Published : 27 Oct 2022 08:56 PM
Last Updated : 27 Oct 2022 08:56 PM
நடப்பு டி20 உலகக் கோப்பையில் தனது மகனும், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் விளையாடுவதை பார்க்க வான்வழியாக கடல் கடந்து, கண்டம் கடந்து பயணித்துள்ளார் கிருஷ்ண குமார். மகனின் ஆட்டத்தை பார்க்க பாசமுள்ள ஒரு தந்தை மேற்கொண்டுள்ள இந்த சுவாரஸ்ய பயணத்தின் பின்னணியை பார்ப்போம்.
பெரும்பாலும் சினிமா படங்களில் மட்டுமே கடல் கடந்து விருப்பமானவர்களை தேடிச் செல்லும் பயணம் எல்லாம் இருக்கும். ஆனால், அதை அப்படியே ரியல் லைஃபில் செய்து காட்டியுள்ளார் நம் டிகேவின் அன்புள்ள அப்பா. எப்படியும் அடுத்த சில நாட்களுக்கு அவர் ஆஸ்திரேலிய நாட்டில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கம்பேக் நாயகன் என போற்றப்படும் தினேஷ் கார்த்திக், விளையாடுவதோ சுமார் 66 அடிகள் கொண்ட ஆடுகளத்தில்தான். ஆனால் அதற்காக அவர் பயணித்து வந்துள்ளது பல்லாயிரம் அடிகள் தூரம். கிரிக்கெட்டுக்காக 12 வயதில் பெற்றோரை பிரிந்து குவைத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். சென்னையில் தனது திறனை நிரூபித்து 19 வயதில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதோ அவர் 37 வயதை கடந்தும் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டுள்ளார்.
ஆண்டுகள் கடந்தது தோனி வந்தார், சென்றார். ரிஷப் பந்த் என்ட்ரி ஆனார். ஆனால் டிகே தனக்கான இடத்தை தக்கவைத்த வண்ணம் உள்ளார். தனது வாய்ப்புக்காக அடுத்தவர்களை நம்பாமல், கடின உழைப்பை நம்பினார். இப்போது அதன் பலனை அறுவடை செய்து கொண்டுள்ளார். இந்த முறை அவர் ஃபினிஷர் ரோலை ஏற்றுள்ளார்.
“கார்த்திக் எப்போதும் யாரையும் இகழ்ந்து பேச மாட்டான். அவர் அனைவரையும் புகழ்ந்து தான் பேசுவான். கிரிக்கெட்டுக்காக நிறையவே தன்னை மாற்றிக் கொண்டான். அதற்காக அவனது கம்ஃபோர்ட் ஸோனை விட்டு வெளியில் வந்தான். சிறப்பு பயிற்சிக்காக பயிற்சியாளர்கள் இணைந்தனர். அவர்கள் ஆலோசனைப்படி பயிற்சி மேற்கொண்டான். தன்னை நிறைய வருத்திக் கொண்டான். அவனது இந்த மாற்றத்திற்கு காரணம் அபிஷேக் நாயர், பிரவீன் ஆம்ரே, பவர் ஹிட்டிங் கோச் ஆர்எக்ஸ் முரளி போன்றவர்கள் அடக்கம். இந்த கம்பேக் கொடுப்பதற்கு முன்னர் லேப்டாப்பை மியூட் செய்துவிட்டு வர்ணனையாளர் போல பேசி பழகியதையும் பார்த்துள்ளேன்.
இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை அவனது கடைசி தொடரா அல்லது இன்னும் மிச்சம் உள்ளதா என்பது எங்களுக்கு தெரியாது. 37 வயதில் அவன் விளையாடுவதை பார்ப்பதே எனக்கு அதிசயம்தான். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் அவன் விளையாடினால் அது நிச்சயம் போனஸாக எடுத்துக் கொள்ளப்படும். அதே நேரத்தில் நாம் கொஞ்சம் எதார்த்தமாகவும் யோசித்து பார்க்க வேண்டும். அவனது பயணம் இந்த உலகக் கோப்பைக்கு பின்னர் முடிவுக்கு வரலாம். அதனால் தான் நாங்கள் எல்லோரும் ஆஸ்திரேலியா புறப்பட்டு வந்துள்ளோம். அவன் ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவு தான்” என அவர் தெரிவித்துள்ளார். இருந்தும் அவர் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க தவறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT