Published : 07 Nov 2022 02:52 PM
Last Updated : 07 Nov 2022 02:52 PM

நெதர்லாந்துக்கு நன்றி சொல்லிய பாபர்: வென்று விடுங்கள் என்ற கூப்பர் | சுவாரஸ்ய உரையாடல்

கோப்புப்படம்

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் எதிர்பாராத வகையில் மற்ற அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களில் கிடைத்த முடிவின் காரணமாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல பாதை அமைத்துக் கொடுத்த நெதர்லாந்துக்கு நன்றி சொல்லி இருந்தார் பாபர் அசாம். ‘போட்டியில் வென்று விடுங்கள். அது போதும் எங்களுக்கு’ என்ற தொனியில் நெதர்லாந்து வீரர் டாம் கூப்பர் அதற்கு பதில் அளித்திருந்தார். அந்த வீடியோ கவனம் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதற்கு பிரதான காரணமே அதிர்ஷ்டம்தான். ஏனெனில் கோப்பையை வெல்லும் என பெருவாரியான ரசிகர்கள் எதிர்பார்த்த தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது. உலகக் கோப்பை, மழை கொடுக்கும் அப்செட், அதிர்ச்சி தோல்வி என்பது ‘மாநாடு’ படத்தில் வரும் டைம் லூப் போல ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடர் கதையாகி உள்ளது.

நெதர்லாந்து - தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் - வங்கதேசம் என இந்த அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 சுற்றின் மிகமுக்கியமான போட்டிகள் அடிலெய்ட் மைதானத்தில் ஒரே நாளில் நடைபெற்றது. அதுவும் அடுத்தடுத்து இந்த போட்டிகள் நடந்ததன் காரணமாக நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் ஒருவரை ஒருவர் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அப்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், நெதர்லாந்து வீரர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

“நீங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள். அப்போதுதான் நாங்கள் பட்டியலில் நான்காவது இடம் பிடிக்க முடியும்” என நெதர்லாந்து வீரர் டாம் கூப்பர், பாபரிடம் சொல்லி இருந்தார். அவர் சொன்னதை போலவே பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்றது. இப்போது நெதர்லாந்து அணி வரும் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x