சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000+ ரன்கள் குவித்து கோலி புதிய சாதனை
அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் அரை சதம் விளாசி இருந்தார் இந்திய வீரர் விராட் கோலி. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேனாகவும் கோலி அறியப்படுகிறார். முக்கியமாக நடப்பு டி20 உலகக் கோப்பை அதிக ரன்களை குவித்துள்ள பேட்ஸ்மேனாகவும் கோலி உள்ளார். 6 இன்னிங்ஸ் விளையாடி 296 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடந்த 2010 முதல் கோலி விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 115 போட்டிகளில் 107 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். அதன் மூலம் 4008 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் 37 அரை சதங்கள் அடங்கும். 1 சதமும் விளாசி உள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 122 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 52.77. மொத்தம் 117 சிக்சர்கள் மற்றும் 356 பவுண்டரிகளை விளாசி உள்ளார்.
அதோடு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாகவும் கோலி உள்ளார். இந்த தொடரில் 100 பவுண்டரிகளை விளாசி உள்ள முதல் பேட்ஸ்மேனும் அவர் தான். அதோடு டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் மூன்று முறை கோலி விளையாடி உள்ளார். அந்த மூன்றிலும் அரை சதம் விளாசி உள்ளார். 2014 தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அரையிறுதியில் 44 பந்துகளில் 72 ரன்கள், 2016 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 47 பந்துகளில் 89 ரன்கள் மற்றும் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். இப்படி பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் கோலி.
