தில் விழுந்தார் விராட் கோலி. இருந்தும் அடுத்த பந்தில் பவுண்டரி விளாசி அசத்தினார். அதோடு டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டி இருந்தார் கோலி. பாண்டியாவுடன் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அவர் அவுட் ஆகி இருந்தார். 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடங்கும்.
29 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார் பாண்டியா. ரிஷப் பந்த், 6 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பாண்டியா, 33 பந்துகளில் 63 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவுட்டானார். 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் இதில் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது இந்தியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT