Published : 04 Nov 2022 05:35 PM
Last Updated : 04 Nov 2022 05:35 PM
அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான். இருந்தாலும் இந்தப் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா.
இந்தப் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் விரட்டியது.
மறுமுனையில் நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற ஆப்கானிஸ்தானை 106 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கனி, 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து குர்பாஸ் அவுட்டானார்.
அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டிற்கு இணைந்த இப்ராஹிம் சத்ரான் மற்றும் குல்பதின் நைப் 59 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஆட்டம் ஆப்கானிஸ்தான் வசம் இருந்தது.
திருப்பம் கொடுத்த 14-வது ஓவர்: ஆப்கானிஸ்தான் அணி 13 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. 14-வது ஓவரை ஆடம் சாம்பா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சத்ரான், டீப் மிட்-விக்கெட்டில் பந்தை தட்டிவிட்டு இரண்டு ரன்கள் எடுக்க முயன்றார். ஆனால் அந்த பந்தை பிடித்த மேக்ஸ்வெல், நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் டைரக்ட் ஹிட் அடித்து குல்பதினை 39 ரன்களில் வெளியேற்றினார்.
அடுத்த பந்தில் சத்ரான், ஸ்வீப் ஷாட் ஆட முயன்று அது டாப் எட்ஜ் ஆகி மிட்சல் மார்ஷ் கைகளில் தஞ்சம் ஆனது. அதனால் 26 ரன்களில் அவர் வெளியேறினார். தொடர்ந்து அதே ஓவரின் நான்காவது பந்தில் தேவையில்லாத ஷாட் ஆடி நஜிபுல்லா ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதற்கடுத்த ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி வெளியேறினார்.
அதிரடியில் மிரட்டிய ரஷித்: பின்னர் களத்திற்கு வந்த ரஷித் கான் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் எடுத்தார். இருந்தாலும் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 16 ரன்களை மட்டுமே ஆப்கன் எடுத்தது. அதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய பவுலர்களில் கேன் ரிச்சரட்சன், 4 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட் மட்டும் வீழ்த்தி 48 ரன்களை கொடுத்திருந்தார். கம்மின்ஸ் மற்றும் சாம்பாவும் தங்கள் ஓவர்களில் அதிக ரன்கள் கொடுக்காமல் எக்கானமியாக பந்து வீசி இருந்தனர்.
நாளை இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT