Last Updated : 09 Nov, 2022 10:16 AM

 

Published : 09 Nov 2022 10:16 AM
Last Updated : 09 Nov 2022 10:16 AM

கணிக்க முடியாத பாகிஸ்தானை சமாளிக்குமா நியூஸிலாந்து?: அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை

சிட்னி: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் கணிக்க முடியாத பாகிஸ்தான் அணி, நிலையான செயல்திறனை வெளிப்படுத்தும் நியூஸிலாந்துடன் மோதுகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் முதலிடம் பிடித்து முதல் அணியாக அரை இறுதியில் கால்பதித்திருந்தது. அந்த அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியனான இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது.

பாகிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறியது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாபர் அஸம் தலைமையிலான அந்த அணி சூப்பர் 12 சுற்றில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது. ஆனால் நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றியதால் பாகிஸ்தான் அணிக்கு புத்துயிர் கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணியை சாய்த்து அரை இறுதி வாய்ப்பை எட்டிப்பிடித்தது.

இரு அணிகளும் பந்து வீச்சை பலமாக கொண்டிருந்தாலும் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் காண்கிறது. இதை நியூஸிலாந்து அணி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பாபர் அஸம், மொகமது ரிஸ்வான் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் மட்டை வீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரிஸ்வான் 5 ஆட்டங்களில் 103 ரன்களே சேர்த்துள்ளார். அதேவேளையில் பாபர் அஸம் 4 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார். வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் 25 ரன்கள் சேர்த்தார்.

பஹர் ஸமானுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள மொகமது ஹாரிஸ் அச்சமின்றி மட்டையை சுழற்றுவது பலம் சேர்ப்பதாக உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 11 பந்துகளில் 28 ரன்களையும், வங்கதேசத்துக்கு எதிராக 18 பந்துகளில் 31 ரன்களையும் விளாசிய அவரிடம் இருந்து மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் வெளிப்படக்கூடும்.

இப்திகார் அகமதுவுடன் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான மொகமது நவாஷ், ஷதப் கான் ஆகியோர் நடுவரிசை பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஷாகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, மொகமது வாசிம் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். இந்த வேகப்பட்டாளம் நியூஸிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் தரக்கூடும். அதிர்ஷ்டம், அதிசயம், தென் ஆப்பிரிக்காவின் தயவு ஆகியவற்றால் அரை இறுதி வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது என்று தன் மீது விழுந்துள்ள முத்திரையை மாற்ற பாகிஸ்தான் அணி முயற்சிக்கக்கூடும்.

நியூஸிலாந்து அணி இதே மைதானத்தில்தான் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இலங்கையை துவம்சம் செய்திருந்தது. இந்த உலகக் கோப்பையில் 20 விக்கெட்களை கூட்டாக வேட்டையாடி உள்ள டிரெண்ட் போல்ட், டிம் சவுதி, லாக்கி பெர்குசன் வேகக்கூட்டணி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். சுழலில் மிட்செல் சாண்ட்னர் பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்தத் தொடரில் அவர், 4 ஆட்டங்களில் 8 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் டேவன் கான்வே, ஃபின் ஆலன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். இதில் பிலிப்ஸ் கடந்த 3 ஆட்டங்களில் ஒரு சதம், 2 அரைசதங்கள் விளாசியுள்ளார். கேன் வில்லியம்சன் அயர்லாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அதிரடிக்கு திரும்பியுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது இறுதிப் போட்டியில் இந்தியா அல்லது இங்கிலாந்துடன்பலப்பரீட்சை நடத்தும். இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தத் தொடரில் சிட்னியில் நடைபெற்ற 6 ஆட்டங்களில் 5-ல் முதலில் பேட் செய்த அணியை வெற்றி பெற்றுள்ளது.

மேத்யூ ஹைடன் (பாக். பேட்டிங் ஆலோசகர்): கேப்டன் பாபர் அஸம் சில துன்பங்களுக்கு ஆளானார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது அவரை மேலும் சிறந்த வீரராக மாற்றும். பாபர் அஸமிடம் இருந்து மிக சிறப்பான ஆட்டம் ஒன்றை காணப்போகிறோம் என்றே நினைக்கிறேன்.

சிட்னி ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூஸிலாந்து 200 ரன்களை குவித்தது. அந்த அணியில் சில அபாயகரமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டை வீச்சால் எதிரணியை அழுத்தத்திற்கு உள்ளாக்குவார்கள். நியூஸிலாந்து அணியினர் பயங்கரமான, நன்கு சமநிலையான பந்துவீச்சு தாக்குதலையும் பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்து அணி இந்தத் தொடரை வெல்ல முடியும் என நம்புகிறார்கள். அதை செய்யக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு உள்ளது. இதனால் எங்கள் அணிக்கு நிறைய அச்சுறுத்தல்கள் உள்ளன. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கேன் வில்லியம்சன் (நியூஸி. கேப்டன்): சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் ஆடுகளம் சிறப்பாக இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிராக இங்கு விளையாடிய போது ஆடுகளத்தின் தன்மை மாறியிருந்தது. நாங்கள் எங்களுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறோம் மற்றும் நாங்கள் செயல்படுத்தவிரும்பும் திட்டங்களில் கவனம் செலுத்துவோம்.

மேலும் நிலைமைகளை சரிசெய்து, புத்திசாலித்தனமாக விளையாட முயற்சிப்போம். பாகிஸ்தான் அணியும் நாங்களும் சில விஷயங்களில் நன்றாக பொருந்தியுள்ளோம். இரு அணிகளுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். ஆட்டத்தின் முடிவு எந்த வகையிலும் செல்லாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x