Published : 28 Oct 2022 09:26 AM
Last Updated : 28 Oct 2022 09:26 AM

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பு வாய்ந்த நாள் இது - பிசிசிஐ அறிவிப்புக்கு மிதாலி வரவேற்பு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் ஆடவர்களுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. வீராங்கனைகளை பிசிசிஐ மதிப்பது இல்லை என்ற குற்றசாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் ஊதியத்தையும் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்து வந்தனர்.

இந்நிலையில் அந்த குற்றச்சாட்டுக்கு தற்போது பிசிசிஐ முடிவு கட்டியுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ-யின் புதிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின்னர் ஜெய் ஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக, பிசிசிஐ இன்று ஒப்பந்தம் செய்த கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஊதிய சமபங்கு கொள்கையை அமல்படுத்துகிறது. இதற்கான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். அதாவது இந்திய ஆடவர் அணிக்கு இணையாக வீராங்கனைகள் அணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்.

வீரர், வீராங்கனைகள் இடையே பாகுபாட்டைக் களைய பிசிசிஐ எடுத்துள்ள முதல் நடவடிக்கையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தின் புதிய சகாப்தத்துக்கு நாம் செல்லும்போது வீரர், வீராங்கனைகளுக்கான போட்டிக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும்.

இந்திய ஆடவர் அணி வீரர்களுக்கு வழங்கப்படும் போட்டிக் கட்டணமே வீராங்கனைகளுக்கு இனி வழங்கப்படும். டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டியில் பங்கேற்றால் ரூ.6 லட்சம், சர்வதேசடி20 போட்டியில் பங்கேற்றால் ரூ.3 லட்சம் என வீராங்கனைகளுக்கு இனி வழங்கப்படும். வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்க முடிவு செய்த கவுன்சிலுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு இந்திய வீரர், வீராங்கனைகள் பலத்த வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் கூறும்போது, “இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாள். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோருக்கு நன்றி" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x