Published : 31 Oct 2022 06:10 AM
Last Updated : 31 Oct 2022 06:10 AM
பெர்த்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் குரூப்-2 பிரிவில் நேற்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்றஇந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 9 ரன்களில் வீழ்ந்தார். கேப்டன் ரோஹித் சர்மா15 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும்,தீபக் ஹூடா ரன் எடுக்காமலும், ஹர்திக்பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து சரிவுக்குள்ளானது இதில் 4 விக்கெட்களை லுங்கி நிகிடி கைப்பற்றி இந்திய அணியின் சரிவுக்குக் காரணமானார்.
ஆனால் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சூர்யகுமார் யாதவும் பொறுப்பாக விளையாடினர்.
தினேஷ் கார்த்திக் 6, அஸ்வின் 7 ரன்களில் வீழ்ந்தனர். 8-வது விக்கெட்டாக சூர்ய குமார்யாதவ் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் புவனேஷ்வர் குமார் 5 ரன்களிலும், அர்ஷ்தீப் சிங் 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிகிடி 4, வேயன் பார்னெல் 3, நார்ட்ஜே ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
134 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தனது முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார் அர்ஷ்தீப் சிங். குயின்டன் டி காக்கை ஒருரன்னிலும், ரிலி ரோசோவை ரன் எடுக்காமலும் வீழ்த்தினார் அர்ஷ்தீப். இதைத் தொடர்ந்து கேப்டன் தெம்பா பவுமாவை 10 ரன்களில் ஷமி சாய்த்தார். இதனால் அந்தஅணி 3 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் என்றநிலையில் இருந்தது. ஆனால் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்கிரம், டேவிட் மில்லர் இன்னிங்ஸை கட்டமைத்தனர். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் 4-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்க்கப்பட்டன.
அபாரமாக விளையாடிய மார்கிரம் 41 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 ரன்களில் வீழ்ந்தாலும் மில்லர் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. டேவிட்மில்லர் 59 ரன்களும், பார்னெல் 2 ரன்களும்எடுத்து களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக லுங்கி நிகிடி தேர்வு செய்யப்பட்டார்.
விளையாட்டு துளிகள்...
> உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பெறும் முதல் தோல்வியாகும் இது. கேட்ச் வாய்ப்புகள், ரன்-அவுட் வாய்ப்புகளைத் தவறவிட்டது, மோசமான ஃபீல்டிங், அஸ்வின் ஓவர்களில் தாராளமாக ரன் கொடுத்தது போன்ற காரணங்களால் தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.
> அதிக உலகக் கோப்பை டி20 போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். அவர் இதுவரை 36 டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
> தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கடந்த 8 டி20 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார்.
> டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் 1,000 ரன்கள் குவித்த 2வது வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார். விராட் கோலி மொத்தம் 1,001 ரன்களை கடந்துள்ளார். இலங்கை வீரர் மஹேளா ஜெயவர்த்தனே 31 ஆட்டங்களில் பங்கேற்று 1,016 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT