Published : 28 Oct 2022 06:56 PM
Last Updated : 28 Oct 2022 06:56 PM
ஷார்டர் ஃபார்மெட் கிரிக்கெட் கொஞ்சம் விந்தையானது. இந்த வகை ஃபார்மெட்டில் எதிர்பாராத முடிவுகளை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அது மாதிரியான ஒரு விந்தையைத்தான் கிரிக்கெட் உலகில் நிகழ்த்தி வருகிறது ஜிம்பாப்வே அணி. இது வெறும் பாகிஸ்தான் வெற்றியை மட்டுமே வைத்துச் சொல்வது அல்ல. அதற்கு முன்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் இதே அணிதான். வரும் நாட்களில் இன்னும் பல அணிகளை அப்செட் செய்ய உள்ளது ஜிம்பாப்வே.
வழக்கமாக கிரிக்கெட் உலகில் பொருளாதார ரீதியாக செழுமையான அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தும். வீரர்களுக்கான ஸ்பான்சர் தொடங்கி ஏராளமான சலுகைகள் எல்லாம் அந்த அணிகளுக்கு கிடைக்கும். ஆனால், ஜிம்பாப்வே மாதிரியான அணிக்கு அப்படி இல்லை.
சரியாக ஓராண்டுக்கு முன்னர் 2021, மே மாத வாக்கில் அந்த அணியின் வீரர் ரியான் பர்ல் ஒரு ட்வீட் செய்திருந்தார். அது உலக அளவில் கவனம் பெற்றது. மிகவும் உருக்கமான ட்வீட்டும் கூட. “எங்களுக்கு ஸ்பான்சர் கிடைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? அது நடந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் நாங்கள் எங்கள் ஷூவுக்கு ஒட்டுப் போட வேண்டி இருக்காது” என அவர் சொல்லி இருந்தார். அந்த அளவிற்கு கிழிந்த போன ஷூக்களை போட்டுக் கொண்டுதான் அந்த அணி கிரிக்கெட் விளையாடியது. அதற்கு பலரும் தங்கள் கருத்துகளை சொல்லி இருந்தனர். சிலர் நிதி ஆதாரம் இன்றி தவித்து வரும் ஜிம்பாப்வே அணிக்கு ஐசிசி உதவ வேண்டும் எனவும் சொல்லி இருந்தனர். அந்தச் சூழலில் தான் ‘இனி இந்த நிலை தொடராது’ என சொல்லி பூமா நிறுவனம் ட்வீட் செய்தது.
Time to put the glue away, I got you covered @ryanburl3 https://t.co/FUd7U0w3U7
— PUMA Cricket (@pumacricket) May 23, 2021
அதன் பிறகு மட்டும் இதுநாள் வரையில் மொத்தம் 32 டி20 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகளை பெற்றுள்ளது. அதேபோல 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த 5 வெற்றிகளில் ஒரு வெற்றி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் பெற்றிருந்தது அந்த அணி. அந்தப் போட்டி கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தான் அணியுடன் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் விளையாடும் போதெல்லாம் ஜிம்பாப்வே அணியை பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வறுத்தெடுத்து வந்துள்ளனர். அந்த அவமானங்கள் அனைத்தையும் கடந்தே டி20 உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெகுமானம் பெற்றுள்ளது ஜிம்பாப்வே.
பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 20-வது ஓவரின் 4, 5-வது பந்துகளில் தலா ஒரு விக்கெட்டைப் பறிகொடுத்த பாகிஸ்தான் 9 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...