Published : 06 Nov 2022 02:10 PM
Last Updated : 06 Nov 2022 02:10 PM

T20 WC | அரையிறுதியில் பாகிஸ்தான் - வங்கதேச கனவை தகர்த்த ஷாஹின் அஃப்ரீடி

அடிலெய்டில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியின் 41-வது ஆட்டத்தில் வங்கதேசத்தின் அரையிறுதிக் கனவைத் தகர்த்தது, பாகிஸ்தான் அரையிறுதியில் நுழைந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் 1.028 என்ற நெட் ரன் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது.

வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட் செய்து 11வது ஓவரில் 73/1 என்ற வலுவான நிலையிலிருந்து ஷாஹின் அஃப்ரீடி, ஷதாப் கான் பந்து வீச்சில் சீட்டுக்கட்டு போல் சரிந்து, 20 ஓவர்களில் 127/8 என்று முடிந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான், 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா சந்தேகத்துக்குரிய விதத்தில், நெதர்லாந்திடம் தோல்வி அடைந்ததால், இந்தியா அரையிறுதியில் நுழைந்ததோடு பாகிஸ்தான், வங்கதேச போட்டியை நாக் அவுட் காலிறுதிப்போட்டி போல் ஆக்கிவிட்டது. இதனையடுத்து இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி செல்லும் என்ற நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்தது.

73/1 என்ற நிலையிலிருந்து ஷதாப் கானின் டபுள் விக்கெட் மற்றும் ஷாகிப் அல் ஹசனின் சர்ச்சை அவுட்: டாஸ் வென்ற வங்கதேசம் இன்று லிட்டன் தாஸ் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தது. லிட்டன் தாஸ் ஒரு சிக்சர் விளாசி 10 ரன்களில் ஷாஹின் அப்ரீடியின் ஷார்ட் பிட்ச் பந்தை பேக்வர்ட் பாயிண்டில் ஷான் மசூதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது ஓவரில் 21/1 என்ற நிலையிலிருந்து தொடக்க வீரர் ஷாண்ட்டோவும் சவுமியா சர்க்காரும் வெளுத்து வாங்கினர், மிகப்பிரமாதமாக ஆடினர், குறிப்பாக ஷாண்ட்டோ ஒரு ஜெம் ஆஃப் எ இன்னிங்ஸை ஆடினார் என்றே கூற வேண்டும். இருவரும் ஸ்கோரை 11வது ஓவரின் போது 73 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது, சவுமியா சர்க்கார் 20 ரன்களில் ஷதாப் கான் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்த பந்தே கேப்டன் ஷாகிப் உல் ஹசன் இறங்கி வந்து தன்னைத்தானே யார்க் செய்து கொண்டார். பந்து ஃபூட்டில் பட்டது. ஆனால் நன்றாக மேலேறி வந்த அவருக்கு எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் விடுவாரா? ரிவியூ செய்தார். ஷாகிப்-அல்-ஹசன் சுமார் 3 மீட்டர்கள் மேலேறி வந்தும் எப்படி அவுட் கொடுக்கப்பட்டது என்பதுதான் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ரிவியூவில் இதை எப்படி பார்க்காமல் விட்டார்கள். மேலும் பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆன லெக் ஸ்டம்ப் பந்து ஷாகிப் இடது கை வீரர், பந்து லெக் ஸ்டம்பை நோக்கியல்லவா சென்றிருக்க வேண்டும்.

ஆனால், பால் ட்ராக்கிங்கில் பந்து ஏதோ கூக்ளி போல் ஆஃப் ஸ்டம்ப்பை அடிப்பது போல் காட்டியது. இது எப்படி சாத்தியம்? ஏதோ கோளாறு, தீர்ப்பு சரியில்லை என்று மட்டும் தெரிகிறது. 3 அடிக்கும் மேல் இறங்கி வந்த பேட்டருக்கு எப்படி எல்.பி கொடுக்க முடியும்? இரண்டாவது பந்து லெக் ஸ்பின் ஆகியிருக்கும். அப்படியானால், அது லெக் ஸ்டம்பை அடிக்கும் அல்லது லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும். ஆனால் ரிவியூவில் எப்படி ஆஃப் ஸ்டம்பில் அடிப்பது போல் காட்டியது? உஷ்! கண்டுக்காதீங்க! எப்படி தென் ஆப்பிரிக்கா தோற்றது உஷ் கண்டுக்காதீங்க தருணமோ அதே போல் இதையும் சொல்ல முடியும்.

எது எப்படியோ ஷாகிப் உல் ஹசன் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஷாண்ட்டோ அருமையாக ஆடி 7 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அடுத்ததாக இப்திகாரின் பிரெண்ட்லி ஆஃப் ஸ்பின் பந்தை அடிக்க முயல, அவர் பந்தை கொஞ்சம் இழுத்து விட கிளீன் பவுல்டு ஆகி வெளியேறினார். 13.2 ஓவர்களில் 91/4 என்ற நிலையில் அபீப் ஹுசைன் ஒரு முனையில் 24 ரன்கள் எடுத்துத் தேங்க மறு முனையில் ஷாஹின் அப்ரீடி, மொசடக் ஹுசைன், நுருல் ஹசன், டஸ்கின் அகமது ஆகியோரை ஒற்றை இலக்கத்தில் காலி செய்ய, நசும் அகமதுவை ராவுஃப் வீழ்த்த 73/1 லிருந்து வங்கதேசம் 54 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 127 ரன்களை எடுத்தது.

பாகிஸ்தான் வெற்றி! பேட்டிங் பிட்சில் 128 ரன்கள் ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் சொதப்பி விடக்கூடாது என்பது, ரிஸ்வானும், பாபர் அசாமும் தெளிவாக ஆடி, 10 ஒவர்களில் 57 ரன்களை நிதானமாகச் சேர்த்தனர். பாபர் அசாம் 25 ரன்களில் வெளியேறினார். ரிஸ்வான் 32 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து எபாதத் ஹுசைனிடம் வீழ்ந்தார்.

முகமது நவாஸ் லிட்டன் தாஸின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். 15வது ஓவரில் 92/3 என்று இருந்தது பாகிஸ்தான் ஆனால், அதன் பிறகு அவசர அடி முகமது ஹாரிஸ் இறங்கி 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 18 பந்துகளில் 31 ரன்களை விளாச, ஷான் மசூத் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வெற்றிக்கு இட்டு சென்றனர். 18.1 ஓவரில் 128/5 என்று பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் ஷாஹின் அப்ரீடி. பாகிஸ்தான் இந்தப் பிரிவில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

ஷாகிப் உல் ஹசன் அவுட்டில் இரண்டு மூன்று தவறுகள் இருந்தன, முதலில் களநடுவர் எப்படி அவுட் கொடுத்தார் என்பது முதல் கேள்வி, 2-வதாக ரிவியூவில் அவர் 3 மீட்டர் இறங்கி வந்ததைப் பார்க்காமல் எப்படி அவுட் கொடுக்க முடியும்? மூன்றாவது, பந்து லெக் ஸ்பின் ஆகியிருந்தால் அம்பயர்ஸ் கால் ஆகியிருக்கலாம் அல்லது வெளியே போயிருக்கலாம். அந்தப் பந்து எப்படி ஆஃப் மற்றும் மிடில் ஸ்டம்பைத் தாக்குமாறு ரிவியூ காட்டியது? இது நிச்சயம் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பவே செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x