Last Updated : 08 Nov, 2022 09:12 AM

1  

Published : 08 Nov 2022 09:12 AM
Last Updated : 08 Nov 2022 09:12 AM

மிஸ்டர் 360º சூர்யகுமார் யாதவ் - ஒரு பார்வை

இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவரது மட்டையில் இருந்து எழும் தீப்பொறி போன்ற ஆட்டம் இந்திய அணி போதுமான ரன்களை குவிப்பதில் தடுமாற்றம் காணும் போதெல்லாம் உதவுகிறது.

ஐசிசி-யின் டி 20 தரவரிசை பேட்ஸ்மேன்களில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தனது முதல் டி20 உலகக் கோப்பையிலேயே அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். சூப்பர் 12 சுற்றில் சில அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற சிறந்த பங்களிப்புகளை வழங்கி உள்ளார் சூர்யகுமார் யாதவ்.

சூப்பர் 12 சுற்றில் நேற்று முன்தினம் 82 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மெல்பர்னில் குவிந்திருந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிராக, அவர் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் விளாசினார். மைதானத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பந்தை விரட்டி மிளரச் செய்தார் சூர்யகுமார் யாதவ். அவர் அடித்த ஷாட்கள் பல மிகவும் கடினமான வகையில் அமைந்திருந்தன. ரிச்சர்டு நகரவா வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார் சூர்யகுமார் யாதவ். இதில் ஆஃப் சைடில் மிகவும் வைடாக ரிச்சர்டு வீசிய பந்தை ஸ்டெம்புகளை விட்டு விலகிச் சென்று முழங்காலை மடக்கி, ஸ்கொயர் லெக் திசையில் ஸ்கூப் ஷாட்டாக அடித்தார் சூர்யகுமார். நம்ப முடியாத வகையில் சூர்யகுமார் அடித்த இந்த ஷாட் ஒரு கணம் ரசிகர்களை மலைக்க வைத்தது.

இது மட்டும் அல்ல விக்கெட் கீப்பருக்கு இடது புறம் சிக்ஸர் விளாசியது, எக்ஸ்டிரா கவர் திசையில் பந்தை பறக்க விட்டது, ஸ்டிரைட் டிரைவ் என தனது 360 டிகிரி ஆட்டத்தின் காரணமாகவே மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து முற்றிலும் தனித்து நிற்கிறார் சூர்யகுமர் யாதவ். அவருடைய குறியே பந்து வீச்சாளர்கள் எந்த கோணத்தை தேர்வு செய்து வீசுவார்கள் என்பதுதான். பந்து வீச்சாளர்களின் மனநிலையை நன்கு அறிந்து, இந்த திசையில்தான் வீசுவார் என முன்கூட்டியே கணித்து அதனை தான் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் விளாசுவது என்பது சூர்யகுமார் யாதவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

ஜிம்பாப்வேக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் விளாசிய 61 ரன்கள் தான் இந்தியஅணி மெல்பர்ன் மைதானத்தில் அதிக ரன்கள் (186) குவிக்க காரணமாக அமைந்தது. அவர், மட்டையை நாலாபுறமும் விளாசாமல் இருந்தால் இந்திய அணி 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பு இருந்திருக்கும். 4-வது வீரராக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் பெரும்பாலும் நடுவரிசையில் தான் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

வழக்கமாக இந்த இடங்களில்தான் ரன்கள் சேர்ப்பதில் தேக்கம் ஏற்படும். ஆனால் சூர்யகுமார் யாதவோ களமிறங்கிய முதல் பந்திலேயே மட்டையை விளாசுபவராக வார்த்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான சுதந்திரத்தை அணி நிர்வாகம் அவருக்கு முழுமையாக வழங்கி உள்ளது. இதனால் இந்திய அணியை வலுவான இலக்கிற்கு அழைத்துச் செல்லும் வீரராக மாறி வருகிறார்.

தற்போதைய டி20 உலக கோப்பையில் 225 ரன்களை குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறார். அதேவேளையில் டி20 உலகக் கோப்பையில் அதிக அளவிலான ஸ்டிரைக் ரேட்டையும் (193.96) கொண்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “ரப்பர்-பால் கிரிக்கெட் விளையாடும்போது இதுபோன்ற வித்தியாசமான ஷாட்களை பயிற்சி செய்திருக்கிறேன். பந்து வீச்சாளர் என்ன நினைக்கிறார், பீல்டிங் உள்ளே இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்வேன். மேலும் நமக்கு பின்னால் உள்ள எல்லைக்கோடு எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். நான் களத்தில் நிற்கும்போது எல்லைக்கோடு 60-65 மீட்டர் தூரம் இருப்பதாகவே உணர்வேன். பந்து வரும் வேகத்தைக் கணித்து, சரியான நேரத்தில் மட்டையின் சரியான இடத்தில் பந்தை அடிக்க வேண்டும். பந்தை, மட்டை சரியாக தாக்கினால் இது எல்லைக்கோட்டை தாண்டி செல்லும்” என்கிறார் மிஸ்டர் 360 டிகிரி.

சூர்யகுமார் யாதவை (SKY) ‘வானமே எல்லை’ என டி.வி. வர்ணணையில் புகழ்வார்கள். டி வில்லியர்ஸின் மறு உருவாக்கமாக களத்தில் எத்திசைக்கும் பந்துகளை வெளுத்து வாங்கும் சூர்யகுமார் யாதவ், டி 20 உலகக் கோப்பையில் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் பந்துகளை வான் நோக்கி பறக்கவிட்டால் சாம்பியன் பட்டம் வெல்லும் இடத்தில் இந்திய அணி இருக்காமல் போக வாய்ப்பில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x