Published : 03 Nov 2016 06:44 PM
Last Updated : 03 Nov 2016 06:44 PM
ஷார்ஜா டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றியில் 142 மற்றும் 60 நாட் அவுட் என்று 2 நாட் அவுட்கள் மூலம் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட் புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அதாவது ஒரு தொடக்க வீரர் ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் இருக்கும் சாதனை ஒன்றை முதன் முதலாக உருவாக்கியுள்ளார் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட்.
ஷார்ஜா வெற்றியில் முதல் இன்னிங்சில் 142 ரன்கள் என்று தொடக்கத்தில் இறங்கி அணி ஆல் அவுட் ஆன போதும் ஒரு முனையில் நாட் அவுட்டாக இருந்த கிரெய்க் பிராத்வெய்ட் 2-வது இன்னிங்ஸில் 60 நாட் அவுட் என்று மே.இ.தீவுகளின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த ஆட்டத்தில் நாயகன் விருது பெற்ற கிரெய்க் பிராத்வெய்ட்டுக்கு இது 4வது ஆட்ட நாயகன் விருதாகும். கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆட்ட நாயகன் விருது வென்ற பேட்ஸ்மென்கள் டெஸ்ட் மட்டத்தில் மே.இ.தீவுகள் அணியில் இல்லை.
மே.இ.தீவுகளின் விக்கெட் கீப்பர் ஒருவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 40 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுப்பது 1988-க்குப் பிறகு ஷார்ஜா டெஸ்ட் போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. லார்ட்சில் 1988-ல் ஜெஃப் டியூஜான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கண்ட பிறகு தற்போது ஷேன் டவ்ரிச் 47 மற்றும் 60 நாட் அவுட் என்று இரண்டு இன்னிங்ஸ்களிலும் அருமையாக ஆடியுள்ளார்.
டாப் 8 அணிகளுக்கு எதிராக மே.இ.தீவுகளுக்கு வெளியே மே.இ.தீவுகள் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் எடுத்தது 2004-ம் ஆண்டில். இது செஞ்சூரியன் மைதானத்தில் நிகழ்ந்தது. தற்போது மே.இ.தீவுகளுக்கு வெளியே மற்றொரு தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட் அதே சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக யு.ஏ.இ.யில் ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் எடுத்ததும் பிராத்வெய்ட்டின் ஒரு சாதனையே.
அதே போல் 6-வது விக்கெட்டுக்காக பிராத்வெய்ட், டவ்ரிச் சேர்த்த ஆட்டமிழக்காத 87 ரன்கள் கூட்டணி 4-வது இன்னிங்ஸில் மே.இ.தீவுகளின் சிறந்த 6-வது விக்கெட் கூட்டணியாகும்.
மே.இ.தீவுகள் கேப்டன் வெற்றிக்கான பங்களிப்பாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 8-வது முறையாகும். ஹோல்டர் இந்த வகையில் கேரி சோபர்ஸ், கார்ட்னி வால்ஷ் ஆகியோருடன் இணைந்துள்ளார், ஆனால் இவர்கள் இருவரும் இருமுறை இதனைச் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT