Published : 30 Oct 2022 08:53 AM
Last Updated : 30 Oct 2022 08:53 AM

T20 WC | பெர்த் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை சமாளிக்குமா இந்திய அணி?

இருநாட்டு அணி கேப்டன்கள் | கோப்புப்படம்

பெர்த்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமானது பலமான தென் ஆப்பிக்காவின் வேகப்பந்துவீச்சுக்கும், வலுவான இந்திய பேட்டிங் வரிசைக்கும் இடையிலான சிறந்த மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மோதிய முதல் ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியிருந்தது. இந்த வெற்றியால் 3 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ள முடியும். எனினும் இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. ஏனெனில் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் வேகம் மற்றும் பவுன்சர்களுக்கு சாதகமானது. இதனால் 145 கிலோ மீட்டருக்கு மேல் சீராக வீசும் காகிசோ ரபாடா,150 கிலோ மீட்டர் வேகத்தில் அனல் பறக்க விடும் அன்ரிச் நோர்கியா ஆகியோரை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு துறை இந்திய பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்கக்கூடும்.

டாப் ஆர்டரில் கே.எல்.ராகுலை தவிர ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்கள் தென் ஆப்பிரிக்காவின் வேகங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மட்டையை சுழற்றக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ் தீப் சிங் ஆகியோருடன் அஸ்வின் பலம் சேர்ப்பவராக உள்ளார். அக்சர் படேலுக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் யுவேந்திர சாஹல் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக், ரீலி ரோசோவ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தங்களது அதிரடியால் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். இதில் ரீலி ரோசோவ் தொடர்ச்சியாக இரு சதங்கள் விளாசி சிறந்த பார்மில் உள்ளார். கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு டி 20 தொடரில் 100 ரன்கள் விளாசிய ரீலி ரோசோவ், கடந்த 27-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். இவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இரு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக கூடுதலாக இரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் தப்ரைஸ் ஷம்சி நீக்கப்படக்கூடும். ஏனெனில் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஷம்சி அதிக ரன்களை தாரை வார்த்திருந்தார். ஷம்சிக்கு பதிலாக மார்கோ ஜேன்சன் அல்லது லுங்கி நிகிடி இடம் பெறக்கூடும்.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் பெர்த் மைதானம் பவுன்சர்களுக்கு நன்கு கைகொடுக்கும். இந்த ஆடுகளத்தின் சராசரி ஸ்கோர் 133. இங்கு கடைசியாக நடைபெற்ற 21 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x