Published : 07 Nov 2022 03:42 PM
Last Updated : 07 Nov 2022 03:42 PM
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் மாலிக், ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை மனதார புகழ்ந்துள்ளனர். அவரது ஆட்டம் தங்களுக்குள் ஏற்படுத்திய ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் அவர்கள் அனைவரும்.
அதுவும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அசாத்தியாமன ஷாட்களை ஆடி அசத்தி இருந்தார் அவர். அதிலும் முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவர் விளாசிய சிக்ஸரை வேறு எந்தவொரு வீரராலும் ஆடி இருக்க முடியாது. அப்படி ஒரு நம்ப முடியாத ஷாட் அது.
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் கடைசி 5 ஓவர்கள் ஸ்ட்ரைக் ரேட் 200 சதவீதத்துக்கும் மேல். கிரிக்கெட் உலகில் கடைசி ஓவர்களில் இதைவிட சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் யாரும் இல்லை என்றே கூறிவிடலாம். களத்தில் இருக்கும் கேப்களை (இடைவெளி) இவர் கண்ணுக்கு புலப்படுவதும், அங்கு ஷாட்கள் ஆடுவதும் அவருக்கு மட்டுமே வெளிச்சம். இவரது அதிரடி ஆட்டத்தை அணை போட்டு கட்டுப்படுத்தும் வியூகத்தை அமைப்பது எதிரணி கேப்டன்களுக்கு கொஞ்சம் சவாலான டாஸ்க் தான்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தின் பிரமிப்பிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. அவரது ஆட்டம் குறித்து அவர்கள் சொல்லியுள்ளது இதுதான்..
வாசிம் அக்ரம்: “அவர் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் என்றே நினைக்கிறேன். அனைவரையும் விட முற்றிலும் வித்தியாசமானவராக இருக்கிறார். கணக்கே இல்லாமல் ரன்களை குவிக்கிறார். இவர் ஆட்டத்தை பார்ப்பதே ஒரு பெரிய விருந்தாக இருக்கிறது. ஜிம்பாப்வே அணி மட்டுமல்ல உலகின் தலைசிறந்த பவுலிங் யூனிட்டை எல்லாம் பதம் பார்த்து வருகிறார். அவருக்கு பயம் என்பது அறவே இல்லை. கிரிக்கெட் பந்தை அவர் அணுகும் விதம்தான் அதற்கு உதாரணம். அவரது ஆட்டத்தை பார்க்க பார்க்க பிடித்து போகிறது” என சொல்லியுள்ளார்.
வக்கார் யூனிஸ்: “சூர்யாவுக்கு எந்த லைனில் பந்தை வீசுவது என்பதே பவுலர்களின் கேள்வியாக உள்ளது. டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரை அவுட் செய்யும் பந்து எது என்பதை நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரை ஒருவிதமாக ஆட செய்து விக்கெட்டை வீழ்த்தலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் எப்போதும் பேட்டர்களுக்கு பயந்தவர்களாகவே இருக்க வேண்டி இருக்கிறது. அதுவும் சூர்யகுமார் யாதவ் போன்ற ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்ட பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.
எந்த இடத்தில் பந்தை வீசினாலும் அதனை அடிக்க முடியாத இடத்தில் அடித்து துவம்சம் செய்கிறார். இவர் மைதானத்தின் 360 டிகிரி கோணத்திலும் ஆடும் வீரர். அவர் அடிக்கும் பவுண்டரிகளை பாருங்கள். ஸ்கூப் ஆடுகிறார், இன்சைட் அவுட் ஷாட் ஆடுகிறார். பேக்வர்ட் பாயிண்டில் அடிக்கிறார், பவுலர் தலைக்கு மேல் அடிக்கிறார், தரையோடு தரையாக அடிக்கிறார், அவரால் இந்த ஷாட் ஆடவே முடியாது என சொல்லவே முடியாது. அவரை பவுன்சர்கள் கொண்டுதான் அடக்க முடியும். இதை ஓரளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் செய்தனர். இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடினால், அங்கு மீண்டும் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக பார்க்க ஆவலாக உள்ளது” என தெரிவித்துள்ளார்
ஷோயப் மாலிக்: “சூர்யகுமார் யாதவை மிகச்சிறந்த மாணவராக நான் பார்க்கிறேன். தனது அபார ஆட்டத்திற்காக அவர் நிறையை பயிற்சிகளை வீட்டுப் பாடம் போல செய்திருக்கிறார். அவர் ஆடும் ஒவ்வொரு ஷாட்டும் அழகோ அழகு. அதனை பலமுறை அவர் பயிற்சி செய்திருக்க வேண்டும். அதுதான் அவரது வெற்றிக்குக் காரணம்” என தெரிவித்துள்ளார்.
ஷாஹித் அஃப்ரிடி: “சூர்யகுமார் யாதவ் 250-க்கும் மேற்பட்ட உள்நாட்டு அளவிலான போட்டிகளில் விளையாடிவிட்டு இந்திய அணிக்கு வந்துள்ளார். தன் ஆட்டத்தைப் பற்றி அவர் மிக நன்றாக அறிந்து வைத்துள்ளார். சிறந்த லைன் மற்றும் லெந்த்தில் வீசப்படும் பந்துகளையும் அவரால் பவுண்டரிக்கு விரட்ட முடிகிறது. நிறைய பயிற்சி மேற்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது” என சொல்லியுள்ளார்.
இவர்கள் எல்லோரும் சொல்வதை போல அவருக்கு வானமே எல்லை என்ற பாணியில்தான் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். அவரது பேட்டில் படும் பந்துகள் ஒவ்வொன்றும் ‘சும்மா சுர்ரென’ பவுண்டரி லைனை கிடைக்கிறது. அதன் காரணமாகதான் அவர் நடப்பு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார். அதோடு ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 வீரராகவும் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT