Published : 01 Nov 2022 06:39 AM
Last Updated : 01 Nov 2022 06:39 AM
பெர்த்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் பெர்த் நகரில் உள்ள கிரவுன் பெர்த் ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இங்கு விராட் கோலி தங்கியிருந்த ஓட்டல் அறையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
'கிங் கோலியின் ஓட்டல் அறை' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், கோலியின் தனிப்பட்ட உடமைகளான உடல் நலப்பொருட்கள், ஷூக்கள், இந்திய அணியின் சீருடைகளை உள்ளடக்கிய திறந்த நிலையில் இருந்த பெட்டி, தொப்பிகள் மற்றும் மேஜையின் மீது இருந்த இரு கண்ணாடி டம்ளர்கள் போன்றவற்றை காட்டியபடி ஒருவர் அறையைச் சுற்றி வலம் வருகிறார்.
வீடியோ எடுக்கப்பட்ட போது, ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அறைக்குள் இருப்பது போன்று தெரிகிறது. அநேகமாக அவர்கள் ஓட்டல் ஊழியர்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. விராட் கோலி அறையில் இல்லாதபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த கோலி அதிர்ச்சி அடைந்ததுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஓட்டல் அறை தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விராட் கோலி கூறியிருப்பதாவது:
தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைவதை நான் புரிந்துகொள்கிறேன். வீரர்களைச் சந்திக்க ரசிகர்கள் ஆர்வம் கொள்வதை நான் எப்போதும் வரவேற்றுள்ளேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ பயங்கரமானது மற்றும் இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் சித்தப்பிரமையாக உணர வைத்தது.
என்னுடைய ஓட்டல் அறையில் எனக்குத் தனியுரிமை இல்லையென்றால் எனக்கான இடத்தை எங்கு எதிர்பார்க்க முடியும்?. இதுபோன்ற வெறித்தனமான செயலை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்கிற்கான கருவியாக கருத வேண்டாம். இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
எல்லைக்கோடு எது?: விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இஸ்டாகிராம் பதிவில், “கடந்த காலங்களில் ரசிகர்கள் இரக்கம் காட்டாத சில சம்பவங்களை அனுபவித்திருக்கிறேன், ஆனால் இது மிகவும் மோசமான விஷயம். இது உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால் இதற்கான எல்லைக்கோடு எது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழியர்கள் பணி நீக்கம்; மன்னிப்பு கேட்டது நிர்வாகம்: கிரவுன் பெர்த் ஓட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ விருந்தினர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையே எங்களது பிரதான முன்னுரிமையாகும். தற்போது நடந்துள்ள சம்பவத்தால் நாங்கள் நம்ப முடியாத வகையில் ஏமாற்றம் அடைந்துள்ளோம். சம்பந்தப்பட்ட விருந்தினரிடம் நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
வீடியோ எடுத்த நபர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கிரவுன் பெர்த் கணக்கில் இருந்து அவர்கள் அகற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பதிவேற்றம் செய்த அசல் வீடியோ சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இந்திய கிரிக்கெட் அணி மற்றம் சர்வதேச கிரிக்கெட் அமைப்பிடமும் மன்னிப்பு கேட்டுள்ளோம். இதுதொடர்பான விசாரணையில் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT