Published : 02 Nov 2016 08:30 PM
Last Updated : 02 Nov 2016 08:30 PM
ஷார்ஜாவில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்த மே.இ.தீவுகளுக்குத் தேவை இன்னும் 39 ரன்கள்.
4-ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள், இன்னும் 39 ரன்கள் எடுத்தா அரிய டெஸ்ட் வெற்றியைச் சாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் முதல் இன்னிங்ஸ் சத நாயகன் மற்றும் தொடக்கத்தில் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 142 ரன்களை எடுத்த கிரெய்க் பிராத்வெய்ட் 44 ரன்களுடனும் விக்கெட் கீப்பர் ஷேன் டவ்ரிச் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி தன் 2-வது இன்னிங்சில் 208 ரன்களுக்குச் சுருண்டது. இதில் ஜேசன் ஹோல்டர் முதல் முறையாக டெஸ்ட் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் 17.3 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தேவேந்திர பிஷூ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் 153 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் வஹாப் ரியாஸ் (2/30) மற்றும் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா (3/30) ஆகியோரது பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு மேலும் சேதம் ஏற்படாமல் பிராத்வெய்ட், டவ்ரிச் இணை 47 ரன்களை சேர்த்து 4-ம் நாளை வெற்றி வாய்ப்புடன் முடித்துள்ளனர்.
பாகிஸ்தான் 2-ம் இன்னிங்ஸ் சரிவு காணத் தொடங்கியது உணவு இடைவேளைக்குப் பிறகு. முதலில் மொகமது நவாஸ் (19) பிஷூ பந்தில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4 ஓவர்களுக்குப் பிறகு பிஷூ பந்தை ஸ்வீப் செய்ய முயன்ற அசார் அலி 91 ரன்களில் அவுட் ஆனார். ஸ்வீப் ஷாட்டிற்கு தயாரான அவர் பந்து மிகவும் வெளியே பிட்ச் ஆனதால் ஷாட்டை மாற்றி ஆஃப் திசையில் ஆட முயல எட்ஜ் எடுத்து நேராக முதல் ஸ்லிப்பிற்கு கேட்ச் ஆனது.
இதன் பிறகு மொகமது ஆமிர் மிகவும் காமெடியாக ரன் அவுட் ஆனார். பிஷூ பந்தை லாங் ஆனில் தூக்கி அடித்தார் ஆமிர், பந்து சிக்ஸிற்குச் சென்றது, ஆனால் அங்கு ஸ்டூவர்ட் சேஸ் பந்தை அருமையாக எம்பி கேட்ச் பிடித்தார் ஆனால் எல்லையைக் கடந்து விடுவோம் என்று தெரிந்தவுடன் பந்தை உட்புறமாக தள்ளி விட்டார். இதற்கிடையில் சிக்ஸ்தான் போகப்போகிறது என்று தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் நிலையில் வஹாப் ரியாஸுடன் கிளவ் இடிக்கு நடந்து வந்தார் ஆமிர், ஆனால் பவுண்டரியில் சேஸ் அபாரமாக அதனை தடுத்து விட ஒரு ரன் எடுக்கலாம் என்று ஓடி வந்தார் கையிலிருந்து மட்டை கீழே விழுந்தது. சேஸ் பந்தை அருமையாக ரன்னர் முனைக்கு த்ரோ செய்ய டைவும் அடிக்காத ஆமிர் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
வஹாப் ரியாஸ் அடுத்தபடியாக ஹோல்டர் பந்தை லெக் திசையில் ஆட அதனை ஷார்ட் லெக்கில் மிக வேகமாக வந்த பந்தை ரிப்ளெக்ஸ் கேட்ச் பிடித்தார் ஜான்சன். சுல்பிகர் பாபர் ஒரு சிக்ஸ், ஒரு நான்குடன் 7 பந்தில் 15 ரன்கள் விளாசியதில் பாகிஸ்தான் 200 ரன்களைக் கடக்க யாசிர் ஷாவை ஹோல்டர் வீழ்த்தினார். இதனால் 208 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்.
வெற்றி பெற 153 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி முதலில் ஆமிர் பந்தில் ஜான்சனுக்கு மிஸ்பா விட்ட கேட்சுடன் தொடங்கியது. இவரது அடுத்த ஓவரில் இதே ஜான்சனுக்கு இம்முறை முதல் ஸ்லிப்பில் சமி அஸ்லாம் கேட்சை விட்டார், வெறுப்படைந்தர் ஆமிர்.
ஆனால் யாசிர் ஷா, ஜான்சனை தாழ்வான பந்தில் எல்.பி.செய்தார். டேரன் பிராவுக்கு அருமையாக 4 லெக் பிரேக்குகளை வீசிய யாசிர் ஷா, ஒரு பந்தை திருப்பாமல் நேராக வீச பிராவோ எட்ஜ் செய்தார். மர்லன் சாமுவேல்ஸ் அநேகமாக கடைசி டெஸ்ட் தொடரை ஆடுகிறார் என்றே கூற வேண்டும், மிக மோசமான ஷாட்டை ஆடி வெளியேறினார். ஜெர்மனின் பிளாக்வுட்டை, வஹாப் ரியாஸ் ரவுண்ட் த விக்கெட்டில் பவுல்டு செய்தார். ராஸ்டன் சேஸ், வஹாப் ரியாஸ் பந்தை நேராக மிட்விக்கெட் கையில் அடித்து வெளியேற 67/5 என்று ஆனது மே.இ.தீவுகள்.
அதன் பிறகு பிராத்வெய்ட், ஷேன் டவ்ரிச் மேலும் சேதமில்லாமல் 47 ரன்களைச் சேர்த்து 4-ம் நாள் ஆட்டத்தை முடித்தனர். நாளை மே.இ.தீவுகள் வெற்றி பெற்றால் 13 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு முதல் டெஸ்ட் வெற்றியை ருசிக்கும், கடைசியாக, தங்கள் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு இன்னொரு வெற்றி வாய்ப்பு கைகூடியுள்ளது. ஆனால் அவ்வளவு சுலபத்தில் பாகிஸ்தான் விட்டுவிடுமா என்பதில்தான் நாளைய சுவாரசியம் அடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT