Published : 31 Oct 2022 02:10 PM
Last Updated : 31 Oct 2022 02:10 PM

T20 WC அலசல் | டி20 கிரிக்கெட்டில் ‘கிரேட் பிளேயர்’ ஆக சூர்யகுமார் தன்னை உயர்த்திக் கொண்ட இன்னிங்ஸ்!

சூர்யகுமார் யாதவ்

பெர்த்தின் வரலாறு காணாத அதிவேகப் பிட்சில் நேற்று இந்திய அணியை அதன் ஷார்ட் பிட்ச் பலவீனத்தை வைத்து சுருட்டியது தென் ஆப்பிரிக்கா. இருந்தாலும் அடுத்த இன்னிங்ஸில் இந்திய ஸ்விங் பவுலிங்குக்கு அந்த அணி இரையாகி இருக்கும். ஆனால், டேவிட் மில்லர், மார்க்ரம் என இருவரும் அரைசதம் எடுக்க 134 ரன்கள் என்பது ஒன்றுமில்லாமல் போனது. நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தன் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் மூலம் டி20 கிரிக்கெட்டில் அவர்தான் கிரேட் பிளேயர் என்ற அடுத்தக் கட்டத்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டார் எனவும் சொல்லலாம்.

பொதுவாக சூரியகுமார் யாதவ் பேட்டிங் டெக்னிக்கிற்கு ஆஸ்திரேலியாவின் பவுன்ஸ் பிட்ச்கள் சரிபட்டு வராது என சில கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து சொல்லி வந்தனர். ஆனால் அதையெல்லாம் தூள் தூளாக அடித்து நொறுக்கிவிட்டார் சூர்யா. அதிவேக பிட்சில் அதை விட வேகமாக ரன்களை குவிக்க முடியும் என்று மற்ற இந்திய வீரர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் விளையாடினார். இத்தனைக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவர் இந்தத் தொடருக்கு முன்னர் ஆடியதில்லை.

இதுவரை இல்லாத அளவில் வேகமாகவும், பந்து மேலே எழுமி வரும் பிட்சில் சூர்யகுமார் யாதவ் சற்றும் தன் ஆட்ட பாணியை மாற்றாமல் ரன்களை அடித்துக் கொண்டே இருந்தார். இது உண்மையில் ஆச்சரியத்தை விடவும் பிரமிப்பையே ஏற்படுத்தியது. ஏன் இது அபாராமன பவுன்ஸ் பிட்ச் என்றால் விக்கெட் கீப்பர் மற்றும் முதல் ஸ்லிப் பீல்டர் போன்றவர்கள் 30 யார்டு வட்டத்துக்கு அருகில் நின்றனர் என்பதை பலரும் கவனிக்கத் தவறியிருக்கலாம். அதுவும் ரபாடா, இங்கிடி, பார்னெல், ஆன்ரிச் நார்க்யா போன்றோரை இந்தப் பிட்சில் உடல் காயங்கள் இல்லாமல் எதிர்கொள்வது மிக மிக கடினம். ஆனால், சூர்யகுமார் அனாயசமாக, இவர்களைக் கண்டு அஞ்சா நெஞ்சனாக அடித்து ஆடினாரே.

120 பந்துகளில் சூர்யகுமார் சந்தித்தது மூன்றில் ஒரு பங்கு. அதாவது 40 பந்துகள். அதில் 6 பவுண்டரிகள் 3 சிச்கர்களுடன் 68 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் மொத்த ஸ்கோரில் பாதிக்கும் மேல் ரன்களை அவர் மட்டும்தான் எடுத்திருக்கிறார். அதுவும் பவுலர்களின் வேகத்தை பயன்படுத்தியே ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட்டில், கள இடைவெளிகளை அற்புதமாகப் பயன்படுத்தி ஆடியது பிரமிப்பூட்டியது.

ரபாடாவை நேர் பவுண்டரி அடித்தாரே அந்த ஷாட்டை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழப்பு என்ற நிலையிலும் தன் அதிரடி பாணி ஆட்ட ஃபார்முலாவில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. நார்க்யா பந்தில் பெரிய சிக்சர் விளாசினார். மகராஜின் 12 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள் விளாசினார். இவரை வீழ்த்த தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் என்னென்னவோ செய்து பார்த்தனர். ஷார்ட் பிட்ச் பவுன்சர்களை தொடர்ந்து வீசினர். ஆனால் அவரை அசைக்க முடியவில்லை.

சூரியகுமார் நேற்று 19-வது ஓவரின் 5-வது பந்தில் பார்னெலிடம் புல் ஷாட் ஆடப்போய், மெதுவாக வீசப்பட்ட பந்தில் மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்காமல் மீதமுள்ள 7 பந்துகளில் ஒரு 4 பந்துகளையாவது சந்தித்திருந்தால், இந்திய அணிக்கு கூடுதலாக 10-12 ரன்கள் கிடைத்திருக்கும். நிச்சயம் அது இந்த பிட்சில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்திய அணி ஒருவேளை வெற்றி பெற்றாலும் பெற்றிருக்கலாம்.

பார்னெல், சூரியகுமாரின் விக்கெட்டை எடுத்துவிட்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டே ‘அப்பாடா! அவுட் ஆனாரே என நிம்மதி பெருமூச்சு விட்டார்! என்பதுபோல அவரது முகபாவனை இருந்தது. அந்த சமயத்திலும் சூர்யகுமாரின் விக்கெட் எத்தனை முக்கியம் என்பதை அது வெளிப்படுத்தியது.

இந்திய அணியில் முதலில் கே.எல்.ராகுலை உட்கார வைக்க வேண்டும், ரிஷப் பண்ட்டை அவருக்குப் பதிலாக எடுக்க வேண்டும், இன்னொரு வீரர் வெளியே அனுப்ப வேண்டிய தேவை உள்ளது. யாரெனில் தினேஷ் கார்த்திக். அவருக்கு கொடுத்த வாய்ப்புகள் போதும் என்றே தோன்றுகிறது.

‘அணி தோற்றது விராட் கோலி கேட்சை விட்டதால், ரோஹித் சர்மா மிக மோசமாக ரன் அவுட் வாய்ப்பை விட்டதால்’ என்றெல்லாம் காரணங்களைக் அடுக்க முடியும். இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் கடைசியில் ஆட்டமிழந்ததுதான் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்குக் காரணம் என்பது யோசித்துப் பார்த்தால் புரியும்.

இந்திய அணிக்கு இந்தத் தோல்வியினால் ஒன்றும் ஆபத்தில்லை. வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக போட்டிகள் உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் வெல்ல முடியும். வானிலையும் அடிலெய்ட் மைதானத்தில் நன்றாக உள்ளது. மெல்போர்ன் மைதானம் இந்த தருணம் வரை மழை அறிகுறி இல்லாமல் இருக்கிறது. இந்திய அணி இந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x