Published : 29 Oct 2022 06:36 AM
Last Updated : 29 Oct 2022 06:36 AM
மெல்பர்ன்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மழை காரணமாக ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் 4 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள்இடையிலான ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. முன்னதாக இதே மைதானத்தில் அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்த ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனால் 4 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள 6 அணிகளுக்குமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த பிரிவில் நியூஸிலாந்து 2 ஆட்டங்களில் பங்கேற்று 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து, அயர்லாந்து, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதே பிரிவில் உள்ள இலங்கை 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திலும் உள்ளது. ஆப்கானிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த இரு ஆட்டங்களும் மழையால் ரத்தாகி இருந்தது.
இந்த டி 20 உலகக் கோப்பையில் மழையால் இதுவரை 4 ஆட்டங்கள் ரத்தாகி உள்ளது. இதில் 3 ஆட்டங்கள் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள அணிகள் இடையிலான ஆட்டங்களாகும். இதன் மூலம் இந்த பிரிவில் இருந்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் உருவாகி உள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கடினமாகி உள்ளது.
இந்த இரு அணிகளுமே தலா ஒரு தோல்வி, ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. ஆஸ்திரேலியா தனது எஞ்சிய ஆட்டங்களில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த இரு ஆட்டத்திலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றிபெற்றால் மட்டுமே அரை இறுதிக்குமுன்னேறுவதற்கான வாய்ப்பு சாத்தியப்படும். இதே நிலைமைதான் இங்கிலாந்து அணிக்கும். எனினும் தற்போதைக்கு அந்த அணிக்குரன் ரேட் பிரச்சினை இல்லை.
இங்கிலாந்து அணியானது தனது கடைசி இரு ஆட்டங்களில் நியூஸிலாந்து, இலங்கை அணிகளை சந்திக்கிறது. இதற்கிடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, இலங்கையை வீழ்த்தினால் 5 புள்ளிகளுடன் அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும். மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் மற்ற அணிகளுக்கு சிக்கல்தான்.
இன்றைய ஆட்டம்: நியூஸிலாந்து - இலங்கை
நேரம்: பிற்பகல் 1:30
இடம்: சிட்னி
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT