Published : 28 Oct 2022 03:28 PM
Last Updated : 28 Oct 2022 03:28 PM

T20 WC | போலி மிஸ்டர் பீன் விவகாரம்: ஜிம்பாப்வே அதிபரின் ட்வீட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் ரியாக்‌ஷன்

பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே வெற்றி பெற்ற தருணம்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு பிறகு ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் டம்புட்ஸோ மனங்காக்வா, தங்கள் நாட்டு அணியை ட்வீட் மூலம் பாராட்டி இருந்தார். அதே நேரத்தில் பாகிஸ்தானை வம்புக்கு இழுத்திருந்தார். அதற்கு பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜிம்பாப்வேவுக்கும், ஆசிய கண்டத்தில் உள்ள பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாட்டிற்கு காரணம் என்ன என்பதை பார்ப்போம். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஜிம்பாப்வே பதம் பார்த்தது மட்டும்தான் காரணமா?

டி20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர்: இரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ததில் பாகிஸ்தான் 16 முறை வென்றுள்ளது. ஜிம்பாப்வே 2 போட்டிகளில் மட்டும் வென்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியும் அடங்கும்.

போலி மிஸ்டர் பீன் விவகாரம்: இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு முன்னர் சமூக வலைதளத்தில் ஜிம்பாப்வே நாட்டு ரசிகர்கள் போலி மிஸ்டர் பீன் குறித்த பதிவுகளை பகிர்ந்திருந்தனர். அதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. சுமார் இரண்டு நாட்கள் போலி மிஸ்டர் பீன் குறித்த பேச்சு இருநாட்டு தரப்பிலும் காரசாரமாக நடந்தது. போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றதும், அது தாறுமாறாக எகிறியது. இந்த நிலையில்தான் ஜிம்பாப்வே அதிபர் அது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ரசிகர் பகிர்ந்த அந்த ட்வீட்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்க்க அசப்பில் மிஸ்டர் பீன் போலவே தோற்றம் அளிக்கும் பாகிஸ்தான் நாட்டு காமெடி நடிகர் ஆசிப் முகமது தான் இந்த விவாகரத்திற்கு காரணம். அவர் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அவர்தான் அசல் மிஸ்டர் பீன் என எண்ணி அந்த நாட்டு மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இருந்தபோதும் ஒரு கட்டத்தில் அவர் போலி என்றும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரிந்து அதிருப்தி அடைந்தனர். மக்கள் ஏமாற்றப்பட்ட அந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை உலகக் கோப்பை அரங்கில் பழி தீர்ப்போம் என ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு மூலம் பற்றவைத்தார். அது காட்டுத் தீயாக பரவியது.

அதிபர் எமர்சன் டம்புட்ஸோ மனங்காக்வா எனன் சொன்னார்? - “என்னவொரு அற்புதமான வெற்றி! செவ்ரானுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை அசல் மிஸ்டர் பீனை அனுப்புங்கள்” என அவர் சொல்லி இருந்தார். இதில் செவ்ரான் என்பது ஜிம்பாப்வே அணியை குறிக்கும்.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ரிப்ளை: “எங்களிடம் அசல் மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அசலான கிரிக்கெட் விளையாடும் ஸ்பிரிட் உள்ளது. அதிபரே உங்கள் அணி சிறப்பாக விளையாடியது. வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

இந்த தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மோசமான தோல்விகளில் ஒன்றாக இருக்கலாம். பெர்த் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே முதலில் பேட் செய்து 130 ரன்களை எடுத்தது. அதை விரட்டிய பாகிஸ்தான் அணி 129 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x