Last Updated : 15 Nov, 2016 08:18 PM

 

Published : 15 Nov 2016 08:18 PM
Last Updated : 15 Nov 2016 08:18 PM

அணியில் இளம் வீரர்களை சேர்க்க வேண்டும்: தோல்வியினால் கடும் அதிருப்தி அடைந்த ஸ்டீவ் ஸ்மித்

தென் ஆப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனக்கு மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்றார்.

அதாவது பேட்டி முழுதும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், கோபம், ஏமாற்றம், வெறுப்பு, காயம் போன்றவையாகவே இருந்தது.

“உங்களிடம் நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் இங்கு வந்து உட்காரவே தர்மசங்கடப்படுகிறேன். அடிக்கடி தொடர்ந்து விக்கெட்டுகள் சரிவடைவதை சந்தித்து வருகிறோம். இன்று 8 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தோம் முதல் இன்னிங்சில் 85 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தோம். இப்படி இருந்தால் ஆட்டத்தில் வெற்றி எப்படி வரும்? இது மிகவும் சீரான முறையில் நடந்து வருவது எனக்குப் பிடிக்கவில்லை.

நாங்கள் பதிலடி கொடுக்கவில்லை, கடினமான நேரத்தில் மன உறுதியுடன் மேலும் கடினமாக நாம் ஆட வேண்டும் ஆனால் அவ்வாறு நிகழவில்லை. விக்கெட் பவுலிங்குக்குச் சாதகமாக இருந்தாலும் களத்தில் நின்று அந்தக் கடின காலக்கட்டத்தை எதிர்கொண்டு ஒரு சவாலை ஏற்படுத்த முயல வேண்டும், கூட்டணிகளை கட்டமைக்க வேண்டும்.

பயிற்சியாளர் டேரன் லீ மேன் தவறு இதில் எதுவுமில்லை, அவர் அருமையாகவே தயார்படுத்துகிறார், ஆனால் களத்தில் போய் செயலாற்றுவது வீரர்கள் கடமையல்லவா? நாங்கள் நன்றாகவே தயாரானோம், ஆனால் களத்தில் அதனை செயல்படுத்தத் தவறினோம். அணித்தேர்வாளர்களுடன் அமர்ந்து சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும்.

பந்து ஸ்விங் ஆனாலும் ஸ்பின் ஆனாலும் எங்களிடம் இப்போதைக்கு அதற்கு விடையில்லை. எங்களது விக்கெட் மீது எங்களுக்கு எந்த வித மதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. இனி எந்த ஒரு அணியை வீழ்த்தவும் நிச்சயம் பயங்கரமாக முன்னேற வேண்டிய நிலையே உள்ளது. பிட்சில் ஒன்றுமில்லை என்றால் அடித்து ஆடலாம், ஆனால் ஸ்விங், ஸ்பின் ஆகிறது என்றால் நாங்கள் இப்போது சரியாக ஆடுவதில்லை. நாங்கள் அதிக நேரம் களத்தில் நின்று அதனை எதிர்கொள்ளவில்லை.

எங்களது தடுப்பாட்டம் சவாலுக்குள்ளாகியுள்ளது. எங்கள் தடுப்பாட்டம் நல்ல முறையில் இல்லை. சிலர் சில நேரங்களில் பெரிய ஸ்கோர்களை எடுக்கின்றனர். ஆனால் பிறகு சீராக ஆடுவதில்லை. ஒருவருமே முனைந்து வந்து பெரிய சதங்களையோ, அல்லது தொடர்ச்சியாக 3 சதங்களையோ அடிப்பதில்லை. எனவே இளம் வீரர்களை அணியில் கொண்டு வந்து இந்த மட்டத்தில் ஆட அவர்களை தயார் செய்ய வேண்டும்” என்கிறார் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x