Published : 03 Nov 2022 01:57 AM
Last Updated : 03 Nov 2022 01:57 AM
அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின்போது விராட் கோலியின் செயலுக்கு ஷகிப் அல் ஹசன் அதிருப்தி தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார். இதன்மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே வசம் இருந்த சாதனையை அவர் தகர்த்துள்ளார்.
இந்தப் போட்டியில் 16 ரன்களை எடுத்தபோது 1016 ரன்களை எடுத்திருந்த ஜெயவர்த்தனேவை கடந்தார். அதன்மூலம் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆனார். டி20 உலகக் கோப்பையில் அதிக அரைசதம் விளாசிய வீரரும் அவர்தான். அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கோலி 37 பந்துகளில் அரை சதம் விளாசினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பையில் அவர் பதிவு செய்துள்ள மூன்றாவது அரை சதம் ஆகும்.
இதனிடையே, பேட்டிங்கின்போது ஹசன் மஹ்மூத் வீசிய 16வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார் கோலி. அப்போது பந்து ஷார்ட் பாலாக வர, ஸ்கொயர் லெக் நடுவரிடம் அதை நோபாலாக அறிவிக்க முறையிட்டார். உடனடியாக வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஓடி வந்து, நடுவரை நோக்கி அதை நோபாலாக அறிவிக்கக்கூடாது என்று முறையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது கோலியும், ஷகிப் அல் ஹசனும் சிரித்துக்கொண்டே இருவரும் கட்டித்தழுவினர். இந்தக் காட்சிகள் இப்போது வைரலாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT