Published : 10 Nov 2016 07:06 PM
Last Updated : 10 Nov 2016 07:06 PM
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.
கவுதம் கம்பீர் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தும், முரளி விஜய் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர், நாளை இவர்கள் பெரிய சவாலை எதிர்கொள்ள அடித்தளம் அமைத்துள்ளனர்.
இங்கிலாந்து இன்னிங்சில் 99 ரன்களுடன் தொடங்கிய மொயின் அலி சதம் எடுத்து பிறகு 117 ரன்களில் மொகமது ஷமியினால் கிட்டத்தட்ட ‘ஒர்க் அவுட்’ செய்யப்பட்டு எடுக்கப்பட்டார்.
லேசாக ரிவர்ஸ் ஸ்விங் ஆக, ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசிய ஷமி ஒரு சில பந்துகளை உள்ளே வருமா, வெளியே செல்லுமா என்ற சந்தேகத்தை மொயின் அலி மனதில் ஏற்படுமாறு வீசி கடைசியில் வெளியே பிட்ச் செய்து பெரிய அளவில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வர மொயின் ஆடாமல் விட்டுவிட முடிவெடுக்க ஸ்டம்ப் 4-5 அடி பறந்தது.
அஸ்வின் நீண்ட நேரத்திற்குப் பிறகே இந்தப் பிட்சில் என்ன ஸ்பீடில் வீசுவது என்பதை அறிந்தார், திடீரென அவர் மணிக்கு 77-80 கிமீ வேகத்தில் பந்தை வீச அது நன்றாகத் திரும்பத் தொடங்கியது, ஓரிருமுறை ஸ்டோக்ஸ் பீட்டன் ஆனார், கொஞ்சம் ஆட்டமிழக்கும் பயம் அவரைத் தொற்றியது, ஆனால் அவர் புன்னகையுடன் அந்த பயங்களை தட்டிக் கழித்தார். கவுதம் கம்பீரின் பீல்டிங் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது, மிஸ் பீல்ட் என்பதோடு, மெதுவாக நகர்வதால் ஒவ்வொரு முறை அவரிடம் பந்து செல்லும் போதும் 2-வது ரன் உண்டு என்ற நம்பிக்கையை பேட்ஸ்மென்கள் பெற்றனர்.
ஸ்டோக்ஸ் சதம் அடிப்பதற்கு முன்பாக, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இரண்டு கேட்ச்களை நழுவ விட்டார், இரண்டுமே உமேஷ் யாதவ் பந்தில், அவர் 112 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது, அவரது பந்து வீச்சை பிரதிபலிப்பதாகாது, அருமையாக வீசினார், பீட் செய்தார், ஸ்டோக்ஸ் எட்ஜைப் பிடித்தார், ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் இருமுறை எட்ஜை சஹா தவற விட்டார், காரணம் அவரது சோம்பேறித்தனமான நகர்தல், காரணம், கோலி அண்ட் கம்பெனிக்கு எதிரணியினர் 400 ரன்கள் பக்கம் அடிப்பது புதிது, குறிப்பாக இந்திய பிட்ச்களில், இதனால் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டது. உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்க வேண்டும் என்றார் இயன் போத்தம்.
ஸ்டோக்ஸ் இதனைப் பயன்படுத்தி அஸ்வினையும் அமித் மிஸ்ராவையும் தாக்கி ஆடினார், ஜடேஜா வீசிய முதல் ஓவரில் 11 ரன்களை விளாசினார், விராட் கோலி ஜடேஜாவை மிகவும் தாமதமாகக் கொண்டு வந்தார். அமித் மிஸ்ரா உண்மையில் தாக்கமற்ற ஒரு பவுலராகவே இருந்தார். மிகவும் மெதுவாக வீசினார், இந்த பிட்ச்களில் எந்த வேகத்தில் பந்தை வீச வேண்டும் என்பதில் அவருக்கு நிறைய தடுமாற்றம் இருந்தது, இதனால் சாத்து வாங்கினார். பேர்ஸ்டோ அவரை வெகு சுலபமாகக் கையாண்டார், ஒரு முறை இறங்கி வந்து லாங் ஆஃபில் சிக்ஸ் விளாசினார். ஜானி பேர்ஸ்டோவை 46 ரன்களில் வீழ்த்தியது அதிர்ஷ்டம்தான், ஏனெனில் இந்த ஆண்டில் அதிக ரன்களை எடுத்த விக்கெட் கீப்பராவார் அவர். இந்த ஆண்டு அவரது சராசரி 65 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 46 ரன்களில் மொகமது ஷமி வீசிய வைடு பந்தை ஸ்லாஷ் செய்து சஹாவிடம் ஆட்டமிழந்தார். 57 பந்துகளில் அவர் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 46 ரன்களை விரைவில் எடுத்தார், இருவரும் இணைந்து 99 ரன்களை 20 ஒவர்களில் சேர்த்தனர்.
பேர்ஸ்டோ ஆட்டமிழந்தவுடன் ஜடேஜா, கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத்தை பெவிலியன் அனுப்பினார். ஸ்டோக்ஸிற்கு அதிர்ஷ்டம் இருந்தது என்பதை விட கோலியின் சந்தேகத்திற்கிடமான கள வியூகத்தினால் சரியாக தூக்கி அடிக்கப்படாத ஷாட்கள் பீல்டர்களுக்கு இடையில் விழுந்தது, சதம் அடித்த பிறகு ஒருமுறை ஸ்டோக்ஸ் லாங் ஆஃபில் தூக்கி அடிக்க அது மிஸ் ஹிட் ஆனது, ஆவலாதியான கோலி பின்னால் சென்று பிடிக்கிறேன் பேர்வழி என்று கீழே விட்டார், அது முரளி விஜய்யின் கேட்ச். ஒரு முறை பவுண்டரியில் கேட்ச் பிடிக்கப்பட்டது, ஆனால் எல்லையைக் கடந்து விட்டார் பீல்டர், சிக்ஸ் ஆனது.
அன்சாரி என்ற வீரரை 83 பந்துகள் விளையாட இந்திய அணி அனுமதித்ததால் அவர் 32 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் கடைசியாக ஆட்டமிழந்தார், பென் ஸ்டோக்ஸ் முன்னதாக 235 பந்துகளைச் சந்தித்து 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 128 ரன்களை எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் ஒரு வழியாக சஹா கேட்ச் பிடிக்க அவுட் ஆனார்.
இங்கிலாந்து 160 ஓவர்கள் வரை ஆடி 537 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தொடக்க வீரர்கள் உறுதியான உத்தியுடன் ஆடியதால் இங்கிலாந்து 5 பவுலர்களை பயன் படுத்தியும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை, ஆனாலும் நாளை இந்தியாவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் நாளாக நாளை அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT