Published : 01 Nov 2022 08:05 PM
Last Updated : 01 Nov 2022 08:05 PM

T20 WC அலசல் | பட்லர் கேட்ச்சை தவறவிட்ட நியூஸிலாந்து... வில்லியம்சனின் நிதான ஆட்டத்தால் தோல்வி!

இங்கிலாந்து அணி வீரர்கள்

பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி மிக முக்கியமான வெற்றியைப் பெற்றது. 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி தங்கள் அரையிறுதி வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது இங்கிலாந்து. அதனால் இதே பிரிவில் உள்ள நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இப்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதை சொல்லும்போது இன்னொன்றையும் நாம் சொல்லி விடுவது நல்லது. வரும் சனிக்கிழமையன்று சிட்னியில் இங்கிலாந்து அணிஇலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்று, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தால் நிலைமை இன்னும் சிக்கலாகும்.

பட்லர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்ட கேன் வில்லியம்சன் மற்றும் மிட்செல்: இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், இலக்கை விரட்டுவது கடினமாகி விடுகிறது என்பதை உணர்ந்து, இன்று முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார். அதைவிட தன் வாழ்நாளில் அவர் சில பல முக்கியத்துவம் வாய்ந்த இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால் அவை அனைத்தையும் விட இந்த இன்னிங்ஸ் மிக மிக முக்கியமான ஒரு தருணத்தில் வந்தது என்றால் மிகையாகாது. ஆனால் இதற்கு நியூஸிலாந்துதான் முழு காரணம். கேன் வில்லியம்சன், மிட்செல் என இருவரும் தங்களுக்கு வந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டது தான் இங்கிலாந்தின் வெற்றிக்கு 50% காரணம் என சொல்லலாம்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ், சிக்சர்களும், பவுண்டரிகளும் விளாசி இங்கிலாந்து தலையில் இடியை இறக்கிக் கொண்டிருந்தார். இருந்தாலும் மறு முனையில் கேன் வில்லியம்சன், டைமிங் கிடைக்காமல் தவித்தார். 40 பந்துகளில் வெறும் 40 ரன்களையே எடுத்து ஆமை வேகத்தில் ஆடிய காரணத்தால் நியூஸிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

பட்லர் 47 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், 40 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 52 ரன்களை எடுத்தார். லியாம் லிவிங்ஸ்டன், 20 ரன்களை எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை எடுத்திருந்தனர். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

தொடக்கத்தில் டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட் ஓவர்களில் நிதானம் காட்டினர் பட்லரும் ஹேல்ஸும். பவர் ப்ளேயில் 3 ஓவர்களுக்குப் பிறகு ஹேல்ஸ் பேட்டை சுழற்ற தொடங்கினார். அவர் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க பவர் ப்ளேயில் இங்கிலாந்து 48 ரன்கள் எடுத்தது. சவுதியில் தலைக்கு மேல் நேர் திசையில் சிக்சர் விளாசினார் ஹேல்ஸ். அதோடு ஆஃப் சைடில் 2 பவுண்டரிகளை விளாசினார்.

முன்னதாக, பட்லர் 8 ரன்கள் எடுத்திருந்தார் போது 6-வது ஓவரில் சான்ட்னர் வீசிய பந்தை கவரில் தூக்கி அடித்தார். அந்த ஷாட் சரியாகச் சிக்கவில்லை. கேன் வில்லியம்சன், பின் பக்கமாக ஓடிப்போய், அந்த கேட்சை எடுத்தார். பந்து அவர் கையிலிருந்து நழுவியது. டைவ் அடித்துப் பிடித்து விட்டார் என்று பட்லரும் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். ஆனால் கள நடுவர் அதை ரீப்ளே கேட்க, கேன் வில்லியம்சன் மிகத் தெளிவாக பந்து தரையில் பட்டவுடன் எடுத்துவிட்டு கேட்ச் என்று நாடகமாடியது தெரிந்தது. பின்னர் பட்லர் பேட் செய்தார்.

பிற்பாடு இந்த கேட்சைப் பற்றி கேட்ட போது, “நான் பந்தை விட்டு விட்டேன் என்று எனக்குத் தெரியும். 2-வது முறை நெஞ்சோடு பந்தை அமுக்கிப் பிடித்ததாக நினைத்தேன். கடைசியில் தர்ம சங்கடமாகிவிட்டது” என்று உண்மையை வில்லியம்சன் ஒப்புக் கொண்டார். மீண்டும் பட்லர் 40 ரன்கள் எடுத்திருந்த போது, பெர்கூசன் வீசிய பந்தை புல் ஆடினார். அது நேராக மிட்செல் கையில் போய் உட்கார்ந்தது. ஆனால் அதை அவர் டிராபி செய்தார். அதற்கு பிறகு அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் பட்லர்.

அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து, சான்ட்னர் பந்தில் கான்வேயிடம் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். முதல் விக்கெட்டுக்காக பட்லர், ஹேல்ஸ் ஜோடி 10.2 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்தது. சான்ட்னர், இஷ் சோதி ஆகியோர் இங்கிலாந்தை கொஞ்சம் கட்டிப்போட்டனர். மொயின் அலியை மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறக்கினர். ஆனால் அவர் சோபிக்கவில்லை. 5 ரன்களில் இஷ் சோதி பந்தை தூக்கி அடித்து லாங் ஆனில் கேட்சை கொடுத்தார். இந்தக் கேட்சையும் ஏறக்குறைய போல்ட் விட்டிருப்பார், எப்படியோ தவறிய பந்தை பிடித்துக்கொண்டார். பட்லர் 35 பந்துகளில் தன் அரைசதத்தை எட்டினார். லியாம் லிவிங்ஸ்டன், இருமுறை ஸ்கூப் ஷாட் ஆடப்போய் தோல்வியடைந்து கடைசியில் பெர்கூசன் யார்க்கரில் காலியானார்.

பிறகு ரெகுலராக விக்கெட்டுகளை வீழ்த்தியது நியூசிலாந்து. ஹாரி புரூக் (8) ஒரு சிக்ஸ் அடித்து அடுத்த சிக்சர் முயற்சியில் வெளியேறினார். பட்லர் ரன் அவுட் ஆனார். பின் வரிசையில் இறக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 7 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் கட்டிப் போடப்பட்டு கடைசியில் பெர்கூசனிடம் வீழ்ந்தார். சாம் கர்ரன் களம் இறங்கி ஒரு பெரிய சிக்சரை விளாசினார். டேவிட் மலான், கடைசி ஓவரில் 3 ரன்களை மட்டுமே எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

நியூஸிலாந்து தரப்பில் போல்ட், சவுதி, லாக்கி பெர்கூசன் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். இஷ் சோதி, சாண்ட்னர் தங்கள் 8 ஓவர்களில் 48 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

கிளென் பிலிப்ஸ் சாத்தி எடுக்க, ஆமைவேக இன்னிங்ஸை ஆடிய கேன் வில்லியம்சன்! - 180 ரன்களை இந்தப் பிட்சில் விரட்டி விட முடியும் தான். ஆனால் அதற்கு ஃபின் ஆலன் அதிரடி தொடக்கம் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவரையும் கான்வேயையும் கட்டிப்போட மொயின் அலியை கொண்டு வந்தார் பட்லர். அந்த நகர்வு இங்கிலாந்து அணிக்கு கைக்கொடுத்தது. ஃபின் ஆலனும், கான்வேயும் அவரை அடிக்க முடியவில்லை. கடைசியில் கிறிஸ் வோக்ஸ் பந்தை ஆஃப் திசையில் ஒதுங்கிக் கொண்டு ஸ்கூப் ஆடப்போய் டெவன் கான்வே சொற்ப ரன்களில் வெளியேறினார். ஃபின் ஆலன் தன் டைமிங்குக்குத் திணறினாலும் ஒரு பெரிய சிக்சரை அடித்து 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து சாம் கர்ரனின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு கேட்ச் ஆனார். நியூஸிலாந்து 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்து தடுமாறியது.

கிளென் பிலிப்ஸுக்கு லக் இருந்தது. அதனால்தான் மணிக்கு 155 கிமீ வேகத்தில் மார்க் உட் வீசிய பந்தை ஆட முற்பட்டு இன்சைடு எட்ஜில் பைன் லெக் திசையில் அது பவுண்டரி ஆகிய மாறியது. லெக் ஸ்டம்புக்கு மிக அருகில் சென்றது இந்த உலகக்கோப்பையின் அதிவேகப்பந்து. அதன் பிறகு மொயின் அலி, பிலிப்ஸின் கேட்சை விட்டார். பாவம் மொயின் அலி கேட்சை விட்டது ஆதில் ரஷீத் பந்தில். அதன் பிறகு ரஷீத்தை 2 மிகப்பெரிய சிக்சர்களை அடித்தார் கிளென் பிலிப்ஸ். மார்க் உட்டையும் விட்டு வைக்கவில்லை லெக் ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை லாங் ஆன் மேல் 85 மீ சிக்சர் விளாசினார். சட்டென 3 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி விட்டார் கிளென் பிலிப்ஸ்.

மொயின் அலி தவறவிட்ட அந்த கேட்ச் மிகவும் காஸ்ட்லி என்று இங்கிலாந்து கவலையடைந்திருந்த தருணத்தில் கேன் வில்லியம்சன் இன்னொரு முனையில் மந்தமாக ஆடினார். அவர் 40 பந்துகளில் 50-55 ரன்களை எடுத்திருந்தால் இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கும். அவர் 40 ரன்களை மட்டுமே எடுத்தார். அதில் 3 பவுண்டரிகளை மட்டுமே ஸ்கோர் செய்திருந்தார். இந்த இன்னிங்ஸ் எப்போது நல்ல இன்னிங்ஸ் ஆகுமெனில் கோலி போல் கடைசி வரை நின்று வெற்றி பெற்று கொடுத்தால்தான். ஆனால் 40 ரன்களில் அவர் ஸ்டோக்ஸ் பந்தை இறங்கி வந்து வெளுப்பதை விட்டுவிட்டு தேர்ட்மேனில் ஆடுகிறேன் என்று ரஷீத்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

கிளென் பிலிப்ஸ், நீஷம் கிரீசில் இருந்த போது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் 16-வது ஓவரை மார்க் உட் நெருப்பை கக்கும் தொனியில் வீசினார். ஜேம்ஸ் நீஷம் அதில் காலியானார். பட்லருக்கு கேட்சை விட்ட மிட்செல், 3 ரன்களில் ஜோர்டானிடம் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் ஆடிய ஷாட்டில் பவரே இல்லை. 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. கிளென் பிலிப்ஸ் மட்டும்தான் ஒரே ஹோப். அவரும் 36 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்கள் உடன் 62 ரன்கள் எடுத்து 18-வது ஓவரில் சாம் கர்ரன் பந்தை லாங் ஆனில் அடித்து ஜோர்டான் கேட்சுக்கு வெளியேற நியூசிலாந்து கதை முடிந்தது.

மொத்தத்தில் பட்லர், 8 மற்றும் 40 ரன்கள் எடுத்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டது. கேன் வில்லியம்சனின் மந்தமான இன்னிங்ஸ் காரணமாக நியூஸிலாந்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி இன்று திட்டமிட்டு ஆடியதும் அந்த அணியின் வெற்றிக்குப் பிரதான காரணம். சுருக்கமாக சொன்னால் இங்கிலாந்திடம் இருந்த தீவிரம் நியூசிலாந்திடம் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x