Published : 06 Nov 2022 05:05 PM
Last Updated : 06 Nov 2022 05:05 PM
மெல்போர்ன்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி அணிக்கு ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. 3 ஓவர் வரை 18 ரன்கள் சேர்ந்த இந்த இணையை முசரபானி பிரிக்க ரோஹித் சர்மா 15 ரன்களில் வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்த விராட் கோலி - கே.எல்.ராகுலுடன் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கே.எல்.ராகுல் அதிரடி காட்டிக்கொண்டிருந்தபோது, 12-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 26 ரன்களுடன் களத்திலிருந்து நடையைக்கட்டினார் கோலி.
அவர் சென்ற சிறிது நேரத்தில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ராகுல் 35 பந்துகளில் 51 ரன்களை குவித்துவிட்டு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ரிஷப் பண்ட் 3 ரன்களில் கிளம்பினார். இதனால் 15 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை சேர்த்திருந்தது. அவர்களைத்தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்ட்யா - சூர்யகுமார் யாதவ் இணை அணிக்கு பலம் சேர்த்தது. கடைசி ஓவரில் ஹர்திக் 18 பந்துகளில் 18 ரன்களை சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 186 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 61 ரன்களுடனும், அக்சர்படேல் ரன் எதுவும் இல்லாமல் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் ஷேன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராஜா, ரிச்சர்ட், முசர்பானி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
187 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ரெஜிஸ் ஜக்பவா - கிரேக் எர்வின் இணை தொடக்கம் கொடுத்தது. மோசமான தொடக்கத்தைக் கொடுத்த இந்த இணையை 2 ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார். தொடக்கத்திலிருந்த அந்த அணியின் பொறுப்பற்ற ஆட்டத்தால் வெஸ்லி (0), சீன் வில்லியம்ஸ் (11), கிரேக் எர்வின் (13), டோனி முன்யோங்கா (5) என பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் களத்திற்கு வந்ததும் பெவிலியன் திரும்பினர். இதனால் 10 ஓவர் முடிவிலேயே அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
வருவதும் போவதுமாக இருந்த வீரர்களுக்கு இடையே ரியான் பர்ள் 35 ரன்களை சேர்த்து தனக்கான பங்களிப்பை கொடுத்துவிட்டு வெளியேறினார். 15 ஓவரில் வெலிங்டன் மசகட்சா (1), ரிச்சர்ட் (1) வந்ததும் வெளியேற அணியின் நிலைமை மோசமடைந்தது. 35 ரன்களை சேர்த்து இந்திய வீரர்களின் பந்துவீச்சில் தாக்குப்பிடித்துக் கொண்டிருந்த சிக்கந்தரும் வெளியேற ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார், அர்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT